மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்

அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி குளத்தில் மணல் அள்ளியதை தடுத்த நாம் தமிழர் கட்சியின் ஆலங்குளம் சட்டமன்ற சுற்றுசூழல் பாசறை தலைவர் திரு. கிங்ஸ்லி மீதும், அவருடைய குடும்பத்தினர் தாய், தங்கை, பத்துமாத பச்சிளம் குழந்தை மீதும்..

இன்று காலை நாற்பதுக்கும் அதிகமான அதிமுக மணல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு மூல காரணமான அதிமுகவை சேர்ந்த முன்னாள் கடையம் ஒன்றிய சேர்மன்

கடையம் மாதவரம் பகுதியை சேர்ந்த
பொன்னுதுரை மீதும் தாக்குதல் நடத்திய அதிமுக ரவுடிகள் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்வதுடன் உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்..

பாதிக்கப்பட்ட உறவுகளுடன் கைகோர்த்து என்றென்றும் அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி இருக்கும் என்பதை உறுதியுடன் கூறுகிறோம்..

கு. விமல் குணசேகரன்
சுற்றுசூழல் பாசறை செயலாளர்

நாம் தமிழர் கட்சி
ஆலங்குளம்

திராவிடம் கற்றுக்கொடுத்திருக்கும் ஈ அடிச்சான் பிரதி

08.08.2020 அன்று நடந்ந நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு முற்றுகை போராட்த்தின் வெளிப்பாட்டால் திணறிபோன திமுக அவசரகதியில் உருவான போராட்டம் 10.8.2020 அன்று திட்டமிடபட்டுள்ள திருவெறும்பூர் தொகுதி MLA திரு மகேஷ் பொய்யாமொழியின் சுவரொட்டியில் நாம் தமிழரின் முக்கிய முழக்கமான தமிழை வாழவைப்போம், தமிழனை ஆளவைப்போம் என்ற வார்த்தைகளை கூட மாற்றாமல் அச்சடிக்கபட்டுள்ள சுவரோட்டி.


திருட்டு திராவிடம் நிருபணம்.

தமிழ்நாடா தெலுங்குநாடா?

பெறுநர்: திரு வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
குமாரபாளையம்.

அனுப்புநர்:
நா.குமரேசன் (செயலாளர்,
கலை – இலக்கிய பண்பாட்டுப் பாசறை, நாம்தமிழர்கட்சி, தமிழ்நாடு.)
992/2, ஜீவாநகர், மேட்டுக்கடை,
கல்லங்காட்டுவலசு(அ),
குமாரபாளையம்.

பொருள்: ஒரு தமிழனாக எனக்கு
ஏற்பட்டுள்ள (இது தமிழ்நாடா தெலுங்குநாடா எனும்) ஐயம் தொடர்பாக.

ஐயா !
வணக்கம்.
அருவங்காடு அரசு தொடக்கப்பள்ளியை ஒட்டிய அரசு நத்தம் புறம் போக்கு நிலத்தை சிலர் ஆக்ரமித்து கடந்த 02/08/2020 அன்று இரவோடு இரவாக கொட்டாய் அமைத்துள்ளனர்.

இது தொடர்பாக இது வரை வருவாய்த்துறையாலோ, பிற அரசுத்துறைகளாலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கொட்டாய் அமைத்தோர் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டோர் என்கின்ற ஒரே காரணத்தால்,
தட்டாங்குட்டை ஊராட்சி அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட பிறஅரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் தெலுங்கை தங்கள் தாய்மொழியாகக் கொண்டோர், அந்த நில ஆக்ரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனத்தெரிய வருகிறது.

கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளி நடைபெறாத இந்தக்காலத்தில் இப்படித் திட்டமிட்டு நில ஆக்ரமிப்பு செய்ததோடு இதைப்பற்றி விசாரிக்க வந்த அரசு அலுவலர்கள், ஞானசேகரன், செந்தில், முன்னாள் தலைவரும் இந்நாள் தலைவரின் தந்தையாருமாகிய திரு.எஸ்.செல்லமுத்து அவர்கள்.

மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளியின் மேலாண்மைக் குழு(SMC)வினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்(P T A), கிராம கல்விக்குழுவினர் (VEC)
ஆகிய அனைவரின் முன்பாகவும் (இவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளி கடைப்பிடித்து நின்றதும் குறிப்பிடத்தக்கது).

நிலத்தை ஆக்ரமித்தோர் பழனிச்சாமி என்பவர் தலைமையில், தலைமை ஆசிரியரை மிகமிகமிகத் தரம் குறைந்த தகாத, “தேவுடியாப்பசங்க, ங்கோயாலோக்க, ங்கொம்மாலோக்க….”
போன்ற எழுதவே முடியாத பல வார்த்தைகளால் திட்டியதோடு.

தலைமை ஆசிரியரைப் பார்த்து கைகளை ஆசிரியரின் முகத்துக்கு நேராக நீட்டி “இவனக் கொன்னு போட்டாத்தான் இந்தப்பிரச்ன தீரும்னா இவனக் கொல்லவும் தயங்க மாட்டோம்” என்று மிரட்டியதும்.

இதெல்லாம் முடிந்த நிலையில் நேற்று காலை என் வீட்டிற்கு வந்த பூபதி என்கின்ற இளைஞன் “வாத்தியார் னா வாத்தியார் வேலையை மட்டும்தான் பார்க்கனும் ” என்றதும்.

“காம்பவுண்ட் செவுருகட்ட விடமாட்டோம்”
என்றதும்.

“அது அரசு நிலமா? இல்லையா என்பதை ஒரு வாரம் பத்து நாளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துகொள்ளலாம்” என்று நான் சொல்ல.

“ஒருவாரம் பத்து நாள் லாம் எதுக்குங்க ரெண்டு மணி நேரத்துல தகவல் எடுத்தர்லாம்” என்றதும் மட்டுமல்ல.

மேற்கண்ட செயல்களின் போது பழனிச்சாமியோ, அவருடன் வந்தோரோ, பூபதியோ, முகக்கவசம் அணியவில்லை என்பதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டத்தை மீறுவோர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்போர், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் தமிழர் என்றால் தான் சட்டம் பாயும் என்பதற்கு சாத்தான்குளம் ஃபென்னிக்ஸ் , ஜெயராஜ் படுகொலையும்.

தெலுங்கர் என்றால் அதுவும் அருந்ததியர் என்றால் சட்டம் தன் கடமையைச் செய்யாது கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்பதற்கு
அருவங்காடு அரசு ஊ.ஒ.து. பள்ளியும்.
பள்ளி தொடர்பான தொடர் சம்பவங்களுமே சான்று.

எனவே ஐயா அவர்கள் எமது ஐயமான, இந்திய நாட்டுக்குள் இது தமிழ்நாடா? தெலுங்கு நாடா? என்கின்ற எம் ஐயத்தை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உண்மையுடன்
சமர்ப்பா குமரன் (எ) நா.குமரேசன்.

நகல்கள்;
மாவட்ட ஆட்சியர்.

ஒன்றிய அரசு தற்போது கொண்டு வர இருக்கும் சூழலியல் தாக்கமதிப்பீட்டு அறிக்கை குறித்த சட்டதிருத்தம்

இந்தியாவில் ஏற்கனவே இருந்த சூழலியல் சட்ட விதிகளை நீர்த்து போக செய்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த சூழலியல் சட்ட விதிகள் திருத்தி கொண்டு வரப்படுகிறது.

இந்த சூழலியல் சட்ட திருத்த விதிகளில்(EIA) குறிப்பிடபட்டுள்ள சில அதிர்ச்சியான விதிகள்:

◆பெரும் தொழிற்சாலைகள் தொடங்கும் போது சுற்றுச்சூழலுக்கும் ,சமூகத்திற்கும் ஏற்படும் சாதக பாதகத்தினை உறுதிபடுத்தி இனி எந்த சூழலியல் உத்தரவாத அறிக்கைகளையும் அந்த பெரும் நிறுவன முதலாளிகள் அரசுக்கும், சூழலியல் துறைக்கும் அளிக்கவேண்டிய எந்த அவசியுமும்,தேவையும் இல்லை. இதில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி பொதுமக்களும் இனி எந்த கேள்விகளையும் கேட்கமுடியாது, பொதுமக்களின் கருத்துகளும் ஒருபோதும் பரிசீலிக்கபடாது.

◆அரசு கொண்டு வர நினைக்கும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை விரிவாக்கம், நீர்வழிச்சாலை என அனைத்திற்கும் சூழலியல் சட்ட விதிகளை பரிசீலிக்க வேண்டிய தேவை இனி அரசுக்கு இல்லை. மற்றும் அதில் எந்த மாதிரியான பிரச்சனை வந்தாலும் மக்களின் கருத்துகளை கேட்க வேண்டிய அவசியமும், தேவையும் அரசாங்கத்திற்கு இனி இல்லை. அரசாங்கம் தன் போக்கில் தன்னிச்சையாக சூழலியலை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் இந்த திட்டங்களை செய்து முடிக்கலாம். (குறிப்பாக தற்போது மக்கள் போராடி நிறுத்தி வைத்துள்ள எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களை, அரசு மக்களின் கருத்துகளை ஒரு துளியும் பொருட்படுத்தாமல் செயல்படுத்தலாம்.)

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இத்தகைய சூழலியல் தாக்க மதிப்பீடு குறித்த சட்டதிருத்தத்தை(EIA) மத்திய அரசு உடனடியாக கொண்டு வர துடிக்கிறது..
இந்நிலையில் உச்சநீதிமன்றம் இதற்கு மக்களின் கருத்துகளை தெரிவிக்க வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை காலம் அளித்துள்ளது..
எனவே தயவு செய்து உறவுகள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள QRCODE- ஐ ஸ்கேன் செய்து மத்திய சூழலியல் துறை மற்றும் மத்திய அரசுக்கு மின்னஞ்சல்(Email) மூலமாக உங்கள் கருத்துகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவண்:-
பொறியாளர்
செ. வெற்றிக்குமரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

திரிபுரா மக்கள் முன்னணிக்கு சீமானின் கடிதம்

திரிபுரா மக்கள் முன்னணி தலைவர் அம்மா பட்டால் கன்யா ஜமாத்தியா கடிதத்திற்கு சீமான் அண்ணன் பதில். வல்லாதிக்க மத்திய அரசுக்கு எதிராக தேசிய இனங்கள் அனைத்தும் ஓரணியில் சேர அழைப்பு.

பெறுநர்,
பட்டால் கன்யா ஜமாத்தியா, தலைவர்,
திரிபுரா மக்கள் முன்னணி, திரிபுரா.

தமிழர்களின்
தேசத்திலிருந்து உங்களுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துக்கள்! EIA 2020 வரைவுக்கு எதிரான எனது அறிக்கையை நீங்கள் படித்து அதற்கு ( EIA 2020 ) எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் நாம் தமிழர் கட்சி பிரதிநிதிகள் திரு ஜீவா டானிங் மற்றும் முனைவர் பால் நியூமன் அவர்களோடு போராட்ட களங்களில் இணைந்து செயல்படுவதை நான் வரவேற்கிறேன். உங்கள் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களின் உரிமை மீட்பு, அவர்களின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவை நாம் தமிழர் கட்சியின் தலையாய கொள்கைகளில் ஒன்றாக உள்ளன.

அதை அடிப்படையாக கொண்டு ரோஹிங்கியா இனப்படுகொலை நடந்த போது அதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மாபெரும் போராட்டம் நடத்தியதை நீங்கள் அறிந்திருக்கலாம். எப்போதெல்லாம் தேசிய இனங்கள் ஏகாதிபத்திய சக்திகளால் அடக்கு முறைக்கு உள்ளாகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் எங்கிருந்தாலும் எங்கள் குரலை ஆதிக்கவாதிகளுக்கு எதிராக முடிந்தவரை நாம் தமிழர் கட்சி உயர்த்தி வருகிறது .

சட்ட விரோதமாக குடியேறிய பங்காளதேசியர்களால் திரிபுரா பூர்வகுடி மக்களின் வணிகம், ஆளுகை, அதிகாரம் பறிபோய் சொந்த மண்ணிலேயே திரிபுராவின் பூர்வகுடி மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டு வரும் மோசமான நிலையை நான் அறிந்து வருந்துகிறேன் .

தொடர்ந்து திரிபுராவில் பூர்வகுடி மக்களுக்கு எதிராக நடந்து வருகிற நிகழ்வுகளை நான் கவனித்து வருகிறேன். பூர்வ குடி மக்களுக்கு எதிராக சட்ட விரோதமாக குடி ஏறியவர்களால் சமீப காலங்களில் நடத்த படுகிற கூட்டு பாலியல் வன்கொடுமைகளையும் கொலைகளையும் நாம் தமிழர் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. பூர்வகுடி மக்களுக்கு மத்திய மாநில அரசாங்கங்கள் உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இது சம்பந்தமான நடவடிக்கைகளில் உங்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்.

“கோக் போரோக்” என்கிற திரிபுரா மக்களின் தாய்மொழி, உங்கள் இனத்தின் கலை மற்றும் கலாச்சாரம் அழிக்கப்படும் போது ஏற்படும் வலியை எங்களால் புரிந்து கொள்ள முடியும். சுதந்திரம் பெற்றதிலிருந்து, மத்திய அரசுகள் தொடர்ந்து தேசிய இனங்களையும் பூர்வ குடி மக்களையும் அடக்கி வருகின்றன, ஒரு வழி தடை பட்டால் இன்னொரு வழியில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
எங்கள் கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று “பண்பாட்டு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது.” என்பதாகும் , அதை அடைய நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். எங்கள் தலைவர், மேதகு, வே . பிரபாகரனின் மேற்கோள்களில் ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்:

அது “உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் ஒரு சிறிய தேசமும் ஒரு வல்லரசை எதிர்த்துப் போராட முடியும்.” என்பதாகும்.

இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலங்களிலும் தன்னாட்சி ஏற்படுத்துவது நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. அந்தந்த மாநிலங்களை அந்தந்த பூர்வகுடிகளே ஆள வேண்டும்.

நம் உரிமைகளை வென்றெடுக்க தேசிய இனங்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், ஒற்றுமையைக் காட்ட வேண்டும். திரிபுரா மாநிலத்தில் தன்னாட்சியை அடைய போராடும் திரிபுரா மக்கள் முன்னணிக்கு நாம் தமிழர் கட்சி பெரிதும் துணை நிற்கும். ஏகாதிபத்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அணி சேர்ந்து போராட அழைக்கிறேன் .

தமிழர் – திரிபுரா மக்கள் ஒற்றுமை ஓங்குக! அனைத்து தேசிய இனங்களின் ஒற்றுமை ஓங்குக! நன்றி

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்!

அறிக்கை: கொரோனா கற்பித்த பாடத்தை உணர்ந்து உடனடியாக, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வேண்டுகோள் | நாம் தமிழர் கட்சி

https://bit.ly/33bqDKu

தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்பிற்காகவும், மேல் படிப்பிற்காகவும் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் அரபு மற்றும் கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், தனிப்பட்ட சிக்கல்களிலும் பேரிடர் காலங்களிலும் விரைந்து உதவிடவும் ஒரு தனி அமைச்சகம் இதுவரையில் அமைக்கப்படாதது பெருங்குறை. அண்மைக்காலமாக உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி முடக்கிப்போட்டுள்ள கொரோனா நோய்த்தொற்றுப் பரவலும் அதையொட்டி வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தமிழகம் அழைத்துவருவதில் ஏற்பட்ட சிக்கல்களும் தனி அமைச்சகத்தின் தேவையை நமக்கு நன்கு உணர்த்தியுள்ளது.

இதனை முன்பே உணர்ந்துதான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வெளியிடப்பட்ட ஆட்சி செயற்பாட்டு வரைவில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகம் ( Ministry of Overseas Tamil Affairs) அமைக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டு அதற்கான செயற்திட்ட வரைவையும் முன்மொழிந்தோம் என்பதனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் வெளிநாடுவாழ் மலையாளிகளுக்கான தனி அமைச்சகம் 1996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயற்பட்டு வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லும் மலையாளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளை அந்த அமைச்சகம் மேற்கொள்வதுடன், நீண்ட நாட்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பும் மலையாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல், வேலையிழந்து திரும்புகிறவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தொழில் தொடங்க கடனுதவி, அரசுப் பணிகளில் சேர பயிற்சி எனப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்கிறது. குறிப்பாக இப்பேரிடர் காலத்தில் வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் உள்ள மலையாளிகளைக் கேரளாவிற்குத் திரும்ப அழைத்து வர தேவையான விமானங்களை இந்திய அரசின் உதவியுடனும் தனியார் மூலமாகவும் இயக்கி நாட்டிலேயே அதிகளவிலான மக்களைத் திரும்ப அழைத்து வந்துள்ளது.

அதே வேளையில் புலம்பெயர் நாடுகளில் கடுமையான ஊரடங்கில் சிக்குண்டு வருமானமின்றி வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்த தமிழர்கள், எல்லா உதவிகளுக்கும் இந்தியத் தூதரகத்தினை மட்டுமே எதிர்நோக்கவேண்டியிருந்தது. ஆனால் தூதரக அதிகாரிகள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருந்ததனால் தகவல் தொடர்பில் ஏற்பட்ட தொய்வால் தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை. மாதந்தோறும் மிகப் பெரிய அளவிலான அந்நிய செலவாணியைத் தம் வருவாய் மூலம் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் ஈட்டித் தரும் வெளிநாடு வாழ் தமிழர்களுடன் இக்கட்டான சூழல்களில் துணைநிற்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமை.

எனவே கொரோனா நமக்குக் கற்பித்த பாடத்தை உணர்ந்து உடனடியாக, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தினை அமைக்க முன்வர வேண்டும் எனவும், தற்பொழுது வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களைத் அரசு செலவில் மீட்டு வரவேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

  • சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

புதிய கல்விக் கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும்!

அறிக்கை: வருணாசிரமத் தர்மத்தை நிலைநிறுத்தும் நவீன குலக்கல்வித் திட்டமான புதிய கல்விக் கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

https://bit.ly/2PmTsvx

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருக்கும் தற்காலத்தில் நிலவும் அசாதாரணச்சூழலைத் தனக்குத் தற்பயனாக்க முனையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு பன்முகத்தன்மை எனும் இந்நாட்டின் தனித்துவத்தைச் சிதைத்தழிக்கும் சதிச்செயலை பெரும் முனைப்போடு செயல்படுத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மத்தியிலே அதிகாரத்தைக் குவிப்பதையும், தேசிய இனங்களின் தனித்த அடையாளங்களை மறைத்து, ஒற்றைமயப்படுத்துவதையும் வீரியமாகச் செய்து எதேச்சதிகாரப்போக்கைக் கட்டவிழ்த்துவிடும் பாசிச செயல்பாட்டின் நீட்சியாக நாடு முழுமைக்கும் தேசியக்கல்விக் கொள்கை எனும் பெயரில் காவிக்கொள்கையை நடைமுறைப்படுத்த முனைவது இந்தியாவின் இறையாண்மையையே தகர்க்கும் பேராபத்தாகும்.

3,5,8,10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், எல்லாவிதப் பட்டப்படிப்புக்கும் நாடு முழுமைக்கும் நுழைவுத்தேர்வுகள் என்று வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் தேர்வறிவிப்புகள் மாணவர்களை அச்சுறுத்தி, அவர்களது தனித்திறன்களை மலடாக்கும் வேலைதானே ஒழிய, அவர்களை ஆளுமைகளாக வளர்த்தெடுக்கும் செயலல்ல; இது அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்திலிருந்து முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வரும் இளந்தளிர்களை உயர்கல்வியிலிருந்து வெளியேற்றி இடை நிற்றலுக்கு வழிவகுக்கும் கொடுஞ்செயலாகும். ஏற்கனவே, நீட் தேர்வைக் கொண்டு வந்து வந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை கானல் நீராக்கியது போல, தற்போது கலை, அறிவியல் மாணவர்களுக்கும் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டு வருவது கிராமத்து, அடித்தட்டு மாணவர்களின் உயர்கல்விக்கு உலை வைக்கும் கயமைத்தனமாகும்.

மொழிச்சிறுபான்மையினருக்குக்கூட அவர்களது தாய்மொழியில்தான் பயிற்றுவிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச்சாசனம் கூறுகிறபோது, ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி எனும் அறிவிப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. அத்தோடு, மும்மொழிக்கொள்கை எனும் பெயரில் எதற்குப் பயன்தரா சமற்கிருத மொழியைத் திணிக்க முற்படுவது கல்வியை ஆரியமயப்படுத்தும் வேலையின்றி வேறில்லை. விருப்ப மொழி எனும் பெயரில் உள் நுழைக்கப்படும் சமஸ்கிருதம் நாளையே கட்டாய மொழியாக மாற்றப்பாட்டாலும் அதில் எவ்வித வியப்புக்கும் இடமில்லை. ஒருபுறம், கல்விக்காக 6 விழுக்காடு நிதி ஒதுக்கீடு என அறிவித்துவிட்டு மறுபுறம் கல்லூரிகளுக்குத் தரத்தின் அடிப்படையில் நிதியுதவி என்பதும், 5,000 மாணவர்களுக்கு மேலுள்ள கல்லூரிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதி என்பதும் இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட தமிழகத்தின் இருண்டக்காலத்தை நினைவுபடுத்துகிறது.

மாநில அரசுகள் தரும் நிதியில் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கப் பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு உருவாக்கப்படும் என்பதும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் என்பதும் மாநில அரசுகளின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதலாகும். மாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தாரைவார்த்ததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய கல்விக்கொள்கை என்பது கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மொத்தமாய் மத்தியப்பட்டியலுக்குக் கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே மதிய உணவு வழங்கப்படும் என்பதும், மதிப்பெண்கள் அடிப்படையிலேயே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பதும் சமூகநீதியின் மீது விழுந்த மற்றுமொரு பேரிடியாகும். இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வியை முற்றாகப் பறிக்கும் வேலைத்திட்டமே!

பல்வேறு மாநிலங்களில் வாழும் பல தேசிய இனங்கள் பலதரப்பட்ட பாடத்திட்டங்களைப் பின்பற்றும்போது ஒற்றைத்தேர்வு முறை எப்படிச் சாத்தியம் எனும் கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுவதால், தற்போது பாடத்திட்டத்தையும் ஒரே மாதிரியாக்க இக்கல்விக்கொள்கையில் வழிவகைச் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒரே பாடத்திட்டத்திலும் அறிவியலுக்குப் புறம்பான ஆரியத்துவக் கதைகளையும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் புராண, இதிகாசப் புரட்டுகளையும் வலிந்து திணிக்கப்பட வாய்ப்பமைத்திருக்கிறது இக்கல்விக்கொள்கை. ஏற்கனவே, வேலுநாச்சியாருக்குப் பதிலாக ஜான்சி ராணியையும், அழகு முத்துக்கோனுக்குப் பதிலாக மராத்திய சிவாஜியையும் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழின வரலாற்று இன்னும் இருட்டடிப்புச் செய்யப்படும். மொத்தத்தில், இப்புதிய கல்விக்கொள்கையானது மனுநீதியின் பெயரால் ஆண்டாண்டு காலமாகக் கல்வி மறுக்கப்பட்டு வந்த பூர்வக்குடிகளுக்குக் கல்வி கிடைப்பதை தடுக்க முனையும் குலக்கல்வியை நவீன வடிவத்தில் உட்புகுத்தும் வர்ணாசிரமச்சூழ்ச்சியின் மறுவடிவமேயாகும்.

கல்வித்தரத்தில் முன்னேறியுள்ள உலகின் முன்னணி நாடுகள் யாவும் 6 வயதிலேதான் குழந்தைகளின் கற்றலைத் தொடங்கும் நிலையில், புதிய கல்விக்கொள்கையின் மூலம் 3 வயது குழந்தைகளையே கட்டமைக்கப்பட்ட கல்வித்திட்டத்திற்குள் கொண்டுவருவது என்பது அவர்களது தனித்திறனை சிதைக்கும் கொடுங்கோன்மையாகும். மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து, அவர்களை விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளில் தலைச்சிறந்த தகைமையாளர்களாக வளர்த்து, வார்த்தெடுக்காது; ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களைக் கல்வியைவிட்டே அப்புறப்படுத்தும் வேலையைச் செய்திட முனைவதும், தொழிற்கல்வி எனும் பெயரில் தந்தையின் தொழிலையே தானும் செய்யும் வகையில் அதை நோக்கி மாணவர்களை நகர்த்துவதுமே இப்புதிய கல்விக்கொள்கையின் நோக்கமாக இருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

மேலும், கல்வித்துறையின் ஒரு அங்கமான தேர்வுத்துறையினைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வாசல் திறந்துவிடுவது ஊழலுக்கும், இலஞ்சத்துக்கும், முறைகேடுகளுக்குமே வழிவகுக்கும். பெண்களுக்கான கல்வி முன்னேற்றத்தை பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லாததும் இப்புதிய கல்விக்கொள்கை நம்மைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் என்பதற்கான மற்றுமொரு சான்றாகும். ஆகவே, அதிக நிதி ஒதுக்கீடு, தொழிற்கல்வி, ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிவழிக்கல்வி என்பவையெல்லாம் நம்மை மடைமாற்றி மயக்க முனையும் பாஜகவின் வழமையான திசைதிருப்பல்களே அன்றி, உண்மையான நோக்கத்தோடு செய்யப்பட்டவை அல்ல. ஆகவே, சிற்சில நன்மைகள் இருப்பதாய் நம்பி இப்புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் நாளைய நம் தலைமுறையே மொத்தமாய்ப் பாஜகவின் வஞ்சக வலையில் சிக்க நேரிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பலதரப்பட்ட தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் இந்திய ஒன்றியத்தின் கல்வி முறையை ஒரே குழுவை வைத்து முடிவுசெய்து, ஒரே பாடத்திட்டத்தை அவர்கள் மீது திணிக்க முற்படுவது தேசிய இனங்களின் தனித்தன்மை மீது கல்லெறியும் போக்காகும்.

புதிய கல்விக்கொள்கையின் வாயிலாக நிகழும் மொழித் திணிப்பினை தமிழக அரசு எதிர்ப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அதுவே போதுமானதல்ல. நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் தாய்மொழி வழி கற்றல் எனும் ஒரு மொழி கொள்கையே சரியான கல்விக்கொள்கை. அதற்கு நேர்மாறாக மும்மொழிக்கொள்கையைத் திணித்து மாநிலத்தன்னாட்சிக்குப் பங்கம் விளைத்திடும் இப்புதிய கல்விக்கொள்கையை மொத்தமாய் தமிழக அரசு அமுல்படுத்தக்கூடாது.

ஆகவே, தமிழக அரசு இப்புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

  • செந்தமிழன் சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

ஆயிரக்கணக்கான பெண்களை மீட்ட நாம் தமிழர் கட்சியினர்

நேற்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை தம்பி பார்த்தா Partha Bhuvana ‘விடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு.

பதட்டமான குரலில் சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் நமது கும்பகோணத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானபெண்கள் பணிபுரிந்து வந்ததாகவும், இந்த நோய்த்தொற்று காலத்தில் அந்தப் பெண்கள் ‌ஊருக்கு திரும்ப விரும்பியதாகவும் ஆனால் அந்த நிறுவனம் அதை அனுமதிக்க மறுத்து அந்த பெண்களை தொடர்ச்சியாக அங்கே அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவதாகவும் தகவலை கூறினார். எப்படியாவது நமது கட்சி அதில் தலையிடவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்…!

நான் உடனே காஞ்சி_மாவட்ட பொறுப்பாளர்கள் ஒருவரான தம்பி நாம் தமிழர் சஞ்சீவிநாதனை தொடர்புகொண்டேன். அவர் உடனடியாக தொழிற்சாலை மற்றும் விடுதி இருக்கும் பகுதியின் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஐயா க.சந்திரசேகர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க, ஐயா நமது 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி தம்பிகளுடன் உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விட்டார்…!

அந்த நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் Foxconn என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பணிக்காக நூற்றுக்கணக்கான கும்பகோணத்தை சார்ந்த பெண்களை போன மார்ச் மாதம் அழைத்துப்போனது முதல் இன்றுவரை ஊருக்கும் அனுப்பாமல், கொரோனா பாதிப்புள்ள மகளிருக்கு மருத்துவமும் அளிக்காமல், சுமார் ஆறு மாதங்களாக, விடுதியில் அடைத்து வைத்து அடிமைபோல நடத்தி கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள்!

இது குறித்து நேரடியாக விசாரணை செய்த நமது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ‌ உடனே இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்‌.

அதன்பேரில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த இடத்திற்கு காவல்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும் உடனே வந்து விட்டார்கள்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட அந்த பெண்களை அணுகி புகார் அறிந்து காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாச்சியர் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் புகார் அளித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக அந்த பெண்களின் சுய விருப்பமாக கோரிக்கையாக இருந்த ஊருக்கு அனுப்பி வைத்தல் என்பதை அறிந்து அவர்களை சொந்த ஊருக்கு E-PASS எடுத்து அனுப்பி வைப்பதாக காவல்துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நேற்றிரவு நேரடியாக சந்தித்து உறுதியளித்தார்கள்.

நமது கட்சியின் அப்பகுதியின் பொறுப்பாளர் ஐயா சந்திரசேகர் அவர்கள் தொடர்ச்சியாக என்னுடன் தொடர்பிலிருந்து அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கே நடக்கின்ற நிலவரங்களை தெரிவித்தார்.

இந்த பிரச்சனை கட்சி தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டு கட்சியின் செய்தி ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ‌Packiarajan Sethuramalingam அவர்களும் இது குறித்து கட்சி பொறுப்பாளர்களோடு இணைந்து பெண்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இன்று காலை நாம் தமிழர் கட்சியின் அப்பகுதி பொறுப்பாளர் ஐயா சந்திரசேகர் அழைத்தார். பெண்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்திற்கு பேருந்து புறப்பட்டு விட்டதாக தகவலை மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மனம் நிறைந்து நெகிழ்ந்து விட்டது.

ஒரு_தகவல் தெரிவித்தவுடன் உடனே செயல்பட்டு இறுதிவரை களத்தில் நின்று உழைத்த அனைத்து எமது நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் மனதார எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடமையை சரியாகச் செய்த அரசு அதிகாரிகளுக்கும்,
காவல்துறை அதிகாரிகளுக்கும்
மனம் நிறைந்த நன்றி.

கும்பகோணத்திலிருந்து பார்த்தா என்கின்ற நாம் தமிழரை சேர்ந்த ஒரு சிறிய இளைஞன் தெரிவித்த தகவலுக்காக விரைந்து செயல்பட்டு இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மீட்டு இந்த நோய்த்தொற்று காலத்திலும் பாதுகாப்பாக கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

  • வழக்கறிஞர் மணி செந்தில்
    மாநில இளைஞர் பாசறை செயலாளர்
    நாம் தமிழர் கட்சி