இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினை உலக மக்களோடு பகிர்ந்து கொள்வோம்!

உலக மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். இன்பமும் துன்பமும் இனைந்ததே மனித வாழ்க்கை என்பதனை உணர்த்தும் வகையிலே நம் முன்னோர்கள் வெல்லமும் வேப்பிலையை மும் சேர்த்து உண்ணத் தந்து புத்தாண்டினை வரவேற்றார்கள். அதில் நோய் தடுப்பு மருத்துவமும் உள்ளீடாக இருந்தது. பல்வேறு நோய் தொற்றுகளுக்கும் அது மருந்தானது.

அது இப்பொழுது வந்து நம்மை நினைவு படுத்தும் வகையில் கொரோனா என்ற தொற்று வந்து மிரட்டுகிறது. எப்பொழுதும் இல்லாத வகையில் பன்னாட்டு மக்களை எல்லாம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரானா தொற்று நீங்கி, நலம் காணும் நல் வாய்ப்பினை நல்கும் ஆண்டாக இது அமைய வேண்டும் என வேண்டுகிறோம்.

உலகம் இப்பொழுது பெரும் துன்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளது. அறிவியலும் மருந்தியலும் உயர்ந்து நிற்கும் இக்காலத்தில் கொள்ளை நோய் கொரானோ என்ற தொற்று பரவி மக்களை அமைதியற்று செய்து, ஒன்று சேரவிடாமலும் செய்துவிட்டது. அதனால் பல நாடுகள் துன்பமும் துயருமாக இருப்பதும் மக்கள் அலைவதும் என்ற கெடுநிலை மாற வேண்டும். பல்வேறு உலக நாட்டு அரசுகளும் அதனை ஒழிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளும் பயனுற அமையவும் மக்கள் மகிழ்வடையவும் வேண்டும் என்பதே இப்புத்தாண்டு நாளில் நாம் விழைவது.

ஒருவரையொருவர் நெருங்கி நிற்கவும் தொட்டுப் பேசவும் அஞ்சும் அளவிற்கு நிலைமை கடுமையாகி இருக்கிறது. இந்நிலையிலும் காலச் சூழ்நிலையிலும் தங்களின் பணியினை செவ்வனே செய்யும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் துப்புரவு பணியாளர்களையும் காவல் துறையினரையும் பாராட்டுகிறோம்.

இந்நோய் கடுமை விரைவாக நீங்கி உலக மக்கள் எல்லோரும் அமைதியுற்று மீண்டும் நல் வாழ்வு பெற சித்திரையில் பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு.. இளவேனிற் கால மகிழ்வாக அமையட்டும். அதே போன்று பல்வேறு நாடுகளிலும் பரவி வாழும் எம் தமிழினம் கடந்த காலங்களில் தவற விட்டுவிட்ட பலவற்றையும் திரும்பப் பெற்று- வளம் பெற்று- நலம் பெற்று வாழவும் வாழ்த்துகிறேன். வணக்கம்.

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

தமிழ் நாட்டில் உள்ள திருக்கோயில்களில் வழிபாடும் குட முழுக்குகளும் தமிழிலிலேயே நடத்த வேண்டும்!

சோழ மண்டலம் தஞ்சாவூரில் இருக்கும் பெருவுடையார் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இதனை தமிழ் நாட்டு மக்கள் சார்பில் பல்வேறு கட்சித் தலைவர்களும் தமிழ் அமைப்பினரும் தமிழக அரசிற்கு முன்மொழிவாக கோரிக்கை வைக்க வேண்டும்.

தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். திருக்கோயில்களில் தமிழில் வழிபட்டு நடத்தப்பட வேண்டும் என்பனவெல்லாம் கேடானதும் அல்ல. புதிதாக அங்கு இடம் கேட்டு அலைவதும் அல்ல. தமிழே இசை மொழியாக இருந்த.. இருக்கும் மொழி. தமிழே வழிபாட்டு மொழி. தமிழே எல்லா கடவுளுக்கும் தெரிந்த தேவமொழி.

தமிழே இறைவனை கண்டு தெளிந்து உரைத்த மொழி. தேவாரம் திருவாசகம்.. நாலாயிர திவ்விய பிரபந்தம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் என எத்தனையோ.. காளி, மாரி யென கன்னியாகுமரியாகி திருக்கோயிலின் உள்ளும் புறமுமாய் இருந்த மொழி தமிழ்.

இயற்கையை இறைவனாக பாடி வழிபட்டனர் தமிழர்.முன்னோர்களையும் தெய்வங்களாக்கினர். அதனடிப்படையில் கட்டப்பட்டதே நம் திருக்கோயில்களும் கடவுளர்களும் அவர்களுக்கு பெயர் வைப்புகளும் வாழ்த்து பாடிய தேன் தமிழ் இசையும் முனிவர்களும் சித்தர்களும் இறை நெறியாளர் பெருமக்களும்.

அதனை எல்லாம் மாற்றுவது போலவே நம் திருக்கோயிலில் உறையும் இறைவரின் பெயரையும் மாற்றி சமக்கிருதத்தில் இன்னொரு பெயர் வைத்து அழைப்பதையும் தமிழக அரசு நீக்கிட வேண்டும்.

இப்பொழுது தமிழ் நாட்டில் ஆங்கிலம் இருப்பதைப் போன்று ஒரு காலத்தில் சமக்கிருதம் என்பதும் இந்திய மண்ணில் மக்களை ஆக்கிரமித்து இருந்தது. அதனை தூக்கி சுமந்து வந்தவர்களாலேயே தமிழ் மண்ணில் தமிழ் வழிபாட்டு முறைகள் வெளியேற்றப்பட்டன.

இனிமேல் அவற்றை மாற்றும் விதமாகவும் தமிழகத்தின் திருக்கோயில்களில் பழமையை பேணும் வகையிலும் சில சீர்திருத்தங்களை யாவது தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் நடைபெறவுள்ள திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்திட வேண்டும்.

சாதிகளை பாராமல் ஆகம முறை தெரிந்தவர்களை அர்ச்சகர்களாக அமர்த்த வேண்டும்.

காசு கொடுத்து கடவுளை காண விழையும் தவறான முறைகளை ஒழித்து மக்கள் ஏற்றத்தாழ்வின்றி வணங்கிச் செல்ல வழி செய்ய வேண்டும்.

இதற்காக பல ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே திருவொற்றியூரார் திருக்கோயில் என பழனி முருகன் கோயில் வரை அது பற்றிய அறிவுறுத்தல்.. உண்ணாநிலை போராட்டம் என நடத்திய தன்னுரிமை இயக்கத்தின் சார்பிலும் கோரிக்கை வைக்கிறோம். தமிழ்நாட்டு அரசு தமிழை முன்னெடுக்க வேண்டுகிறோம்..

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

காவல்துறையின் செயல்பாடுகளை தமிழில் பின்பற்றும் அறிவிப்பிற்கு பாராட்டு

தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை தமிழில் நடத்த ஆணையிட்டுள்ள காவல் துறையின் தலைமை இயக்குநர் ஆவர்களை பாராட்டுகிறது தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

காவல்துறையின் நடவடிக்கைகளை தமிழில் எழுத வேண்டும்.. நடத்த வேண்டும் என தமிழ் நாட்டரசின் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் அறிவித்துள்ளதை பெரிதும் வரவேற்கிறது தமிழ்த் தன்னுரிமை இயக்கம். இது தமிழ்த் தன்னுரிமை இயக்கத்திற்கு கிடைடைத்த வெற்றியுமாகும்.

தமிழ் நாட்டின் வரலாற்றில் தமிழ் மொழிக்கான மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்கியதும் அதற்குத் தமிழ் நாடென பெயர் சூட்டி மகிழ்ந்ததும் போலவே தமிழ் நாட்டிற்கான ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்டதும் ஆகும். அதன் வழியாக தமிழ் நாட்டு அரசின் பணிகள் யாவும் ஆங்கிலம் இருந்த இடத்தில் எல்லாம் அதனை விடுத்து தமிழாக மாற்றப் பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தமிழாக இருந்த இடங்களில் கூட வலிந்து தமிழை நீக்கி ஆங்கிலத்தை வைத்த கொடுமைகளும் அரங்கேறியதால்.. அதனை மாற்றக்கோரி தமிழ்த் தன்னுரிமை இயக்கம் பல போராட்டங்களை நடத்தியது.

அதன் பின்னாலும் தமிழ்மொழிக்கான விடியல் ஏற்படாததால்.. அதனை வலியுறுத்தி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக காவல் துறை துணைத் தலைவராக இருந்து தற்போதைய தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு பிரேம்குமார் அவர்களை தமிழ் அறிஞர்கள் தமிழ் இயக்கத் தோழர்கள் என நூற்றிற்கும் மேற்சென்று கோரிக்கை அளித்தோம். அதுபோலவே சென்னை மாநகராட்சி ‌‌ஆணையர் அவர்களையும் சந்தித்து தமிழக அரசின் வண்டி வாகனஙாகளில் இருக்கும் ஆங்கிலத்தை நீக்கி தமிழில் எழுதவும் தமிழில் பதிவு எண்களை ஏழுதவும் கோரிக்கை வைத்தோம்.

அப்பொழுதெல்லாம் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் இப்பொழுது காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள திரு. பிரேம்குமார் அவர்களால் நிறைவேற்றப்பட உள்ளது நமக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது.

அதனால் அவருக்கும் அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர் பக்கம் நிற்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் பாராட்டினை தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே வேளையில் பிற துறைகளிலும்‌ அதுபோன்ற செயல்பாடுகளை செய்யவும் தமிழ் நாடு முழுவதும் பரவி கிடக்கும் ஆங்கில விளம்பரங்களை நீக்கி தமிழ்ப்படுத்தி தமிழ்நாடாக செய்யவும் வேண்டும் என வேண்டி கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் அடையாளம் தமிழே! என்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டு சிறப்படையவும் வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
வணக்கம்.

இப்படிக்கு
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

தமிழ்த் தன்னுரிமை இயக்கம்
47 நர்மதா தெரு
பழனியப்பா நகர்,
சென்னை600087.
தொலைபேசி தொடர்பு: 9940546671

பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி

திராவிடம் தமிழரை காத்ததா? அழித்ததா?

லகின் மூத்த மொழி அழுகிறது. தன்னை ஏற்பாரின்றி தவிக்கிறது. தான் ஆளும் இடமிழந்து நிற்கிறது. தன்னைக் காப்பாற்ற யார் வந்து துணை புரிவார்கள் என ஏங்குகிறது. தமிழே அப்படி அழுதால்.. அதன் பிள்ளைகளான தமிழர் நாம் மட்டும் எப்படி உயர்வில் இருக்க முடியும்? உயர் இடங்களில் இல்லாமல் தமிழர் நாமும் அப்படியே. நாமும் வந்த பலரிடம் எல்லா செல்வ வளங்களையும் இழந்து நிற்கிறோம். காரணம் திராவிடம்.

திராவிடம் வந்ததால் அதன் நிழலானது தமிழ் நிலம். ஒன்றின் நிழலில் இன்னொன்று வளராது என்பது மெய்ப்பாடு. எந்த விதையாவது வேறு ஒரு மரத்தின் அடியில் முளைத்து எழுந்து வளருமா? எந்த செடியாவது வளர்ந்து எழுமா? மரமாகுமா? பயிர் விளைந்து கதிர் விடுமா? விடவே விடாது. எதுவும் வளர்த்திடவும் மரம் விடாது?!

அது போல தமிழரல்லாத திராவிடம் வேர் விட்ட பின்பு இப்பொழுது் எங்கெங்கும் திராவிட பேச்சு. ஆரிய எதிர்ப்பும் கூட அவர்களின் வளர்ச்சிக்கு தடையான போது எழுந்ததே. அது அதற்காகவே வாழுகிறது. அதுவாகவே இருக்கிறது. திராவிடருக்கு புகழ் முழக்கம், திராவிடருக்கு சிலைகள் வைப்பு, வழிபாடுகள் என்பதே அவர்களுக்கு இனிக்கிறது. அவர்களே தெய்வத்தை மிஞ்சிய தெய்வமாகிப் போனார்கள். தமிழ்நாட்டின் முத்திரை எதுவென கேளுங்கள். நம் பிள்ளைகளுக்கு தெரியாது. ஏன் பெரியவர்களையே கேளுங்கள். அவர்களுக்கு ஆட்சியில் இருப்பவர்களே முத்திரை. அவர்களின் பெயரை சொன்னால் போதும் வேண்டியது கைக்கூடி விடும். அதுவே திராவிடத்தின் மெய்ஞான அறிவு. அவர்கள் சொல்லி விட்டால் சாதியும் ஏற்றத்தாழ்வுகளும் ஒழிந்ததாக பொருள். அவர்களின் நினைப்பிற்கு ஆடுவதே தமிழர் ஒழுக்கமானது?!

அவர்கள் சொல்லியதை கேட்டு சாதிக்கு சாதி வேற்றுமை எண்ணங்கள். இப்பொழுது தமிழினம் ஒன்றுமில்லாத இனம் என்பது போல் தவிக்க விடப்பட்டது. தமிழரின் வழிபாடு, பழக்க வழக்கங்கள் எல்லாம் தூரத்தில் இருந்து யாரோ கொண்டு வந்து போட்ட பிச்சை என்பது போலானது. நமது முதல், இடை, கடைச் சங்ககால வரலாறுகள் திராவிடர்களின் தற்புகழ்ச்சியின் பின்னால் நின்று தத்தளிக்கின்றன. தமிழர்கள் நாம் என்று ஏங்குகிறது தமிழர் வரலாற்று ண்மைகள்.

இப்பொழுது நம் தமிழினத் தோன்றல்களுக்கு திராவிடர் மட்டும் வராமல் போயிருந்தால் தமிழர் நாம் தன்மானம் இழந்தவர்களாக ஆகிப் போயிருப்போம், என தங்களின் இருப்புகளை பறித்தவர்களிடம் நின்று கொண்டே புலம்புகிறோம்.
திராவிடர் எழுந்த பின்னால் இந்தியே ஏனிங்கு வந்தது என்ற கேள்வி உண்டா?

ஆங்கிலம் அறிவு மொழி என்ற பேச்சும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்ததுண்டா?

திருக்கோயில்கள் இவர்களின் வருகைக்கு முன் தமிழ் இல்லாமல் பாடியதுண்டா?

கேள்விகள் நீண்டு கொண்டே போகும். இவர்களின் வரவாலே தமிழரின் நிலம் போனது. மொழி போனது. தமிழரென்ற பெயர் போனது. தென்னிந்தியாவின் அரசி தமிழ்! என்ற புகழ் போனது. தெள்ளு தமிழரின் ஆட்சி அரசியல் போனது.

இப்பொழுதும் இனி இருப்பதும் போகாமல் இருக்கும் தமிழையும் தமிழரின மானத்தையும் காக்க நாம் பிறர் நிழலை போர்த்தி நிற்பதை விடுவோம். தன்னொளி பாய்ச்சி எழுவோம். தமிழர் தலை நிமிர்வோம்!

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

தமிழ்நாட்டிற்காகவே மேகதாதுவில் அணை கட்டுகிறதாம் கர்நாடக அரசு?!

என்ன ஒரு பாசம் கர்நாடக அரசிற்கும் கன்னடர்களுக்கும். அப்படியே பொங்கிப் பாய்கிறது காவிரியாக அன்பும் பற்றும். கேரளாக்காரர்கள் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு தனியாக புதிதாக வேறு அணை கட்டித் தருகிறோம் என்பதும் தமிழர் மேல் உள்ள தீராத பற்றினால் தானே?!. நாம் அவற்றை எல்லாம் நம்பியே ஆக வேண்டும்?! இல்லாமல் போனால் தமிழருக்கு பகுத்தறிவே இல்லாமல் போய்விடும். நம்புங்கள் தமிழர்களே! நம்புங்கள்.
ஏற்கெனவே இருந்த காவிரி நீர் தமிழகத்தை எட்டி பார்க்காமல் செய்த அதே கர்நாடகம் எது எதையோ சொல்லி தமிழக முதலமைச்சருக்கே நேராக கடிதம் எழுதுகிறது. என்ன ஒரு தைரியத்தை தமிழகத்தை ஆண்ட ஆளுகின்ற முதலமைச்சர்கள் தந்திருக்கிறார்கள் அவர்களுக்கு.

காவிரி நீரை பருக வேண்டும் என்றால் தமிழர்கள் கர்நாடகத்திற்கு வரவேண்டும்.. என்ற தேவராச அரசுக்கு கூட்டணி அமைத்தவர்கள் அல்லவா நம்ம முதலமைச்சர்கள்.
கடலில் போய் எவ்வளவு நீர் கலந்தாலும் ஒரு பொட்டு தண்ணீரும் தமிழ் நாட்டிற்கு தர மாட்டோம் என ஒற்றுமை இந்தியாவை பேசிய கேரள நீர் பாசன துறை அமைச்சராக இருந்த பாலகிருட்டிணபிள்ளையை நாம் மறந்து தானே போனோம்.

தமிழ்நாட்டில் தமிழரெல்லாம் ரசிகர் மன்ற அரசியலில் பெரும் பதவிகளை எல்லாம் பெறும் பாக்கியம் பெற்றவர்களான பின்பு எல்லாம் நடிப்பும் வேடமுமாகிப் போனது.
இனிமேல் ஆறாவது? ஏரியாவது.. அது எல்லாம் தமிழ் நாட்டிற்கு எதற்கு? இதற்கு முன் கன்னடர்கள் விட்ட தணாணீரையே தமிழ்நாடு அரசு தேக்கி வைத்துக் கொள்ள வில்லையாமே.. என்ன அக்கரை பாருங்கள் கன்னடத்தவருக்கு!
இங்கே அரசியலா நடக்குது? எல்லாம் பொய் புகழ்ச்சி.
ஆங்கிலேயன் அணைகளை கட்டிய போது வைத்த சட்டத்தை தூக்கி வாரி குப்பையில் போட்டவர்கள். எத்தனை நீதிமன்ற நடுவர் மன்ற ஆணைகளை தீர்ப்புகளை கண்ணெடுத்தும் பார்க்காதவர்கள் நமக்காக அணை கட்டி நீரைத் தேக்கி தமிழர் வீடுகளுக்கும் கொண்டு வந்து கொடுக்கப் போறாங்களாம்?!
அப்போ நமக்கு எதுக்கு தனியா ஒரு மாநில அரசு? அதனால தான் அவர்களே நம்ம தமிழ் நாட்டு பாராளுமன்ற உரிப்பினர்களை நேரில் சந்தித்து பேச ஒரு கர்நாடக அமைச்சரே போயிருக்காரு தில்லிக்கு.

இனிமேல் நம்ம வாழ்க்கையை நமக்கு உதவாத நடுநிலை என்ன என்பதே தெரியாத நடுவணரசும் தமிழ்நாட்டு வளமை காக்க எண்ணாத தலைவர்களம் தமிழ்நாட்டில் பெருகி வழியும் வரை நமக்கு கவலை எதுவும் வரப் போவதில்லை.
அப்படியே நமக்கு காவிரியும் முல்லைப் பெரியாறும். கூடவே நம் உரிமை எண்ணங்களும். இருக்கும் எதையும் காக்கத் தெரியாத அரசும் அரசியலும் மக்களுக்கு தொல்லையே.. இவர்களிடம் மண்டியிட்டு கிடக்கும் மக்களை பற்றி சொல்லவே தேவையில்லை. கவலையே இல்லாதவர்களாக ஆக்கியவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
வணக்கம்.

பாவலர் மு. இராமச்சந்திரன்
தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

எல்லாம் வேறுவேறு. இதை புரிந்து கொள்ள வில்லை மோடி

உலகில் எத்தனையோ உள்ளன. அவை அத்தனையும் ஒன்றிற்குள் அடங்கிவிடாது. ஆனால், நம் நாட்டு அரசியலாளர்கள் அவை எல்லாவற்றையும் தனக்கு கீழே வைத்து அடக்கி ஆண்டு விட வேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள். அதனால் இருந்ததும் இழந்து போய் நிற்கிறார்கள். அவர்கள் ஆட்சியை இழந்தால் மக்களுக்கு என்ன?.. மதிப்பிழந்து போனால் என்ன?! என யாரும் சும்மா இருந்து விட்டு முடியாது. அவர்களின் இழப்பெல்லாம் மக்களின் தலைமேல் தானே விழுகிறது. நல்லவர்கள் வல்லவர்கள் ஆண்டால் நன்மையும் அறியாமையில் இருப்போர் ஆண்டால் அவர் பிழையும் நம்மையும் ஆட்படுத்தி விடுகிறது. அப்படியோர் வருகையானார் பாரதிய சனதா கட்சி ஆட்சி தலைமையமைச்சர் திரு மோடி அவர்கள்.

ஆர்ப்பாட்டமாக எழுந்தவர் அடக்கமின்றி நடந்து கொண்டார். காங்கிரசு தன் கூட்டாளி கட்சிகளோடு அடிய தப்பாட்டங்களால் ஊழல் முறைகேடுகளால் மக்களிடம் பெற்ற கோபம், வாக்காகி பாசகவின் பெட்டியில் விழ வென்றவரானார் மோடி. அதே நிலையில் காங்கிரசும் இப்பொழுது சில சட்டமன்றத் தேர்தல்களை தன் வயப்படுத்தி உள்ளது. பொதுவாகவே நம் நாட்டு அரசியலும் தேர்தலும் ஆளுங்கட்சிகள் செய்யும் கோமாளிந்தன செயல்களே எதிர் கட்சிகளின் தோளில் வெற்றி மாலையாக விழுகின்றன. அதனால் அவையும் பொறுப்பான எதிர்க்கட்சிக்கு அளித்த சிறப்பாக அமைவதில்லை.
அவர் செய்த கொடுமையை தாங்காத மக்கள் எதிராக நிற்போரை அழைத்து அரியனை கொடுப்பதும் இன்னொரு தவறை கூசாமல் வரவேற்பதாகும்.

அதே நிலைதானே தமிழ் நாட்டிலும். தமிழருக்கு உதவாது என பகைத்து காங்கிரசை ஒழித்தோம். திராவிடத்நிற்கு இடமளிந்தோம். அதன் பின் அவர்களோ ஆளவும் தமிழ் நிலத்தை காய வைத்து அவர்களே வாழவும் ஒருவர் மேல் ஒருவரென பழி போட்டு பேசி அவர்களின் வாய்ச் சண்டையில் வழிமாறி போனது தமிழகம். அவர்களின் கீழினும் கீழான செயல்களால் கீழாகி வனப்பிழந்து, வாழ்நிலை களை இழந்து, வேலை வாய்ப்புகளை வட நாட்டுக்காரர்களிடம் இழந்து, பொருளிழந்து, புகழ் இழந்து நிற்கிறது.

ஆட்சிக்கு வந்ததும் பணமதிப்பு இழப்பில் தொடங்கிய மோடியின் வீழ்ச்சியால் நாடே நசிந்து போனது. தொடர்ந்து ஒரே வரி, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே தொழில், ஒரே மதம், ஒரே நிறம்… என ஒரே மாநிலத்தவராக குசராத்திகளாக சிலை வைப்பதும் மாண்டோர்களின் புகழ் பேசுவதும் தூய்மை இந்தியா என இந்தியாவையே துடைத்ததை மக்கள் அனுபவிப்பதன் விளைவை நடந்த தேர்தல்கள் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களும் எதிரொலிக்கவே செய்யும்.

ஒரே ஒரு சனநாயகக் தன்மையையும் அவர் மதித்ததாக தெரியவில்லை. எந்த ஒரு முடிவையும் பாராளுமன்ற மன்றத்தின் உள் நின்று எடுக்கவில்லை. பாராளுமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை. வானில் பறப்பதும் வெளி நாட்டில் குடி இருப்பதுமா தலைமை அமைச்சரின் வேலை? யாராலும் கேட்டுவிட முடியாத உயரத்தில் தூரத்தில் ஆட்சியாளர்கள்.

இது போன்ற தேர்தல் முடிவுகளாலேயே இந்தியா புகழ் பெற்று விடாது.
பழைய கசடுகள் நீங்க புதிய வரவுகள் இருக்க வேண்டும். அதுவே நாட்டின் மக்களாட்சி முறையையும் வளத்தையும் கொண்டு வர உதவும் தங்களின் கோபத்தை புதியவர்களின் பக்கம் திருப்பி புதிய புதிய எண்ணங்களை ஏற்க வேண்டும். தேற வேண்டியவர்கள் அரசியல் பேசுவோரே!
வணக்கம்.

பாவலர்
மு இராமச்சந்திரன் தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

திராவிடம் தமிழரின் இன எதிரி

தமிழரின் இன எதிரி பார்ப்பனர் அல்ல. நம்மிடம் இருந்து பிரிந்த பின்னும் தன்னை முன்னாள் தமிழர் என எண்ணிக் கொள்ளாது, அப்படி சொல்லிக் கொள்ளாது, தமிழரையும் சொல்ல விடாது தடுத்து, நம் இடத்தையும் நிலத்தையும் ஆட்சியையும் நம் நிலத்திற்குள்ளே வந்து நின்று பறித்து நம்மை அடிமை போல் நடத்தியவர்களின் மிச்சம் மீதியே.. அதன் தொடர்ச்சியே ஈவெராவும் அதன் கிளைகளும் வலைகளும் திரைப்பட, பிற மொழியினரின் தமிழர்களுக்கான உழைப்புகளும் பிழைப்புகளும்.

இவற்றை அறியாத தமிழர் பலரின் வீழ்ச்சியே.. இன்றைய அரசியல் களத்தில் தமிழர் பலரை பிரித்து விளையாடும் முயற்சியாக தொடர்கிறது. இவ்வளவு நாளும் தமிழரை நம்ப வைத்து விற்ற பழக்கத்தை வைத்து பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் விற்க தொடங்கி விட்டார்கள் மறுபடியும் திராவிட வணிகர்கள்.

நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திராவிட வசம்சத்தார் இங்கு வரும் போதே அவர்களை சார்ந்த பார்ப்பனரோடு வந்தார்கள். நாம் மதிக்காத சமக்கிருதத்தை தலைமேல் சுமந்து நின்றார்கள். அதுவரை நமது நிலம் முழுவதும் தமிழ் பாடி மகிழ்ந்திருந்த திருக்கோயில்களில் சமக்கிருத குப்பையை கொட்டி தமிழை வெளியேற்றினர். தமிழிசையை அழித்து கர்நாடக இசையென தெலுங்கு சமஸ்கிருதம் ஆக்கி அவர்களுக்கு உரிய இசையென மாற்றிக் கொண்டனர். அந்த இசையை அமைத்த மூவரும் பார்ப்பனர்கள். ஆனால் தமிழரை காக்க வேடமிட்ட ஈவெராமசாமி நாயக்கருக்கு அதையெல்லாம் தட்டிக் கேட்க மனமில்லை. அவருக்கு தமிழ் நாட்டு பார்ப்பனரை அடக்கவே எதிர்ப்பை காட்டி வளர்ச்சி இருந்தது. இப்பொழுது தமிழருக்கு கோயிலானது.. குளமாவது ஆன்மீகமாவது.. அங்கே தமிழாவது.. கடவுளாவது.. பண்பாடாவது? பழக்கமாவது? எல்லாம் பிறர் கை வசமானது. அரசியல் போலவே எல்லாம் களவு போனது. தமிழர் கை விட்டும் போனது. தமிழர் வளங்களை மறக்கடித்து வாழுகிறது பிற மொழி திராவிடம்.

அன்று இங்கே, ஒருவர் தன் தாய் மொழி பற்றால், தமிழிசையை போற்றி வளர்க்க வேண்டும் என தான் ஈட்டிய செல்வ வளத்தை வைத்து தமிழிசை மன்றங்கள் அமைத்து அரும்பணி ஆற்றிய பெருந்தகை செட்டி நாட்டரசர் அரசர் அண்ணாமலை அவர்களேடு இணைத்தோ பாராட்டியோ ஒரு நாளும் இருந்ததில்லை இவர். காரணம்? எல்லாம் அவரது தாய் மொழி பற்று. இதை உணராத தமிழருக்கு வெளியார் பற்று?!

நமக்குள் சாதி இருக்குதாம்? அதை இவர் ஒழிக்க வந்தாராம்?! இந்த சாதியெல்லாம் பார்ப்பான் கொண்டு வந்ததாம்? பார்ப்பனர் தமிழர் சாதிக்குள் ஒரு சாதி. இவர்கள் தமிழ் நிலத்தில் அவர்களை ஒதுக்கிப் பேசிய பின்னாலே அவர்கள் வடநாட்டு பக்கம் ஆரிய பிராமணர்களோடு உறவு தேடி போனார்கள். ஏதோ இவருக்கு சாதி வெறி இல்லையாம்.. இந்த இழி நிலைக்கே இவர்களின் வருகை தானே காரணம். எந்த சாதியும் தாழ்ந்தது இல்லை. எல்லா சாதியும் தொழில் சார்ந்து, ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன. ஐவகை நிலங்கள் ஐவகை நிலைகள். மக்கள் கலப்பு, இடம் மாறி, நிலை மாற வாழ்க்கை பல வகையாக உரசல்கள் பிரிவாயின. இது தான் உலகம் முழுவதும். தமிழர் வகுத்த ஐவகை நில மக்கள். ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் தமிழர்கள் தாழ்ந்தும் பிற்பட்டும் முற்பட்டும் உள்ளனர். பிரிவுகள் பேசி வந்தவர்கள் நமக்கே மேலாளுமை செய்கின்றனர். தமிழர் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நம்பிய தமிழரும் தமிழும் இன்று எங்கே தலை இடத்தில்? அவர்களை நம்பிய நாம் மேலும் ஐம்பது ஆண்டுகள் அவர்களிடமே ஆட்சி அரசியல் பொருளியல் வளங்களை இழந்து நிற்கிறோம். இனியும் அதுவே தொடர் வேண்டும் என திராவிடம் பேசி எழுகிறது. அதற்கு இப்பொழுது அம்பேத்கர் அவர்களையும் துணைக்கழைத்து வருகிறது. தமிழர்கள் பிரிந்தே கிடக்க வேண்டும் என்பது அவர்களின் சதி. தமிழர்கள் மோதிக் கொண்டழியவா பிறந்தோம்? தமிழர்கள் தாயத்து வியாபாரிகளை நம்புதலை விட்டு தமிழோடும் தமிழர் இன உணர்வோடும் நிற்பதே தமிழருக்கு பாதுகாப்பு.

தமிழருக்கு காவல் தமிழே! தமிழருக்கு காவல் தமிழரே! தனித்தனி இனங்கள் மொழிகள் என ஆன பின்பும் தமிழர் நாம் என எழுந்து செயலாற்றாமல் போவது நம் குற்றமே. குற்றத்தை யாரோ செய்தார்கள் என்பதற்காக நாமும் அவர் பின் செல்வதை விடுக.. அதுவே தமிழருக்கு நல் அறம்! அதுவே நம் வீரம். தமிழருக்கு தன்மானம்!வாழட்டும் நம் தமிழினமே.. இனி புவி ஆளட்டும் நம் திறமே. நம் நிழலில் வாழட்டும் பல இனமே.. எங்கும் பொங்கி வழியட்டும் தமிழர் என்ற இன வளர்வே..! வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

தமிழகத்தை திராவிட கட்சிகள் ஏமாற்றுகின்றன

இந்திய விடுதலைப்பின் தமிழகம் நல்ல நிலையை எய்தி இருந்தது. ஒரு பக்கம் வளர்ச்சியும் முன்னேற்றமும் என போட்டி இட்டது. தமிழகத்தை சார்ந்த மூதறிஞர் இராசாசி காந்திக்கு இணையாகவும் கருமவீரர் காமராசர் நேருவுக்கு இணையாகவும் பசும்பொன் முத்துராமலிங்கம் நேதாஜிக்கு இணையாகவும் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் முசுலீம் லீக் பெருந்தலைவராகவும் அறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ வி, சிலம்புச் செல்வர் மபொசி, நாம் தமிழர் என்ற சி. பா. ஆதித்தனார், தோழர் பாலதண்டாயுதம், பி இராமமூர்த்தி என பலரும் தமிழ்நாட்டின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றிருந்தனர்.
அவர்களின் பெயருக்கென ஒரு தனியிடம் இருந்தது. அவர்களில் யாரும் கட்சியை பொருள் குவிக்க பயன்படுத்தவில்லை. அவர்கள் மக்களாட்சி முறைக்கு தோள் கொடுத்தனர். தங்களுக்கு அடுத்து தன் பிள்ளைகள் எனவோ, தன்னைத் தவிர தன்னை எதிர்த்து நின்றவர்கள் அழிந்து போக வேண்டும் என்றோ.. செயலாற்றியதில்லை.

சாதிகளை பேசி தமிழர்களை பிரித்து இலவயங்களை காட்டியோ மக்களை கூறு போட்டு அரசியல் இலாப நட்ட கணக்கு பார்க்கவில்லை. பணக்காரர்களாக பலர் இருக்க இல்லாதவர்களுக்கு எப்படி உதவுவது என திட்டம் தீட்டினர். இரண்டொரு குறைகள் இல்லாமல் இல்லை.
அவற்றில் ஒன்று இந்தியை இராசாசி அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு பாடமொழியாக கொண்டு வந்தது.
இரண்டாவது காமராசர் அவர்கள் ‘மேடாவது குளமாவது.. அது எங்கே இருந்தால் எனன அது இந்தியாவிற்குள்ளே தானே இருக்குது” என தமிழர் நம் நிலம் பகுதிகள் அண்டை மாநிலங்கள் பறித்துக் கொண்டு போக துணை நின்றது.

காரணம் அப்பொழுது தென்னாட்டில் தமிழர்களின் தலைமை மேலோங்கி இருந்தது. நம்மை மீறி அண்டை மாநிலங்கள் என்ன செய்துவிட முடியும்? என்ற எண்ணம்.
இதுவெல்லாம் எப்படி காலம் நெடுக நமக்கு கைகொடுக்கும் என்ற தொலை நோக்கு இல்லாமல் எடுத்த முடிவுகளாயின.

இதனூடே திராவிட குறுக்கு சால்களை ஓட்டியவர்களின் ஆட்சி அரசியல். ஒருவழியாக முன்னேறிக் கொண்டிருந்த தமிழகத்தை சாதி ஒழிப்பு உத்தமர்களால் தமிழ்நாடு ஒற்றுமை இல்லாத மாநிலமாக ஆகி திராவிட பயிர் நடவு மும்முரமாகி களை எது பயிர் எது எனத் தெரியாதவர்களால். தமிழ்நாடே களைகளால் பயிர் மூழ்கிப் போனது.
உழைப்பில்லாத பகுத்தறிவு சோறு போடுமா? சாதி இல்லையென செய்தொழிலே இல்லாமல் போனால் வாழ்வது எப்படி?
சிந்திக்காமல் போனது தமிழ்நாடு.
பேருந்துகளை எல்லாம் அரசுடமை ஆக்குகிறோம் என்று முதலாளிகளை ஒழித்தவர்களே முதலாளிகளானார்கள்.

மக்களுக்கான கல்வியை அரசும் வசதி படைத்தவர்களும் தங்களுக்கு பெருமை வர வேண்டும் என்பதற்காகவே மக்களுக்கு நடத்திய கல்வியை பிறர் பலரிடம் தந்து வணிக பொருளாக்கி ஏழைகள் இயலாதவர்களின் துன்பத்தில் மகிழ்ந்தார்கள்.

மன்னரை ஒழித்தவர்கள் அவர்களின் உதவித்தொகையையும் ஒழித்தோம் என்றவர்கள் தங்களே மன்னர்களாகி தன் உறவுகளுக்கு முடி சூட்டி மகிழ்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் மக்களட்சி மக்களை ஏமாற்றவும் வாக்குகளை காசுக்கு விற்கவும் கூப்பிட்ட போதெல்லாம் கூட்டமாக வரவும் பழக்கப்படுத்தி விட்டனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மும்மொழி திட்டத்தில் இந்தி இருக்கின்றதே எனச் சொன்னவர், இருமொழி திட்டம் என சொல்லி முதயல் மொழி தாய்மொழி (தமிழ்மொழி என உறுதி படுத்தாமல்) எனவும் இரண்டாம் மொழி ஆங்கிலம் எனவும் சட்டமிட்டதால் தமிழ் நாட்டில் உள்ளவர்களின் தாய்மொழிகளில் ஒன்றாக தமிழை வரிசையில் நிற்க வைத்து, ஆங்கிலம் மட்டும் அசைக்க முடியாத இடத்தில் நிற்க வைத்தார்.
அவருக்கு பின்னால் வந்தவர்களால் தமிழ் நாடு பல சிக்கல்களில் இருந்து மீளாத நாடாக இருக்கிறது. போதை மயக்கத்தை தந்து சிந்தனை அற்றவர்களாக ஆக்கினர். ஏற்கென காற்றுக்கும் மழைக்கும் தாங்காதவர்களான நம் தமிழ்க்குடிகள் புயலுக்கும் துயருக்கும் அழ.. ஒன்றுமே தெரியாதது போல் பேசியவர்களே மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.. தேறுமா தமிழ்நாடு?

இப்பொழுது, கர்நாடகம் மீண்டும் ஒரு அணைக்கட்டு ஆணை பெற்றுள்ளது. இதுவரை கட்டிய அணைகள் போதாது என்று!

தமிழ் நாட்டின் சார்பில் பதினெட்டு பாராளுமன்ற மேலவை உறுப்பினர்களும் கீழவையில் முப்பத்தொன்பது உறுப்பினர்களும் இருக்கின்றார்களே.. அவர்கள் எல்லாம் என்ன வேலை செய்கிறார்கள்? நமக்கு மாநில அமைச்சரவை இருக்கின்றதே அது என்ன செய்கிறது?
ஏற்கெனவே நமக்கு செய்த இடையூறுகளை தான் திராவிட கட்சிகள் பொது சண்டையாங்குவது வழக்கம். அதே மேடை. அதே நாடகம். அதே ஒத்திகை தொடங்கிவிட்டது. தங்களுக்குள்ளான திறமை இன்மையை பேச்சு போட்டி பட்டிமன்றமாக்கி தோல்வியை தரப்போகின்றன.

சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையேல் இதுவரை விடாத ஏதாவது ஒன்று இருக்கும் என நாம் நினைத்தால் அதையும் விற்றுவிட்டு, தங்களின் அரசியல் பேச்சுகளை தொடருவார்கள் என்பதை உணர்ந்து தமிழர் நாம் செயல்பட ஒன்றுபடுவது நல்லதாக்கும்!
வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

அரசியல் ஒரு பகட்டுத்தனமல்ல

தமிழ் நாட்டில் அரசியல் பகட்டுத்தனமாகி நிற்கிறது. அவரை இவர் புகழ்வதும் இவரை அவர் புகழ்வதும் வேடிக்கையான வேடிக்கையாகி புகழ்ச்சியாகிப் போனது. மக்களிடம் இம்மண்ணை ஆள உரிமை கோரி பெற்றவர்களுக்கே மக்கள் அடிமைகள் போலாகி அவர்களை வான் நோக்கி கும்பிட்டும் அவர் பிறந்த காலத்தில் நானும் பிறந்தேன்?! என மேடையில் பேசியும் அது போல வழிபாடு நடத்துங்கள் உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பது போல கை தட்டல் வாங்கியும் பலரும் பலரையும் கெடுத்து விட்டனர்.

அவர்கள் பேசிய பகுத்தறிவை கேட்டு வாக்களித்த தமிழரெல்லாம் தாங்கள் வைத்திருந்த பகுத்தறிவை அவர்களிடமே தொலைத்து விட்டனர்.
கைப் பொருள் களவு போனது போல இன்று தமிழினம் யாரிடம் முறையிடுவதென தெரியாமல் அழுகிறது.

இவர்களை நம்பியதால் தமிழ் நாட்டின் உரிமைகள் பலவும் பறி போயின.
அப்படி போனவை‌ எத்தனை என்பதை கூட அறியாதவர்களானது இன்றைய தலைமுறை.

எப்பொழுதும் விளக்கு வெளிச்சத்தில் நின்று தற்புகழ்ச்சி பேசுவோரின் இருட்டு நடப்புகளை தமிழர்கள் அறிய முடியாமல் போனதில் வியப்பில்லை.
சாதிய ஒழிப்பென நாடகம் நடத்தியவர்களால் ஊழல் பயிரிடப்பட்டது. இன்றைக்கு இரண்டும் செழிதாது அவர்களுக்கு பெரும் பயனளிக்கிறது.

தமிழ்மொழியில் முழக்கமிட்ட தமிழகத்தை திராவிடம் சூழ்ந்து கொண்டு சூரையாடுகிறது. அந்நியர்கள், அந்நிய மொழிகள் என்ற பாகுபாடுகளை உணரும் தன்மையை, கொதிப்பை இழந்து தமிழகம் ஊமை வெயிலடிக்கிறது.

கரை காணா கடலான தமிழகம் இன்று யார்‌ நிழலில் யார் என்பது புரியவில்லை. வருகிறவர்கள் எல்லாம் நமக்கு அறிவுரை சொல்லுகிறார்கள். ஆட்சி எனது என்கிறார்கள். இதோ பிடி! இலவயங்கள் என்கிறார்கள். நம்மிடம் வந்து வாழ்வு பெற்று உயர்வுற்றவர்களே நம்மை நம் நாட்டில் ஏதும் இல்லாமல் ஆக்கி விட்டார்கள். நமக்கு பிறரின் அதட்டல் பிடுங்கல் படை எடுப்புகளில் இருந்து காக்கும் தாய்த் தமிழ் மொழி உணர்வையும் தமிழர் நாம் என்ற இன உணர்வையும் திராவிட பிறர் வருகைகள் அழித்தே விட்டன.

ஆண்டின் முன்னூற்று அறுபத்தி நான்கு நாட்களும் விழா, வேடிக்கைகள். சிலை திறப்புகள், வந்தவர்களின் பிறந்த நாள் விழாக்கள் என கொண்டாட்டங்களோடு தமிழர் நம் விழிப்புகள் மயக்கத்திலேயே கிடக்க வைக்க.
நாமும் அப்படியே கிடக்கலாமோ? அவ்வழியே சரியென நடக்கலாமோ?
தமிழரே தன்வழியே நடக்க வேண்டின் பிறர் திராவிடமும் திரிபடைய செய்யும் வடவராதிக்கமும் இங்கே கிளைத்தெழாமல் செய்ய எழுகவே தமிழர், தமிழ்மொழி என்ற உணர்வுகள்.

எழுக! எழுதுக!

தமிழ் நாடு தழைக்க செய்வோம். தலைமையில் நாமே! நாமே!

அரசியலை தூய்மைக் களமாக்குவோம். வெற்றுத் தனங்களுக்கும் வேடிக்கை நகைச்சுவைகளுக்கும் விடை கொடுப்போம்.

விழைக தமிழகமே! சாய்க! நல்லோர் தமிழர் பக்கமே.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் வழி நிற்போம்!

நமக்கு நல்லதெது தீயதெது என தேடி நன்மையை ஏற்கும் தகுதியை நம் தமிழினம் இழந்து விட்டது. ஈ வெ ரா அவர்களால் முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ விசுவநாதம் அவர்களை இழந்தோம். அன்று, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, அதன்பின் அதுவே நீதி கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதுவே ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சென்னை மாகாணத்தின் ஆட்சியை பல ஆண்டுகள் அனுபவித்த பின் தேய அப்பொழுது பதவி சுகம் அனுபவித்த தெலுங்கரெல்லாம் அதை விட்டுப் போக, நீதி கட்சி தமிழருக்கு சுமையமாக விழ, அதை தூக்கி சுமக்க எழுந்த முத்தமிழ்க் காவலர் ஐயா கி ஆ பெ வி அவர்களை பின்தள்ளி, அவரது தமிழர் கழக பெயர் மாற்றத்தையும் பின் தள்ளி, காங்கிரசில் கடை கட்ட முடியாமல் வெளியே நின்ற ஈ வெ ரா அவர்கள் உள் நுழைய காலையில் தமிழர் கழகம் என வைத்த பெயரை அண்ணா அவர்களை பேச வைத்து மாலையில் தமிழர் என்பதை திராவிடர் எனவாக்கியது. அன்றே பிற மொழியினருடையது ஆனது தமிழர் நாடு. தமிழ்நாட்டு அரசியல்
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட திராவிடம் என்று பரந்து நிற்போம்! என்ற கூட்டு சமையல் நடக்க சாப்பிட்ட பின் அவர்களே கைக்கழுவ , நம் இடமெல்லாம் தெலுங்கரும் கன்னடரும் மலையாளத்தவரும் பறித்துப் போக, தமிழர் கண்ணீர் விட்டது தான் மிச்சம்.

மீண்டும் ஒரு குரலோடு கிளம்பியது திராவிட தேசியம். அதைத்தானே அப்பொழுதே கி ஆ பெ வி அவர்களும் அண்ணல் தங்கோ போன்றோரும் எதிர்த்தார்கள். தமிழருக்கு தன் வீட்டு சமையல் மணக்காது. வழியெல்லாம் உணவக விற்பனை பொருளுக்கே வாய் திறக்கும். அப்படித்தான் ஆனது தமிழ் தேசியம்.

அந்த வீழ்ச்சி கி ஆ பெ வி அவர்களுக்கான தோல்வி என நம்மவர்களே நினைத்திருக்க ஒரு எழுபது எண்பது ஆண்டுகள் ஆன பின்னால் இப்பொழுது தெரிகிறது நமக்கெல்லாம். இனிமேல் தெரிந்தென்னவாகப் போகிறது?! எவ்வளவு பெரிய வீழ்ச்சி தமிழருக்கு. ஒரு தமிழரை அரசியல் தலைமையில் காண முடியவில்லை. தமிழருக்கு அரசியல் என்றாலே கசப்பாகி நிற்கிறது. அங்கே தூய்மை என்பதை துரத்தி அடித்துவிட்டனர். மொழி இன பேச்செல்லாம் நாடகமாகிப் போனது. இனம் என்ன இனம் எங்க சாதியை விடவா? என்ற கேள்வி கூச்சல்களால் வந்தவனெல்லாம் அரசியல் வம்படி வழக்காக நீளுகிறது.
தமிழர்கள் நாம் நம்மவரர்களை தோற்கடிக்க பழக்கப்படடுத்திக் கொண்டோம்?!

தம்பீ வா! முகம் காட்டு என திரைப்பட நடிகர் எம்சிஆரை அழைத்தார் அண்ணா! அதுவே திராவிட கட்சிகளுக்கு மாறாத கடமையாகிப் போனது. இப்பொழுதெல்லாம் நம்ம வீட்டுப் பிள்ளைகளை கூட நடிகர் நடிகைகளின் சாயலாகவே பார்க்கிறோம். அரசியல் அழகே திராவிடத்தால் திரிபடைந்து போனது. மாயங்களால் தமிழரின் வாழ்க்கை மாய மான்களின் தேடலாகி அரசியல் மட்டுமில்லாமல் எல்லாமும் கைவிட்டுப் போய் நிற்கிறது தமிழரினம்.

இப்பொழுது நம் தமிழினத் தோன்றல்களின் உயரிய ஒழுக்கமும் மொழிப் பற்றும் தமிழ் மக்களின் மேல் இருந்த அக்கரையும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. இன்று அவர்களில் தமிழ் தேசிய சிந்தனையாளராகவும் தமிழினத் தலைவராகவும் நிமிர்ந்து நின்று பேசியும் எழுதியும் மூப்பு வந்த பின்பும் முடியாது என ஓய்ந்து போகாமல் என்னையும் எம் போன்றோரையும் உணர்வு கொள்ள செய்து இன்றும் நாளையும் என எக்காலமும் வாழும் தமிழ்போல வாழும் நம் முத்தமிழ்க் காவலர் ஐயா கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் 120 வதுபிறந்த நாள் இன்று. அவர் வழி போற்றி தமிழ் தேசியம் எழ உறுதியேற்போம்!
வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.