தமிழானதுஎப்படியெல்லாம்மாறியிருக்கிறதுசமஸ்கிருதத்துக்கு!

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி
ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி
குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
செருப்பை பாதரட்ஷையாக்கி
படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள்
அழிந்துள்ளன.

அரபு மொழியில் திருக்குறள் வெளியிடப்பட்டது

04-09-2020 அன்று அரபு மொழியில் திருக்குறள் வெளியிடப்பட்டது.

வெளியிட்டவர்: அமைச்சர் பாண்டியராஜன்

பெற்றுக்கொண்டவர்: கவிஞர் சாலிம் அல்-ருமைதி (குவைத்)

மொழியாக்கம்: Dr. ஜாஹீர் ஹுசைன், அரபு பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம் (4வது படம்)

இதன்மூலம் தமிழிலிருந்து அரபிக்கு நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் இலக்கியம் என்ற பெருமையையும், சவுதியில் அரங்கேற்றப்பட்ட முதல் இந்திய இலக்கியம் என்ற பெருமையையும் நம் திருக்குறள் பெற்றுள்ளது.

கன்னடர்களின் இந்தி எதிர்ப்பு

கன்னடர்கள் மத்தியில் இந்தி வலிந்து திணிக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் விளைவு. பெங்களூர் ரயில் நிலையத்தில் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயரை மட்டும் நீக்குகின்றனர். ஆங்கிலத்தை ஏற்கின்றனர்.

இந்தியை முதன் முதலில் எதிர்த்தவர்’தமிழ்த்துறவி’ பாம்பன் அடிகளார்

சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரின் 55ஆம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறோம்.

1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணைய வில்லை. தமிழர்களின் மரபு என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆன்மிகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். ஆனால் வட மொழியில் கிளைத்த இந்தி மொழியை எதிர்த்த முதல் பெருமை பாம்பன் அடிகளாருக்கே உண்டு.

அவர் தான் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்த முதல் துறவி ஆவார்.

குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும்
பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர். சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர். வடமொழியிலும், தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவர் 6600 அருந்தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். இவரால் வடமொழி கலவாமல் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்ட “சேந்தன் செந்தமிழ்” எனும் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1929ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு சென்னை திருவான்மியூரில் சமாதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் அடிகளார் இந்தியை எதிர்த்ததன் காரணம் என்னவெனில், இந்தி நுழைந்து விட்டால் தமிழர்களின் சைவ சமயமும், தமிழ்மொழியும் அழிந்து விடும் என்று அஞ்சினார். வேறு பாடையான இந்தியை வளர்க்க முற்படும் வடநாட்டவரின் சுயநலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும், தமிழ்மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் 1899ஆம் ஆண்டு வெளியிட்ட தனது ‘திருப்பா’ எனும் சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிகள் இதோ:

பாடை பதினேட்டேயன்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாடைகளிஞ் ஞான்று காணப்படல் காலந்தோறும் கன்மதன்மங்கள் வேறுபடுமென்பதைக் காட்டுகின்ற தென்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கியையப் பன்முகத்தாலுந் தமிழ் பல்கு வழியினைத் தேடல் வேண்டுமென்பதூஉம், அப் பல்கலின்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலுந் தமிழ் வேதப் பெருமையினையும் ஆக்கிய வருளாளர் பெருமையினையுமறியாக் குறையானது வடமொழி பிறமொழியென்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும் பிற மத வேட்கையையும் பெருமயக்கத்தையும் பெருக்கு கின்றதென்பதூஉம் தமிழ்நலன் இற்றென வறியாது

” இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம் “

தலைவனருளற்புதமும், கண்டுகூறு முண்மையுமுட் கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின் இந்நிலவுலகெங்கணுஞ் சைவ சமயமே தலைப்படுமென்பதும், அஞ்ஞான்று ஆன்மலாப வவாவுடையா ரனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாய முற்றென்பதூஉம் இங்ஙனங் கொளக் கிடப்பனவாம்.
(திருப்பா நூன்முகம் பக்க.எ. 17.)

பாம்பன் அடிகளார் இந்நூன்முகத்தை புதுப்பாக்கமெனும் குமாரபுரத்தில் புதுப்பேட்டை அமீர் மகால் அருகில் தங்கி 26.7.1920ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பிலும் வரைந்திருக்கிறார்கள்.

1899ஆம் ஆண்டு இந்தி என்பது தமிழ்நாட்டில் திணிக்கப்படாத காலம். வடநாட்டினரின் இந்தியை திணிக்க முற்படும் உணர்வை முன் கூட்டியே அறிந்து பாம்பன் அடிகளார் எழுதியது வியப்பிற்குரியது.

இந்தி எதிர்ப்புக்கான முதல் விதை ஊன்றிய பாம்பன் அடிகளார் வழியில் தமிழகத்தில் நுழையும் இந்தி ஆதிக்கத்தை விரட்டி அடிப்போம்!

(தகவல்: மு.வலவன் எழுதிய “முருகனைப் பாடிய மூவர்” நூலிலிருந்து.)

-கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்

தமிழைக் கண்டஞ்சும் இந்திக்காரர்கள்?

2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ‘ஸாரி… எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன்.

‘கியா… கியா… யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார். நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன்.

ரொம்பக் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான்… யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி… நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார்.

‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன்… இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்’னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை.

45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க. என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்?

என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ?

The more i can retain my Identity, the more i can survive. நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது!’’

  • வெற்றிமாறன்.

கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தெற்கெல்லைப் போர் ஈகியருக்கு வீர வணக்கம்!

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளை தாய்த்தமிழகத்தோடு இணைக்கக் கோரி 1946ஆம் ஆண்டு முதல் மார்சல் நேசமணி தலைமையில் போராடி வந்தனர்.

1954இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் முதல்வராக இருந்தார்.
தீவிர மலையாள இனவெறி கொண்ட பட்டம் அவர்கள் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மலையாள குடியேற்றத்தை அதிகரித்து தமிழர் தாயகத்தை இல்லாதொழிக்கவும் முற்பட்டார்.

1954ஆம் ஆண்டு தேர்தலில் நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் வெற்றது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத பட்டம் தாணுப்பிள்ளை அரசு 650க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

அவரின் ஏவல்துறையான காவல் துறை செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தொழிற்சங்க செயலாளர் ஆர்.குப்புச்சாமி என்ற இளைஞரை செவிப்பறை கிழியும் வரை காதில் அடித்து துவைத்து எடுத்தது. அதன் பிறகு அவரோடு சேர்த்து, சுப்பையா நாடார் என்பவருக்கும் கைவிலங்கு மாட்டி மூணாறு நகர கடைவீதிகளில் கொட்டும் மழையில் இழுத்துக் கொண்டு சென்றது. இதைக் கண்ணூற்ற பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி மதுரை மாவட்ட சிற்றூர்களுக்கு ஓடினார்கள்.

மார்சல் நேசமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்க மூணாறு வந்தார். பீர்மேடு, வண்டிப்பெரியாறு, வண்டல் மேடு பகுதிகளுக்குச் சென்று காவல்துறையின் அடக்குமுறையை கடுமையாக கண்டித்துப் பேசினார். அவருடன் சேர்ந்து அப்துல் ரசாக் என்பவரும் பேசுகையில், “போலீஸ் ஜவான்கள் சண்டியர்களைப் போல நடந்து கொள்வதால், அப்படிப்பட்டவர் கையில் துவக்குகளை விட்டு வைப்பது ஆபத்தானது” என்று குறிப்பிட்டார்.

இதனை வன்முறைப் பேச்சாக மலையாள ஏடுகள் சித்தரித்தன. ‘மலையாளி’ என்றொரு இதழ் அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு ‘வெல்லுவிளி’ என்று வர்ணித்தது. ‘கேரளகோமதி’ இதழ், “நேசமணி எந்தா இங்ஙனம் ஆயிப்போயி?” என்று ஏளனம் செய்தது.

மலையாள இனவெறி கூச்சல் ஓங்கி ஒலித்ததன் காரணமாக மார்சல் நேசமணி, அப்துல்ரசாக் சிதம்பர நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச்செய்தி உடனடியாக காட்டுத் தீயாகப் பரவியது. அப்போது நாகர்கோயில் பகுதியில் தென் தமிழர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைக்கு எதிராக நேசமணிக்கு அடுத்த கட்டத் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்ட் 11ஆம் நாளை தமிழர் விடுதலை நாளாக (Deliverance Day) கொண்டாடுமாறு குஞ்சன் நாடார் வேண்டு கோள் விடுத்தார்.

அன்று முழுகடையடைப்பு பேரணி, பொதுக்கூட்டம், மறியல் என்று அனைத்து தமிழர்களும் போர்கோலம் பூண்டனர். அப்போது பட்டம் அரசின் காவல் துறை தமிழர்களை நர வேட்டையாடியது. நூற்றுக்கணக்கானோர் காவல் துறையினரின் தடியடியால் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அப்பாவி பொது மக்கள் மீது வெளியே வரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். குலசேகரம் அந்திச் சந்தையில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் காவல்துறையின் அடிக்கு பயந்து ஓடியதால் கீழே விழுந்தாள். அவள் மீது பலரும் மிதித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிர் துறந்தாள்.

சங்கரன் நாடார், மடிச்சல் சங்கு நாடார் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டனர். மொத்தம் 36 பேர் பலியானார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒன்பது பேர் மட்டுமே பலியானதாக பட்டம் தாணுப்பிள்ளை அரசு அறிவித்தது. அந்த ஒன்பது தமிழர்கள் பெயர் மின் வருமாறு:

1.எம்.முத்துசாமி நாயகம்
2.என்.குமரன் நாடார் 3.ஏ.பீர்முகம்மது 4.ஏ.அருளப்பன் நாடார் 5.ஏ.பொன்னையன் நாடார்
6.என்.செல்லப்பா பிள்ளை 7.எஸ்.இராமையன் நாடார்
8.ஸ்ரீ பப்பு பணிக்கர்
9.எம்.பாலையன் நாடார்

இவர்களுக்கு முன்னர் 8.2.1948 அன்று தமிழரசு கழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் நாடார், செல்லையா நாடார் ஆகிய இருவரும் தாயக மண் மீட்பு போராட்டத்தில் முதல் களப்பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் கடும் போராட்டத்தின் காரணமாக சிறையை விட்டு விடுவிக்கப்பட்ட மார்சல் நேசமணி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து மிக உருக்கமாக பேசினார். அதுவருமாறு:

“தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும் அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் தேயிலைத் தோட்டம் வளர்த்த பெருமை முழுவதும் தமிழனுக்கே சொந்தம்” என்றார்.

1956 நவம்பர் 1ஆம் நாளில் மொழிவழி மாகாணம் அமைந்த போது உயிர்நீத்தவர்களின் ஈகம் வீண் போகவில்லை. கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட வில்லை. அதன் காரணமாக தமிழர்கள் சொல்லொண்ணக் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

பட்டம் தாணுப்பிள்ளை வழியில் தான் இன்றைக்கு மாறி மாறி ஆட்சி நடத்தும் காங்கிரசு கட்சியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி்யும் தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாகவும் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவு காரணமாக 49 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர். எஞ்சிய தமிழர் உடல்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொள்ளவில்லை.

27 தமிழர் உடல்களை மீட்டெடுத்த நிலையில் கொரோனோ நோயாளிகளைப் போல கருதி உறவினர்கள் கேட்டுக் கொண்டும் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டது.

கோழிக்கோட்டில் நடந்த வானூர்தி விபத்தில் இறந்த போனவர்களுக்கு 10 இலட்சமும், நிலச்சரிவில் இறந்த தமிழர்களுக்கு 5 இலட்சமும் வழங்கியதன் மூலம் தனது இனப்பாகுபாட்டை கேரள அரசு வெளிக்காட்டியுள்ளது.

எப்போதும் அரபுநாட்டில் வேலை பார்க்கும் மலையாளிகள் சிக்கினாலோ, செத்துப்போனாலோ பரபரப்போடு இயங்கி மீட்டெடுக்கும் கேரள அரசு உள்ளூரில் செத்துப் போன தமிழர்களை மீட்க அக்கறை செலுத்தாதற்கு காரணம் வரலாற்று ரீதியான தமிழினத்தின் மீதான பகை உணர்ச்சி தான்!

இழந்த போன தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைப்பது ஒன்றுதான் அங்குள்ள தமிழர்களை பாதுகாக்கும்!

மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்வு

இழந்த பகுதிகளை மீட்டெடுக்க குருதி சிந்திய ஈகியர் நாளிலே உறுதியேற்போம்!

எது தொன்மையான மொழி என்று கூகுளிற்கு தெரியுமா?

நண்பர்களே! சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தொன்மையான மொழி என கூகிள் சொல்வது போல் கட்டமைத்துள்ளார்கள் ஆரியர்கள். எனவே கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தமிழை அரியணை ஏற்றுவோம்.

கூகுள் இணையத்தில் “இந்தியாவின் தொன்மையான மொழி” என தேடும்போது செத்துப்போன, இத்துப்போன சமகிருதம் வருகிறது. பல்லின மக்களும் இதை காண்பதால், தவறான தகவலை அறிவது போலாகி, உலகின் தொன்மையான மொழியான தமிழை மறைப்பது போலாகும்.

அன்னைத்தமிழை அரியணையில் ஏற்ற உலகெங்கும் உள்ள உறவுகள், கூகுள் (www.google.com) பக்கத்துக்கு சென்று “India’s oldest language” என பதிவு செய்தால் Sanskrit என தவறாக வரும்.

பின்னர் அதன் அருகே feedback என்ற பொத்தானை அழுத்தி, பின்பு This is a false or Misleading information என்ற பொத்தானை அழுத்தி, அதன் பின்பு write your comments என்ற பகுதியில்,

Tamil is the oldest language in the world as many archeological pieces of evidence have proven this. Why Sanskrit is shown as India’s oldest language? Please change it to Tamil.

என பதிவு செய்து submit என்ற பொத்தானை அழுத்தவும்.

ஆபிரகாம் பண்டிதர் பிறந்த நாள் இன்று ஆகசுட்டு 2, 1859

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி நாடார் அவர்களுக்கும், அன்னம்மை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்

கண் ஓயாமல், மெய் வருத்தம் பாராமல், கற்பனையில் மூழ்கி, வண்ணங்களைக்கலந்தெடுத்து, தன் திறமையால், அழகிய வண்ண ஓவியம் ஒன்றை வரைந்தான் தமிழன்.


திருடன் ஒருவன் வந்து அதன் கீழே அவனது பெயரை எழுதினானாம். யாருடைய பெயர் ஓவியத்தில் உள்ளதோ, அவனே சித்திரத்தை எழுதியதாக இன்றளவும் நம்பப் படுகிறது. இப்படித்தான் தமிழிசை கருநாடக இசை ஆயிற்று!

வரலாறு எழுதாமையும் அதைப் பேணாமையும் தமிழரின் மிகப் பெரும் குறைகள். தமிழரின் சாதனைகளுக்கு உரிமை கொண்டாட நினைப்போரின் வேலை சுளுவானது. நமது வரலாற்றைத் திரிப்பது எளிது. புதைக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டி எடுக்கவும் திரிக்கப்பட்ட சரித்திரத்தைத் திருத்தி அமைக்கவும் கடும் முயற்சிகள் தேவை. தமிழிசையின் வேர்களைக் கண்டு பிடித்து, அது கர்நாடக இசையாகத் திரிந்து வந்துள்ளதை நிறுவிய ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி
“ஆபிரகாம்பண்டிதர்”.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் கர்நாடக இசையையும் பழைய தமிழ் நூல் களையும் ஆழமாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல் கருணாமிர்த சாகரம்.

சங்க இலக்கியங்கள், சிலப் பதிகாரம், பக்தி இலக்கியங்களைக் கற்றுணர்ந்து, அவற்றில் இசை, இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளையும் ஆராய்ந்து விளக்கினார். நாதசுவரம், கின்னாரி போன்ற வாத்தியங்கள் கடல்கோளுக்கும் முந்திய தொன்மையுடையவை என நிறுவினார். நமது செங்கோட்டி யாழே நவீன கால வீணை என்றும் நிரூபித்தார்.

தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை மாபெரும் அளவில் பண்டிதர் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்த செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புது கருத்துகள் வெளியாயின.