திருப்பதி தமிழர்களுக்கே

“திருப்பதி தமிழர்களுக்கே”
ம.பொ.சி. தொண்டர்படையோடு போராடிய நாள்: 16.8.1947

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அன்று சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடிய தமிழக எல்லைப் மீட்புப் போராளி ம.பொ.சி. அவர்கள் “போர் முறையும் போர் முனையும் மாறும் நாள்” என்று அறிவித்தார்.

திருப்பதியை மீட்பதே இனி என் முதல் வேலை என்று கூறி விட்டு மறுநாள் (16.8.1947) காலையில் 12 பேர்களோடு வடக்கெல்லையில் உள்ள திருப்பதி நோக்கிப் புறப்பட்டார். அவருடன் புறப்பட்ட தமிழரசுக் கழகத் தோழர்களின் பெயர்கள் வருமாறு:

1.திரு. கொ.மோ. ஜனார்த்தனம்
2.திரு. சோம. சுவாமிநாதன்
3.திரு. தாமோதரம்
4.திரு. வேங்கடசாமி
5.திரு. கிருஷ்ணமூர்த்தி
6.திரு. அம்மையப்பன்
7.திரு. விசுவநாதன்
8.திரு. லூயிஸ்
9.திரு. மு. வேணுகோபால்
10.திரு. தங்கவேலு
11.திரு. டி. ஆறுமுகம்
12.திரு. ஜி. சுப்ரமணியம்

இந்தத் தோழர்களை தமிழினத்தவர் ஒருபோதும் மறத்தல் கூடாது. அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயராகும்.

ஏனெனில், திருப்பதி நோக்கிச் சென்ற இந்தத் தமிழர்கள் மீது ஆந்திரர்கள் நடத்திய வன்முறைகள் சொல்லி மாளாது.

1911ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் வரை திருப்பதிக்கு தெற்கேயுள்ள பகுதிகள் முழுவதும் தமிழகத்திற்கு சொந்தமாகவே இருந்து வந்தது. திருப்பதியும், திருக்காளத்தியும் தமிழ் வழங்கும் வட ஆற்காடு மாவட்டத்தில் தான் இருந்தன.

ஆனால், ஆந்திரப்பகுதியோடு இருந்த கடப்பாவிலிருந்து சில வட்டங்களையும் தமிழ் மாவட்டமான வட ஆற்காட்டிலிருந்து சில வட்டங்களையும் பிரித்தானிய அரசு பிரித்து சித்தூர் மாவட்டம் என்று அறிவித்தது. இது ஆந்திரர்கள் திருப்பதி, திருக்காளத்திப் பகுதிகளை சொந்தம் கொண்டாட ஏதுவாகிப் போனது.

1946ஆம் ஆண்டு தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி கன்னியாகுமரி முதல் வட வேங்கடம் வரை உள்ள தமிழர் தாயகப்பகுதிகளை மீட்டு புதிய தமிழகம் அமைப்பதை தனது இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமாக ம.பொ.சி. அறிவித்தார்.

அதனை நிறைவேற்றும் பொருட்டுதான் ம.பொ.சி.யின் திருப்பதி பயணம் ஆகஸ்ட் 16ஆம் நாள் தொடங்கியது. அன்று காலை சென்னையிலிருந்து தொடர் வண்டியில் புறப்பட்டுத் திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தை அடைந்த தமிழரசுக் கழகக் குழுவினரை தமிழாசிரியரும் வடக்கெல்லைப் போராளியுமான மங்கலங்கிழார், திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் டி.எம். திருமலைப்பிள்ளை ஆகியோர் பெருங்கூட்டத்துடன் வரவேற்றனர். அந்நாளில் திருவாலங்காடு ஆந்திர மாநிலத்தின் பகுதியாக இருந்து வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திருவாலங்காடு சென்ற அன்று மாலை, அந்தக் கிராமத்தில், எல்லைக் கிளர்ச்சியின் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது.

மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு கரடுமுரடான சாலைகளுக்கு இடையில் கனகம்மா சத்திரத்துக்குப் பயணமாயினர். அந்த ஊரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் நடந்து கொண்டிருந்த போது , சத்திரத்துக்கு வெளியே தெலுங்கர்கள் கூட்டம் அணி திரண்டு எதிர் முழக்கமிட்டனர்.

அதைப் பொருட்படுத்தாமல் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருத்தணிக்குச் சென்றனர். அங்கு இருந்த நூற்றுக்கணக்கான கடைகளில் ஒரு கடையில் கூடத் தமிழில் பெயர்ப் பலகைகள் இல்லை. தணிகைத் தமிழர்கள் தெலுங்கில் பேசி வந்தனர். அங்கு எல்லாம் தெலுங்குமயமாக இருந்தது.

திருத்தணியில் நடந்த கூட்டத்திலும் தெலுங்கர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றபோது அங்கிருந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் வன்னியர் சத்திரமொன்றைக் காட்டி அங்கு பேசலாம் என்று சொல்லிக் கூட்டம் நடத்த உறுதுணையாய் நின்றார். அவர் தான் வடக்கெல்லைப் போராட்டத் தளபதிகளில் ஒருவரான திரு. கே. விநாயகம் ஆவார். அந்த சந்திப்பு தான் ம.பொ.சி., வினாயகம் ஆகிய இருவரின் முதல் சந்திப்பாகும்.

வன்னியர் சத்திரத்தில் கலந்து கொண்ட தமிழர்களிடம் பேசிய ம.பொ.சி. தமிழிலேயே பேச வேண்டும், பெயர்ப் பலகைகளை தமிழிலேயே எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு இளைஞர்களின் பேரணி தணிகைத் தெருக்களில் நடைபெற்றது. அதில் ” தணிகை தமிழருக்கே” என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

அங்கிருந்து தமிழரசுக்கழகக் குழுவினர் கிளம்பி நகரி (புதுப்பேட்டை) சென்றனர். அங்கு திரு. வரதப்ப முதலியார் என்பவர் சிறப்பான முறையில் வரவேற்றார். பின்னர் சிவசக்தி வேல் என்பவரின் கொட்டகைக்கு முன் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ம.பொ.சி. குழுவினருக்கு எதிராக சென்னை மாநில சட்ட மன்ற உறுப்பினர் கே.வரதாச்சாரியார் என்ற தெலுங்கரின் சகோதரியார் ஒரு சிறு கூட்டத்தை அழைத்துக்கொண்டு எங்களுக்கு ஆந்திராவும் வேண்டாம், தமிழ்நாடும் வேண்டாம், ” சித்தூர் சித்தூர்காரர்களுக்கே” என்று தமிழில் முழக்கமிட்டு வந்தார். அப்போது அந்தக் கும்பலின் கூச்சலுக்கு இடையே பேசிய ம.பொ.சி. “சித்தூர் சித்தூர்காரர்களுக்குத்தான். அதை யாரும் அபகரிக்க முடியாது. அதை எந்த நாட்டோடு சேர்த்து பட்டா செய்வதுதான் இன்றைய பிரச்சினை” என்றார்.

நகரி கூட்டத்தை முடித்துக் கொண்டு புத்தூர் சென்ற குழுவினரை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரு. துரைசாமி முதலியார் தலைமையில் வரவேற்றனர். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ம.பொ.சி. வீட்டில் தெலுங்கு பேசும் தெலுங்கர்கள் ஆந்திரர்களின் ஆசைமொழிக்கு பலியாகாமல் தமிழர்களோடு சேர்ந்து போராட முன்வர வேண்டும் என்று பேசினார்.

ஆகஸ்ட் 19ஆம் நாள் அக் குழுவினர் திருப்பதி தொடர்வண்டி நிலையம் அடைந்தனர். அங்கு ஆந்திர இளைஞர்கள் சிலர் வீதிகளின் சுவர்களிலே “மீசைக்கார கிராமணியே திரும்பிப் போ! ” திருப்பதி ஆந்திரர்களுக்கே சொந்தம்” என்று எழுதி வைத்திருந்தனர். பல இடங்களில் கறுப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

அவருக்கு வரவேற்பு கொடுக்க வந்த ம.பொ.சி.யின் சிறை நண்பர்
திருப்பதிக் கீழ்த்திசை வேங்கடேசுவரர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நாராயணசாமி நாயுடு என்பவர் பயந்து போய் ம.பொ.சி. குழுவினரை திரும்பிப் போகுமாறு வற்புறுத்தினார். ம.பொ.சி.யோடு மங்கலங்கிழாரும் வந்திருந்தார். ம.பொ.சி. திரும்பிப் போவதை அவமானமாகக் கருதி, திரும்பிப் போக மறுத்து விட்டார்.

கீழ்த்திருப்பதியில் கலவரச் சூழலுக்கு இடையில் கோயில் குளக்கரையில் பொதுக் கூட்டம் தொடங்கியது.அப்போது நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடி ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் கூச்சலிட்டனர்.

மங்கலங்கிழாரையும், கொ.மோ. ஜனார்த்தனம் ஆகிய இருவரையும் பேசவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குளக்கரையில் உள்ள மரங்களில் ஏறி கிளைகளை உடைத்து கூட்டத்தினர் மீது வீசினார்கள். ம.பொ.சி. பேசிய போதும் கூச்சல் நின்றபாடில்லை. பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியோடு காணப்பட்டார்கள். ” வேங்கடத்தை விட மாட்டோம்” என்று ஒரு மணி நேரம் எழுச்சி உரையாற்றினார்.

அதிலே ” பந்தாடும் விஜயநகர ராசா முதல் பண்ணை ஜமீந்தார் பர்லா கிமிடி வரை – சட்ட நிபுணர் அல்லாடி முதல் சமய வேதாந்தி ராதா கிருஷ்ணன் வரை – பார்ப்பன எதிரி பொப்பிலி அரசர் முதல் பார்ப்பனப் பெரியார் பட்டாபி சீதாராமய்யா வரை எல்லோரும் ஆந்திர மகாசபையின் நிழலில் ஐக்கிய முன்னணி வகுத்து ” சென்னையோடு சித்தூரையும் சேர்த்து ஆந்திர மகாணத்தை அமைத்தே தீருவோம்” என்று போர் முரசு கொட்டுகின்றனர். இதன் எதிரொலியே தமிழரின் விழிப்பு.

இனி கேட்பாரற்ற நிலையில் ஆந்திரர்கள் தமிழரை கேவலப்படுத்த – தமிழரின் நிலத்தைப் பறிக்க தமிழரசுக் கழகத்தார் விட்டு வைக்கப் போவதில்லை ” என்று ஆவேசமாக முழங்கினார். இந்தப் பேச்சை அன்றைக்கு இந்து, தினமணி போன்ற ஏடுகள் பரபரப்பாக வெளியிட்டன.

அதையடுத்து ஆந்திர மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ஜி.ரங்கா அவர்கள் சென்னையில் மாநாடு நடத்தி அதிலே , “கிராமணியாரே, தமிழருக்கு திருப்பதி கிடைக்காது. தமிழரிடமிருந்து சென்னையைப் பறிப்போம்” ஏன்று திமிர்த்தனமாக பேசினார். அந்த மாநாட்டின் ஊர்வலத்திலே ” மதராஸ் மனதே” என்றதோடு, ” சலோ மதராஸ்” என்றும், தமிழர்களே சென்னையை விட்டு வெளியேறுங்கள் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது.

ம.பொ.சி.யின் திருப்பதி மீட்பு போராட்டத்திற்கு எந்த கட்சியும் அப்போது ஆதரவளிக்க முன்வரவில்லை. மாறாக கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

ம.பொ.சி.யின் தொடர் போராட்டத்தால், திருத்தணியை மட்டும் மீட்க முடிந்தது. தமிழர்களின் வழிபாட்டுத் தலமான
காளகத்தி, திருப்பதியை தமிழகம் இழக்க நேர்ந்தது.

தமிழர்களின் இழந்த தாயகப் பகுதிகளை மீட்டெடுக்க திருப்பதிக்கே சென்று போராடிய வீரத்தமிழ் மறவர்களை இந்நாளில் போற்றி வணங்குவோம்!

-கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்
Tamilthesiyan.wordpress.com

எல்லைகாத்த வீரர் ம.பொ.சி.

தமிழருக்கு மட்டுமே உரித்தான தமிழுக்கு மட்டுமே உரித்தான இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்க் கலைகளில் சொல்லப்பட்டுவந்த தமிழர் இலக்கியங்களை அந்த இலக்கியங்களுக்கு மிகப் பின்பு உருவாக்கப்பட்ட இராமயணம், மகாபாரதக் கதைகளைத் திணித்து அவை மட்டுமே இந்தியாவின் புராணங்கள் என்று நம்ப வைக்கும் பெரும் திட்டமிட்ட, பரப்புரை நடைபெற்ற காலம்.

அதனை உடைத்து தமிழக கிராமங்கள் தோறும் தமிழரின் அரசாட்சியின் நேர்மை, பெருமை பற்றிப் பேசும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தைக் கொண்டு சென்றவர்.

இதனால் இவருக்கு சிலம்புச் செல்வர் எனப் புகழ் சூட்டப்பட்டது.

மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது சென்னையை ஆந்திரத்துடன் இணைக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷார் கட்டிய முதல் கட்டடம் புனித ஜார்ஜ் கோட்டை உள்ள கடல், சாலை, வானம் என அனைத்து வசதிகளையும் கொண்ட சென்னை கைவிட்டுப் போயிருந்தால் தமிழகம் எந்த வளர்ச்சியும் பெற்றிருக்காத கோவில்கள் மட்டுமே கொண்ட மாநிலமாகப் பின்தங்கிய மாநிலமாக இருந்திருக்கும்.

சென்னை, திருத்தணி, கன்னியாகுமரி ஆகியவற்றைத் தமிழகத்தோடு இணைக்க தொடர் உண்ணாவிரதம் நடத்தி அதனை சாதித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் ஐயா அவர்களின் 114 வது பிறந்த நாள் இன்று.

-விஷ்வா விஸ்வநாத்

பிராமணரல்லாதோர் என்றாலே தமிழரல்லாதோர்

பிராமணர் அல்லாதோர் என்ற போர்வையில் பதவிகளைப் பிடித்தவர்கள் யார் என்று இப்போது பார்ப்போம்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியருக்கு பதவிகளைப் பகிர்ந்தளிப்பது 1909 லிருந்தே நடைபெற்று வந்தாலும் 1919 இல் மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகே முறைப்படி நடந்தது.

இவ்வாறு கிடைக்கும் பதவிகளில் பிராமணர்கள் இடம்பெறக்கூடாது என்று கலகம் செய்து பிராமணரல்லாதோர் என்ற போர்வையில் தமிழரல்லாதவர் மெல்ல நுழைந்தனர்.

1947 வரை இவ்வாறு பதவிபெற்ற அப்படியான “பிராமணரல்லாதார்” பட்டியல் வருமாறு,

கவர்னர் கவுன்சில் உறுப்பினர் (நியமன அமைச்சர்)

வாசுதேவ ராஜா (தெலுங்கர்)
முகம்மது அபிபுல்லா (உருது)
முகம்மது ஊஸ்மான் (தமிழர்)
எம். கிருஷ்ணன் நாயர் (மலையாளி)

உயர்நீதிமன்ற நீதிபதி

சி.சங்கரன் நாயர் (மலையாளி)
அப்துல் ரகீம் (உருது)
சி.கிருஸ்ணன் (தெலுங்கர்)
எம்.வெங்கடசுப்பா ராவ் (தெலுங்கர்)
சி.மாதவன் நாயர் (மலையாளி)
பண்டாலை (மலையாளி)
கே.சுந்தரம் செட்டியார் (தமிழர்)
வி.பாண்டுரங்க ராவ் (தெலுங்கர்)
பி.வெங்கடரமணராவ் நாயுடு (தெலுங்கர்)
கே.பி.லட்சுமணன் (தெலுங்கர்)
முகமது அப்துல் ரஹ்மான் (உருது)
பி. சோமையா (தெலுங்கர்)
சி.குன்றிராமன் (மலையாளி)
முகமது சாகிபுதீன் (உருது)
எம் டேவிட்தாஸ் (மலையாளி)
வேப்பா ராமேசம் (தெலுங்கர்)
யாகியா அலி சாகிப் (உருது)
பி.சத்தியநாராயண ராவ் (தெலுங்கர்)
பி.கோவிந்த மேனன் (மலையாளி)
கே.சுப்பாராவ் (தெலுங்கர்)

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (ஆக்டிங்)

அப்துல் ரகீம் (உருது)
வேப்பா ராமேசம் (தெலுங்கர்)
எம்.வெங்கடப்ப ராவ் (தெலுங்கர்)
சி.மாதவன் நாயர் (மலையாளி)

1920 முதல் 1937 வரையான ஜஸ்டிஸ் ஆட்சியில் மதராஸ் மாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஆங்கிலேயர் அகன்று அதில் இடம்பெற்ற இந்தியர்களில் “பிராமணரல்லாதவர்” பட்டியல் வருமாறு,

தொழில்துறை இயக்குநர்

முகமது பஸ்லுல்லா (உருது)

விவசாயத்துறை இயக்குநர்

டி. ஆனந்த ராவ் (தெலுங்கர்)

சென்னை மாநகராட்சி ஆணையர்

ஜே. வெங்கட நாராயணா (தெலுங்கர்)

பதிவுத்துறை ஐ.ஜி

பி.வி.ஹரிராவ் (தெலுங்கர்)

மீன்வளத்துறை இயக்குநர்

டாக்டர் பி.சுந்தர்ராஜ் (தெலுங்கர்)

டவுன் பிளானிங் இயக்குநர்

ஆர்.டி.என். சிம்மன் (தெலுங்கர்)

அபிவிருத்தித் துறை

வி.பாண்டுரங்க ராவ் (கன்னடர்)

உள்ளாட்சி

எஸ்.ஜி.செங்கோடையன் (தமிழர்)

சிறைச்சாலை ஐ.ஜி

முகமது மூசாகான் (உருது)

பிரதம மாகாண மாஜிஸ்திரேட்

பண்டாலே (மலையாளி)

மருத்துவத்துறை இயக்குநர்

கே.எஸ்.நாயர் (மலையாளி)

ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் ஒரே ஒரு பிராமணரல்லாத தமிழர்தான் பதவி பெற முடிந்தது.

அடுத்து 1937-1939 காங்கிரஸ் ஆட்சியில் ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகளில் அமர்ந்த “பிராமணல்லாதோர்” பட்டியல் வருமாறு,

நீதித்துறை செயலர்

சி.கே.விஜயராகவன் (மலையாளி)

கூட்டுறவுசங்கப் பதிவாளர்

எம்.கிரியப்பா (கன்னடர்)

இதன் பிறகு 1946 வரை ஆங்கில கவர்னர் ஆட்சியில் ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகளில் அமர்ந்த பிராமணரல்லாதோர்

பிரதம செயலாளர்

எஸ்.வி.ராமமூர்த்தி (தெலுங்கர்)

கல்வித்துறை இயக்குநர்

டாக்டர் பி.பி. டே (வங்காளி)

ரெவின்யூ செயலர்

சி.எஸ்.ஹெச்மாடி (கன்னடர்)

தொழிலாளர் நல கமிசன்

சி.கே.விஜயராகவன் (மலையாளி)

ரெவின்யூபோர்டு மெம்பர்

கே.ராமுண்ணி மேனன் (மலையாளி)

பிரின்டிங் சூப்பரிரெண்டு

எம்.கரீம் அப்துல்லாம் (உருது)

1946-1947 மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அதாவது தெலுங்கர் தலைமையிலான ஆட்சியில் ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகளில் அமர்ந்த “பிராமணரல்லாதோர்”

நீதித்துறை செயலர்

பி.வி.சுப்பாராவ் (தெலுங்கர்)

பொதுசுகாதார இயக்குநர்

டாக்டர். ஆர்.எம்.மேத்யூ (மலையாளி)

பிர்க்கா அபிவிருத்தி செயலர்

எம்.எஸ்.செகநாயகலு (தெலுங்கர்)

சென்னை நகர போலீஸ் கமிசனர்

ஏ.வி.பாத்ரோ (தெலுங்கர்)

போலீஸ் ஐ.ஜி

சி.கே.விஜயராகவன் (மலையாளி)

சர்ஜன் ஜெனரல்

டாக்டர். பி.வி. செரியன் (மலையாளி)

ரெவின்யூ போர்டு உறுப்பினர்

சி.கே.விஜயராகவன் (மலையாளி)

இவ்வாறு ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகள் பிராமணர் அல்லாதவர் என்ற பெயரில் தமிழரல்லாதவர் கைக்கே போயின.
அன்று இருந்த தமிழின அரசியல் தலைவர்கள் கண்ணிருந்தும் குருடராக இதை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

சரி! ஆங்கிலேயர் விட்டுக்கொடுத்த பதவிகளில் அமர்ந்த பிராமணர்?!அவர்களாவது தமிழினத்தவரா?!

ஆம்!

ஆங்கிலேயர் அகன்ற இனத்தில் அமர்ந்த “பிராமணர்” பட்டியல் வருமாறு

பல்கலைக்கழக துணைவேந்தர்

கனம் கே.சீனிவாச ஐயங்கார் (தமிழர்)

தற்காலிகத் தலைமை நீதிபதி

சி.வி.குமாரசாமி சாஸ்திரி (தமிழர்)

உயர்நீதிமன்ற நீதிபதி

சி.வி.அனந்தகிருஷ்ண ஐயர் (மலையாளி)
எஸ்.வரதாச்சாரியார் (தமிழர்)
கே.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் (தமிழர்)
எம்.பதஞ்சலி சாஸ்திரி (தமிழர்)
என்.சந்திரசேகர ஐயர் (தமிழர்)
வி.கோவிந்த ராசாச்சாரி (தமிழர்)

அடிஷனல் நீதிபதி

சி.கிருஷ்ணசாமி ராவ் (தமிழர்)
வி.வி.சீனிவாச ஐயங்கார் (தமிழர்)
சி.வி.விஸ்வநாத சாஸ்திரி (தமிழர்)
சி.ஆர். திருவேங்கடாச்சாரியார் (தமிழர்)
வி.பாஷ்யம் ஐயங்கார் (தமிழர்)
சி.என்.குப்புசாமி ஐயர் (தமிழர்)

தலைமைப் பொறியாளர் (மின்)

ஜி. சுந்தரம் (தமிழர்)

தலைமைப் பொறியாளர் (நீர்)

எல்.வெங்கடகிருஷ்ண ஐயர்

அறநிலையக் குழுத் தலைவர்

சர்.டி.சதாசிவ ஐயர் (தமிழர்)

சட்டமன்றத் தலைவர் (நியமனம்)

பி.ராஜகோபாலாச்சாரி (தமிழர்)

(நியமன) அமைச்சர்கள்

சர்.சி.பி. ராமசாமி ஐயர் (தமிழர்)
டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார் (தமிழர்)

அட்வகேட் ஜெனரல்

கே.சீனிவாச ஐயங்கார் (தமிழர்)
எஸ்.சீனிவாச ஐயங்கார் (தமிழர்)
சர்.சி.பி.ராமசாமி ஐயர் (தமிழர்)
டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார் (தமிழர்)
சி.வி.அனந்த கிருஷ்ண ஐயர் (தமிழர்)
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (தெலுங்கர்)

“பிராமணரல்லாதோர்” அரசியல் என்பது தமிழர் முன்னேற்றத்தின் மீதான குறிப்பாக தமிழினப் பார்ப்பனர் மீதான பிறமொழியினர் வெறுப்பே ஆகும்.

ஆங்கிலேயருக்கு அடுத்த நிலையில் அவர்கள் இடத்தை நிரப்ப தயாராக இருந்தனர் தமிழ்ப் பார்ப்பனர்.
அவர்கள் மீதான இனவெறுப்பினை நேரடியாகக் காட்டாமல் முதலில் அவர்களை “பிராமண ஆதிக்கம்” என்ற பெயரில் பிற தமிழரிடமிருந்து பிரித்தனர் வேற்றினத்தவர்.

பார்ப்பனர் மீதான பிற தமிழரின் பொறாமையை பயன்படுத்தி இடையில் புகுந்து தாம் “பிராமணல்லாதோர்” என்ற பெயரில் பதவிகளைப் பிடித்தனர் வேற்றினத்தவர்.

இன்றுவரை தமிழரை இவ்வாறே ஏய்த்தும் வருகின்றனர் பிராமணரல்லாதோர் என்றாலே தமிழரல்லாதோர்!

(தகவல்களுக்கு நன்றி:
ம.பொ.சி அவர்கள் எழுதிய ‘தமிழகத்தில் பிறமொழியினர்’ நூல்)

Athimoolaperumal

கருணாநிதி தமிழரா? நிருபிக்க முயற்சித்தாரா?

நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா? என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார்.

தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:


“இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்.

கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?

என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன்.

கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?


ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா?

இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்.”

(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து…)
Source from http://www.ithayakkani.com and published in our Ithayakkani magazine April 2013 issue.

இது ஒரு மறு பதிவு

Ithayakkani S Vijayan

தமிழர் திருநாள் உருவானது எப்படி?

தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார்.

அது போல தைப்பொங்கல் நாளினை தமிழர் திரு நாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் நமச்சிவாய முதலியார் ஆவார். சென்னை நகரில் தமது பதிப்பகத்திற்கு பாடநூல் எழுதித் தரும் தமிழாசிரியர்களுக்கு சிறப்பு செய்திடும் வகையில் ‘தமிழர் திருநாள்’ பெயரில் ஒரு விழாவினை நமச்சிவாய முதலியார் நடத்தி வந்தார். அதன் பிறகு தமிழர் திருநாள் பெயரில் விழா கண்டவர்கள்
அண்ணல் தங்கோவும், ம.பொ.சி.யும் ஆவார்கள்.

1937ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் பேரவையினை தோற்றுவித்து “உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள்” என்றும், “தமிழ்த்தாயை தனியரசாள வையுங்கள் ” என்றும் கொள்கை முழக்கமாக வரையறுத்தார். அவற்றை தமிழர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் அவ்வாண்டிலிருந்தே தமிழர் திருநாள் விழா , தமிழர் நிலப் பெருவிழா என்ற பெயரில் தைத்திங்கள் முதல் நாளில் தமது பேரவையின் சார்பில் விழா நடத்தினார். அவ்விழாவில் தமிழ்ப் பேரறிஞர்களை அழைத்து தமிழ்மொழி , தமிழின உணர்வை ஊட்டினார். தமிழறிஞர் கா.நமச்சிவாயர் வழியில் தமிழர் திருநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தம் வாழ்நாள் இறுதிவரை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமை அண்ணல் தங்கோ அவர்களுக்கே உண்டு.

ஒவ்வொரு தமிழர் திருநாள் பெருவிழாவிலும் சென்னை மாகாணத்திற்கு தமிழ் நாடு பெயர் சூட்டுதல், தைத் திங்கள் மூன்றாம் நாளில் திருவள்ளுவர் திருநாளாக அறிவித்து விடுமுறை அளித்தல், சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் “ஆகாசவாணி” என்று கூறுவதை நிறுத்துதல், உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர் திருமேனியில் பூணூல் அகற்றி, சமயக்குறிகள் நீக்கி திருக்குறள் ஏடும் எழுத்தாணியும் உடைய திருவுருவப் படத்தை திறந்து வழிபடல், தெருப் பெயரிலும் ஊர்ப்பெயரிலும் தமிழர்தம் பெயரிலும் தூய தமிழ்ப் பெயர் மட்டுமே வைத்தல் போன்ற எண்ணற்ற தமிழர் நலன் காக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அதேபோல் 1946இல் ம.பொ.சி. “தமிழரசு கழகம்” எனும் பெயரில் அமைப்பொன்றை தொடங்கினார். தமிழர் திருநாள் விழா கொண்டாட அறை கூவல் விடுத்ததுதான் தமிழரசு கழகத்தின் முதல் பணியாகும். சென்னை மட்டுமல்லாது தமிழர் வாழும் பிற பகுதிகளிலும், மாநிலம் கடந்து, நாடு கடந்து தமிழர் திருநாள் விழாவை நடத்துவதற்கு தூண்டுகோலாகவும் தமிழரசு கழகம் விளங்கியது.

இந்திய விடுதலை நெருங்கி வந்த தருணத்தில் மிகத் தீவிரமாக தெலுங்கர்கள் விசாலா ஆந்திரா (சென்னை உட்பட) கேட்டும், மலையாளிகள் ஐக்கிய கேரளம் கேட்டும் போராடி வந்தனர். அப்போது ம.பொ.சி. அவர்கள் தமிழினத்தை ஒன்றுபடுத்தி தட்டியெழுப்புவதற்காக ‘தமிழர் திருநாள்’ விழாவினை நடத்த முடிவு செய்தார். தமிழரசு கழகத்தின் சார்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அதில்,
“தைத் திங்கள் முதல் நாளைத் தமது நாட்டுத் திருநாளாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு அம்முதற் பெருநாள் 1947, சனவரி 14 அன்று வருவதால் இம்முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் சிறப்பாக நிகழ்பெறல் வேண்டும். காரணம் அது தமிழ்நாட்டிற்கெனச் சுயநிர்ணய அறிக்கையை யை உறுதி செய்வதாகும்.

சுய நிர்ணயத்தின் வழியே தமிழ்நாட்டின் எல்லை கோலல், அரசியல் அமைப்பை வரையறுத்தல் முதலிய நிகழ்தல் வேண்டும். தமிழகத்தின் விடுதலைக்குரிய ஒரு விழாவில் கலந்து உழைக்குமாறு எல்லாக் கட்சியாரை வேண்டுகிறேன். தமிழர் திரு நாளை நடத்த தொழிலாளர், மாணாக்கர் முதலிய யாவரும் முற்படவாராக. தமிழ் இனம் எழுவதாக!”
என்று அறைகூவல் தரப்பட்டது.

இந்த கூட்டறிக்கையில் திரு.வி.க., காமராசர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ப.சுப்பராயன், ப.ஜீவானந்தம், வ.ரா., கல்கி, பாரதிதாசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், டி.கே.சி., செங்கல்வராயன் ஆகியோர் கையொப்பமிட்டனர். அப்போது திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும் பொதுச் செயலாளர் அண்ணாத் துரைக்கும் இந்த கூட்டறிக்கை நகல் அனுப்பபப்பட்டது. இருவருமே பதில் தர மறுத்தனர்.

1947 சனவரி 14இல் அறிவித்த படி தமிழர் திரூநாள் விழா தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சி சுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை, உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். அக்கூட்டத்தில் தில்லி அரசின் அரசியல் நிர்ணய சபை உடனடியாக மொழிவாரி நாடுகளை பிரிக்க வேண்டும் என்றும், ‘குமரி முதல் திருப்பதி’ வரை உள்ள நிலப்பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கும் பிறகும் தமிழரசு கழகத்தோடு ஒத்துழைக்க மறுத்த திராவிடர்கழகம் தனியாக ‘திராவிடர் திருநாள்’ பெயரிலே விழா கொண்டாடத் தொடங்கியது.

பெரியாரிடமிருந்து தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாவும் கூட திராவிடர் திருநாள் என்றும், தமிழர் திருநாள் என்றும் இரண்டு விதமாகக் குழப்பத்தோடு பொங்கல் விழாவை நடத்தி வந்தார். ஆனால் பொங்கல் விழாவை பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்ததில் தி.மு.க.வுக்குப் பெரும்பங்குண்டு என்பதை மறைப்பதற்கில்லை.

தற்போது வீரமணி தலைமையில் இயங்கங்கூடிய திராவிடர் கழகம் அதே பழைய முறையில் பொங்கல் விழாவை “திராவிடர் திருநாள்” என்று அறிவித்து கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வீம்பாக நடத்திக் கொண்டு வருகிறது. அதில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமும் உள்ளடக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தேசிய அமைப்புகள் வீரமணியாரின் தமிழின அடையாள மறுப்புச் செயலை வன்மையாக கண்டித்தும் கூட வீரமணியார் இன்னும் திருந்திட வில்லை. இந்த ஆண்டும் “திராவிடர் திரு நாள்” கூத்தை அரங்கேற்ற உள்ளார். சென்ற ஆண்டு சல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் கொதித்தெழுந்து ” தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” என்று முழக்கமிட்டதைக் கூட வீரமணி மறந்து விட்டார் போலும்!

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவை ஆந்திரர்களோ, கர்நாடகத்தினரோ, கேரளத்தினரோ, கொண்டாடாத போது “திராவிடர் திருநாள்” பெயரில் விழா எடுப்பது யாருக்காக என்று தெரிய வில்லை.

நவம்பர் 1ஆம் நாள் மொழி வழி அமைந்த நாளை கர்நாடக, கேரள, ஆந்திர அரசுகளும் அங்குள்ள அரசியல் இயக்கங்களும், வெகுமக்கள் பங்கேற்போடு கொண்டாடி வருகின்றன. அன்றைய நாளில் மட்டும் வீரமணி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்.

தமிழரல்லாதார் நலம் காக்கும் பொருட்டு தமிழக எல்லை மீட்புப் போரில் பங்கெடுக்க மறுத்ததோடு பொங்கல் விழாவினை ‘திராவிடர் திருநாள்’ என்று அன்று முதல் இன்று வரை திரிபுவாதம் செய்திடும் திராவிட இயக்கங்களின் நயவஞ்சகப் போக்கை தமிழர்கள் இப்போதாவது உணர முற்பட வேண்டும்.

(தகவல்: ம.பொ.சி. எழுதிய ‘எனது போராட்டம்’ நூலிலிருந்து.)

  • கதிர்நிலவன்

https://m.facebook.com/story.php?story_fbid=1476698719152065&id=303943916427557

தி.மு.க. கொண்டாட மறுக்கும் தமிழர் தாயக நாள் – ம.பொ.சி. எழுதிய ஆதங்கக் கடிதம்

நவம்பர் 1ஆம் நாள் (1956) மொழிவழித் தமிழர் தாயகம் அமைந்த நாளை அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழக அரசு மட்டும் கொண்டாட மறுத்து வந்தது. தமிழக காங்கிரசும் சரி, திராவிட இயக்கங்களும் சரி இந்த 60 ஆண்டுகால வரலாற்றில் ஒருபோதும் கொண்டாடியதாக எந்தப் பதிவும் இல்லை. தற்போது தான் முதன்முறையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என்று அரசாணை வெளியிட்டு அறிவிப்பு செய்துள்ளார். இந்த அறிவிப்பில் கூட வரலாற்று தகவல்கள் திரித்து கூறப்பட்டுள்ளன. இருப்பினும் வரவேற்க தகுந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.

தமிழக அரசின் அறிவிப்பை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு இதுநாள் வரை அறிக்கை விட வில்லை. இன்றைய நவம்பர் 1ஆம் நாளில் கூட டுவீட்டரில் நாலு வரியில் வாழ்த்துகளை அவர் சொல்ல முன்வரவில்லை.

இப்போது மட்டுமல்ல; அண்ணா முதன்முறையாக ஆட்சி நடத்திய காலத்திலும் இந்த மவுன நிலையே நீடித்தது.

தி.மு.க. 1967இல் ஆட்சிக்கு வந்தது முதல் மொழிவழித் தமிழர் தாயக நாள் கொண்டாட வில்லை. இது குறித்து தமது ஆதங்கத்தை தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்திலேயே வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி, தமிழ்மொழி நிர்வாக மொழியாக, கல்லூரி மொழியாக மாறுவதற்கும், மாநில சுயாட்சி கொள்கையை ஏற்றுப் போராடுவதற்கும் அண்ணாவின் அரசு தன்முனைப்பாக செயல்பட வில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

திராவிடக் கட்சிகள் 50 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும் ம.பொ.சி. முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அது அப்படியே இன்றும் நீடிப்பது பேரவலமாகும்.

அவர் “தமிழரசு வாழ்க” எனும் தலைப்பில், செங்கோல் இதழில் 10.11.1968இல் எழுதியது பின்வருமாறு:

இந்தியாவிலே ராஜ்யங்கள் மொழிவழி திருத்தி அமைக்கப்பட்டு, அக்டோபர் 31ஆம் தேதியோடு12 ஆண்டுகள் முடிவு பெற்று விட்டன. நவம்பர் 1ஆம் நாளன்று 13வது ஆண்டு பிறந்திருக்கிறது.

இந்த நன்னாளில் ஆந்திர, கன்னட மாநிலங்களிலே அந்தந்த மாநிலத்து மக்கள் விழா கொண்டாடியிருக்கின்றனர். தமிழகத்தின் தலைமையிடமான சென்னை நகரில் வாழும் ஆந்திரர்களும், கன்னடர்கள் கூட தத்தம் மொழிக்கென தனித் தனியே ராஜ்யம் அமைந்த நாளைக் கொண்டாடியிருக்கின்றனர். அமைச்சர்களும் பங்கு கொண்டுள்ளனர்.

எதனாலோ, தமிழகத்தில் மட்டும் – தமிழ் மொழிக்கென தனி ராஜ்யம் அமைந்த நவம்பர் 1இல் யாரும் விழாக் கொண்டாடவில்லை. பிற மாநிலங்களின் தலை நகரங்களிலே வாழும் தமிழர்கள் கூட, – அவர்கள் நடத்தும் தமிழ்ச் சங்கங்கள் கூட – தமிழ் ராஜ்யம் அமைந்த நாளைக் கொண்டாடக் காணோம்.

தமிழரசுக் கழகமெனும் கொண்டாடியதா? என்று கேட்கலாம், தமிழினத்துக்கெனத் தனி மாநிலம் தேடப் பாடுபட்டவர்கள் – அதற்காக காங்கிரசிலிருந்தும் வெளியேறித் தியாகம் புரிந்தவர்கள் – தமிழரசுக் கழகத்தவர்களே! ஆனால், அவர்கள்தான் தனி ராஜ்யம் அமைந்த நாளைக்கூட கொண்டாட வேண்டுமென்றால், இது தமிழ்நாடு தானா?

தமிழரசுக் கழகத்தின் உழைப்பின் பலனை அனுபவிப்பதற்காகவேனும் மற்றவர்கள் கொண்டாடி யிருக்கலாமல்லவா?

இந்த விஷயத்தில் ஆளுங்கட்சிகூட அசட்டையாக இருந்ததனை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மறதி போலும்!

தமிழ் ராஜ்யம் அமைந்த பின், முதல் பத்தாண்டு காலம் வரை காங்கிரஸ் கட்சி ஆதிக்கமே தொடர்ந்தது. அந்தக் காலத்திலே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை. நடத்த வேண்டுமென்ற நல்லெண்ணமும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கவில்லை.
ஆங்கில ஆதிக்கத்தை அகற்ற வேண்டுமென்று கோருவது “மொழிவெறி” என்று கூட காங்கிரஸ் வட்டாரம் கூறியது. கண்துடைப்புப் போல, இங்குமங்குமாக தமிழ் மொழியின் வனர்ச்சிக் கருதி, ஒன்றிரு காரியம் நடந்திருக்குமானால், அதுவும் தமிழரசுக் கழகம் நடத்திய கடுமையான போராட்டத்தின் விளைவுதான்.

இதற்குக் காரணம் என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ், மொழி வழியே தமிழ் ராஜ்யம் அமைவதனை விரும்பவில்லை. எதிர்க்கவும் செய்தது.
அதனால், தன் விருப்பத்துக்கு மாறாக தமிழ் ராஜ்யம் அமைந்த பின்னும் அதன் பலன்களை மக்களுக்கு அளிக்க மறுத்தது. தமிழர் வாழ்விலே , எங்கும் எதிலும் மணக்கும் படி செய்வதற்காகத் தான் தமிழ் வழங்கும் மாநிலத்தை தனி ராஜ்யமாக்கக் கோரினோம். ஆனால், தனி ராஜ்யம் அமைந்து பத்தாண்டு காலம் வரையும் தமிழ் மொழி புதுவாழ்வு பெறவில்லை. காங்கிரஸ் ஆட்சி நீடித்தால் அத்தைகய புதுவாழ்வு தமிழ்மொழிக்குக் கிடைக்காதென்பதும் தெளிவாகி விட்டது.

அதனால், தி.மு.க. ஆட்சி அமைவதனை வரவேற்றது தமிழரசுக் கழகம். அதற்காக எண்ணற்ற பழிச் சொற்களையும் ஏற்றது.

தி.மு.க. ஆட்சி அமைந்து இருபது மாதங்கள் ஆகின்றன. இந்த ஆட்சி தமிழர் வாழ்விலே, எங்கும் தமிழ்- என்பதனைத் தன் கொள்கையாக ஏற்றுக் கொண்டு விட்டது. அந்த நாளில் முன்னிருந்த காங்கிரஸ் ஆட்சியை விடவும் முற்போக்காக நடந்து கொண்டுள்ளது முன்னேற்றக் கழக ஆட்சி!

ஆனால், நடைமுறையில் வேகம் இல்லை. இதனை மிகுந்த வருத்தத்தோடு சொல்ல வேண்டி இருக்கின்றது.

தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலேயும் ஆங்கில மொழியின் ஆதிக்கம் ஆங்கிலயேர் – ஆங்கிலேர் காலத்தில்- அதன் பின் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் – இருந்த நிலையிலேயே இன்னும் இருந்து வரக் காண்கின்றோம்.

அரசிதழ் (கெஜட்) தமிழில் வரக் காணோம். அரசாங்க அதிகாரிகளை மக்களோடு தொடர்புபடுத்தும் கடிதப் போக்குவரத்துகள் எல்லாம் இன்னமும் ஆங்கிலத்திலேதான்! தமிழ் வளர்ச்சித் துறையில்கூட இந்த ‘அசிங்கம்’ தொடர்கின்றது.

சட்டமன்றத்திலேயும் ஆங்கில ஆதிக்கம் அன்றுபோலத்தான். மன்றம் கூடுவது பற்றி அங்கத்தினர்களுக்கு அனுப்பப்படும் முன்னறிவிப்பும் , நிகழ்ச்சி நிரலும் தமிழிலும் அனுப்பப்படுகின்றன.
ஆம்; அவையும் தமிழில் மட்டுமே அனுப்பப்படும் நிலைமை இல்லை. அவையன்றி, மற்றவெல்லாம் ஆங்கிலத்தில்தான்! சட்டமன்றத்தின் முன் வைக்கப்படும் குறிப்புகள், மசோதாக்கள், தகவல்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்திலேதான்!

உறுப்பினர்கள் வேண்டுமென்றே ஆங்கிலத்தில் வினாக்கள் எழுப்பினால், அவற்றிற்கு ஆங்கிலத்திலே விடையளிக்கிறார் முதலமைச்சர். இது தேவையற்ற சம்பிரதாயம்.

தமிழ் விரோதிகள் ஆங்கிலத்தில் வினா எழுப்பினாலும் தமிழ்ப் பற்றுடைய முதல்வர் தமிழிலேயே விடையளிக்கலாம். மொத்தத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த நாளிலே நாம் எதிர்பார்த்த வேகம் இருக்க வில்லை. ஆளும்கட்சிக்கு தமிழ் மொழியிடத்துள்ள பற்றுதலை ஆட்சித் துறைக்கு வெளியேதான் அதிகமாக பார்க்க முடிகின்றது.

கல்லூரிப் பயிற்சி மொழிப் பிரச்சினையிலே கல்வி அமைச்சர் ஒரு தனிப் போக்கிலே அதாவது , தமது போக்கிலே செயல்பட்டு வருகிறார். இது திருத்தப்பட வேண்டும். தமிழ் மொழி ஒன்று மட்டுமே அனைத்துக் கல்லூரிகளிலும் பயிற்சி மொழியாக்கப் படுவதற்கு ஐந்தாண்டு காலவரம்பு நிர்ணயித்திருக்கிறது சட்டப்பேரவை. அந்தக் காலவரம்புக்குள் காரியம் நடைபெறுமா என்பது ஐயத்துக்குரியதாகவே இருந்து வருகின்றது.

நிர்வாக ரீதியில் தமிழ் ராஜ்யம் அமைந்ததென்றாலும் அது சுயாட்சியுடையதாக இல்லை. சுயாட்சி இல்லையேல் சுதந்திரம் இல்லை. தி.மு.கழகம், தான் பிறந்தநாள் தொட்டுக் கோரி வந்த திராவிட தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்ட போது, தமிழரசுக் கழகத்தின் கொள்கையான மாநில சுயாட்சியை மனமுவந்து ஏற்றது.

ஆனால், நாட்டுக்கு நன்மை பயக்காத திராவிட நாட்டுக் கோரிக்கையை வலியுறுத்துவதிலே காட்டிய வேகமும் விறுவிறுப்பும் மாநில சுயாட்சிக் கோரிக்கையை வற்புறுத்துவதிலே காட்ட வில்லை. இங்குமங்குமாக ஒன்றிரு சொற்பொழிவுகளிலே அதைப்பற்றி அடிக்கடி குறிப்பிடுவதைத் தவிர, நடைமுறையில் எதையும் செய்ய தி.மு.க.ஆட்சி இதுவரை முன்வரவில்லை.

ஆட்சிப்பீடத்தில் ஏறியபின், தி.மு.க.வைச் சூழ்ந்துள்ள புதிய சங்கடங்களை நாம் மறந்து விடவில்லை. ஆனால், அந்த சங்கடங்களுக்காக இதய கீதமாக உள்ள சுயாட்சிக் கோரிக்கையை ஊறுகாய் போட்டு விடுவதா? சுயாட்சி விஷயத்தில் தமிழக அரசு பொறுமை காட்டி வருவதை காங்கிரஸ் பெருந்தலைவர் திரு.அனுமந்தையா பாராட்டியிருக்கிறார்.

இந்தப் பாராட்டு பழிப்பதுபோலத்தான்!

எப்படியோ, தமிழ் ராஜ்யம் அமைந்த பின்னர் 12 ஆண்டுகள் பயனற்றுப் போய்விட்டன. தமிழ் ராஜ்யக் கோரிக்கையை எழுப்பி, அதில் வெற்றியுங் கண்ட தமிழரசுக் கழகமே ஆட்சிக்கு வந்திருக்குமானால், நிலைமை வேறுவிதமாக இருந்திருக்குமென்பதனை உறுதியாகச் சொல்ல நம்மால் முடியும்.

தி.மு.கழகம் ஆட்சியிலிருப்பதை, தான் இருப்பதுபோலத்தான் கருதுதின்றது தமிழரசுக் கழகம். ஆகவே, கடந்த 20 மாதங்களைப்போல் அல்லாமல், இன்றிலிருந்தேனும் புதிய தமிழகம் படைக்கும் புனிதப் பணியிலே இன்னும் அதிக அளவில் தீவிரம் காட்ட வேண்டுமென்று தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இன்றுள்ள தமிழ்ராஜ்யம் அமைவதற்கு தமிழரசுக் கழகத்தார் ஆற்றிய பணிகளையும் செய்துள்ள தியாகங்களையும் , அடைந்த இன்னல்களையும் தி.மு.க. தலைவர்கள் அறிவார்களாதலால் அவர்கள் நம்முடைய தாட்சண்யமற்ற விமர்சனத்திற்கு மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

வாழ்க தமிழரசு!

– ம.பொ.சிவஞானம்
10.11.1968

தமிழகத்தை திராவிட கட்சிகள் ஏமாற்றுகின்றன

இந்திய விடுதலைப்பின் தமிழகம் நல்ல நிலையை எய்தி இருந்தது. ஒரு பக்கம் வளர்ச்சியும் முன்னேற்றமும் என போட்டி இட்டது. தமிழகத்தை சார்ந்த மூதறிஞர் இராசாசி காந்திக்கு இணையாகவும் கருமவீரர் காமராசர் நேருவுக்கு இணையாகவும் பசும்பொன் முத்துராமலிங்கம் நேதாஜிக்கு இணையாகவும் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் முசுலீம் லீக் பெருந்தலைவராகவும் அறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ வி, சிலம்புச் செல்வர் மபொசி, நாம் தமிழர் என்ற சி. பா. ஆதித்தனார், தோழர் பாலதண்டாயுதம், பி இராமமூர்த்தி என பலரும் தமிழ்நாட்டின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றிருந்தனர்.
அவர்களின் பெயருக்கென ஒரு தனியிடம் இருந்தது. அவர்களில் யாரும் கட்சியை பொருள் குவிக்க பயன்படுத்தவில்லை. அவர்கள் மக்களாட்சி முறைக்கு தோள் கொடுத்தனர். தங்களுக்கு அடுத்து தன் பிள்ளைகள் எனவோ, தன்னைத் தவிர தன்னை எதிர்த்து நின்றவர்கள் அழிந்து போக வேண்டும் என்றோ.. செயலாற்றியதில்லை.

சாதிகளை பேசி தமிழர்களை பிரித்து இலவயங்களை காட்டியோ மக்களை கூறு போட்டு அரசியல் இலாப நட்ட கணக்கு பார்க்கவில்லை. பணக்காரர்களாக பலர் இருக்க இல்லாதவர்களுக்கு எப்படி உதவுவது என திட்டம் தீட்டினர். இரண்டொரு குறைகள் இல்லாமல் இல்லை.
அவற்றில் ஒன்று இந்தியை இராசாசி அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு பாடமொழியாக கொண்டு வந்தது.
இரண்டாவது காமராசர் அவர்கள் ‘மேடாவது குளமாவது.. அது எங்கே இருந்தால் எனன அது இந்தியாவிற்குள்ளே தானே இருக்குது” என தமிழர் நம் நிலம் பகுதிகள் அண்டை மாநிலங்கள் பறித்துக் கொண்டு போக துணை நின்றது.

காரணம் அப்பொழுது தென்னாட்டில் தமிழர்களின் தலைமை மேலோங்கி இருந்தது. நம்மை மீறி அண்டை மாநிலங்கள் என்ன செய்துவிட முடியும்? என்ற எண்ணம்.
இதுவெல்லாம் எப்படி காலம் நெடுக நமக்கு கைகொடுக்கும் என்ற தொலை நோக்கு இல்லாமல் எடுத்த முடிவுகளாயின.

இதனூடே திராவிட குறுக்கு சால்களை ஓட்டியவர்களின் ஆட்சி அரசியல். ஒருவழியாக முன்னேறிக் கொண்டிருந்த தமிழகத்தை சாதி ஒழிப்பு உத்தமர்களால் தமிழ்நாடு ஒற்றுமை இல்லாத மாநிலமாக ஆகி திராவிட பயிர் நடவு மும்முரமாகி களை எது பயிர் எது எனத் தெரியாதவர்களால். தமிழ்நாடே களைகளால் பயிர் மூழ்கிப் போனது.
உழைப்பில்லாத பகுத்தறிவு சோறு போடுமா? சாதி இல்லையென செய்தொழிலே இல்லாமல் போனால் வாழ்வது எப்படி?
சிந்திக்காமல் போனது தமிழ்நாடு.
பேருந்துகளை எல்லாம் அரசுடமை ஆக்குகிறோம் என்று முதலாளிகளை ஒழித்தவர்களே முதலாளிகளானார்கள்.

மக்களுக்கான கல்வியை அரசும் வசதி படைத்தவர்களும் தங்களுக்கு பெருமை வர வேண்டும் என்பதற்காகவே மக்களுக்கு நடத்திய கல்வியை பிறர் பலரிடம் தந்து வணிக பொருளாக்கி ஏழைகள் இயலாதவர்களின் துன்பத்தில் மகிழ்ந்தார்கள்.

மன்னரை ஒழித்தவர்கள் அவர்களின் உதவித்தொகையையும் ஒழித்தோம் என்றவர்கள் தங்களே மன்னர்களாகி தன் உறவுகளுக்கு முடி சூட்டி மகிழ்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் மக்களட்சி மக்களை ஏமாற்றவும் வாக்குகளை காசுக்கு விற்கவும் கூப்பிட்ட போதெல்லாம் கூட்டமாக வரவும் பழக்கப்படுத்தி விட்டனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மும்மொழி திட்டத்தில் இந்தி இருக்கின்றதே எனச் சொன்னவர், இருமொழி திட்டம் என சொல்லி முதயல் மொழி தாய்மொழி (தமிழ்மொழி என உறுதி படுத்தாமல்) எனவும் இரண்டாம் மொழி ஆங்கிலம் எனவும் சட்டமிட்டதால் தமிழ் நாட்டில் உள்ளவர்களின் தாய்மொழிகளில் ஒன்றாக தமிழை வரிசையில் நிற்க வைத்து, ஆங்கிலம் மட்டும் அசைக்க முடியாத இடத்தில் நிற்க வைத்தார்.
அவருக்கு பின்னால் வந்தவர்களால் தமிழ் நாடு பல சிக்கல்களில் இருந்து மீளாத நாடாக இருக்கிறது. போதை மயக்கத்தை தந்து சிந்தனை அற்றவர்களாக ஆக்கினர். ஏற்கென காற்றுக்கும் மழைக்கும் தாங்காதவர்களான நம் தமிழ்க்குடிகள் புயலுக்கும் துயருக்கும் அழ.. ஒன்றுமே தெரியாதது போல் பேசியவர்களே மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.. தேறுமா தமிழ்நாடு?

இப்பொழுது, கர்நாடகம் மீண்டும் ஒரு அணைக்கட்டு ஆணை பெற்றுள்ளது. இதுவரை கட்டிய அணைகள் போதாது என்று!

தமிழ் நாட்டின் சார்பில் பதினெட்டு பாராளுமன்ற மேலவை உறுப்பினர்களும் கீழவையில் முப்பத்தொன்பது உறுப்பினர்களும் இருக்கின்றார்களே.. அவர்கள் எல்லாம் என்ன வேலை செய்கிறார்கள்? நமக்கு மாநில அமைச்சரவை இருக்கின்றதே அது என்ன செய்கிறது?
ஏற்கெனவே நமக்கு செய்த இடையூறுகளை தான் திராவிட கட்சிகள் பொது சண்டையாங்குவது வழக்கம். அதே மேடை. அதே நாடகம். அதே ஒத்திகை தொடங்கிவிட்டது. தங்களுக்குள்ளான திறமை இன்மையை பேச்சு போட்டி பட்டிமன்றமாக்கி தோல்வியை தரப்போகின்றன.

சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையேல் இதுவரை விடாத ஏதாவது ஒன்று இருக்கும் என நாம் நினைத்தால் அதையும் விற்றுவிட்டு, தங்களின் அரசியல் பேச்சுகளை தொடருவார்கள் என்பதை உணர்ந்து தமிழர் நாம் செயல்பட ஒன்றுபடுவது நல்லதாக்கும்!
வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

மொழிவழி மாநில வரலாறு அறிவோம்!

1895இல் மொழிவழி மாகாணம் கேட்டு முதன்முதலில் போராடியவர்கள் ஒரியர்கள். ஒரிய தேசத் தந்தை மதுசூதன் தாஸ் தலைமையில் அவர்கள் போராடி 1935இல் ஒரிசா என்ற பெயரில் தனி மாகாணம் கண்டனர். அதுபோலவே 1906 முதல் தனி மராத்திய கோரிக்கையும் வலுப்பெற்றது.

1919இல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்த திலகரும் கூட தனி மராத்திய கோரிக்கையையும் சேர்த்தே எழுப்பி வந்தார். காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி இயங்கிய போது மொழிவழி மாகாண கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தது.

1921இல் மொழிவழி அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதோடு அதற்கு சுயாட்சியும் வழங்க வேண்டும் என்று 1924இல் பெல்காமில் கூடிய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி பிரதேசங்கள் ஒன்றாக இயங்கி வந்த போது 1915 இலிருந்து ஆந்திரர்கள் தான் முதன் முதலில் தனி மாகாணம் கேட்கத் தொடங்கினர். 1921இல் தனி ஆந்திர காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்ட பின்னர் எல்லைச் சிக்கல் ஏற்பட்டது.

திருப்பதிக்கு தெற்கே உள்ள தமிழகப் பகுதிகளும் தங்களுக்கே சொந்தம் என்று ஆந்திரர்கள் வாதிட்டனர். திருப்பதி, திருத்தணி, சித்தூர் ஆகிய. மூன்று தாலுக்காக்களையும் தமிழ்நாடு காங்கிரசில் சேர்க்கப்பட வேண்டுமென்று சத்திய மூர்த்தி ஐயர் கோரினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆந்திர காங்கிரசுக்கு மேற்படி தாலூக்காக்கள் தாரை வார்க்கப்பட்டது.

1926இல் மத்திய சட்டப்பேரவையில் சி.சங்கரன் நாயர் என்பவர் சென்னை மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் பத்து மாவட்டங்களை தனியாகப் பிரித்து சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

1937இல் இராசாசி அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை மேற்கண்ட போது தமிழ்நாடு தனி மாகாண கோரிக்கையை தமிழறிஞர்கள் எழுப்பினர். இந்தி திணிப்பிற்கு எதிராக பெரியாரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். போராட்டம் தீவீரமடைந்த நிலையில் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்தது. பெரியார் அந்த முழக்கத்தை “திராவிட நாடு திராவிடருக்கே” என்று திசை மாற்றினார். தமிழ்நாடு மாகாணக் கோரிக்கை காணாமல் போனது.

அதற்குப் பிறகு 1946இல் தமிழ்நாடு மாகாணக் கோரிக்கைக்கு புத்துயிர் தந்தவர் ம.பொ.சிவஞானம் ஆவார். மொழிவழித் தமிழகம் அமைக்கக் கோரியும், தமிழக எல்லைகளை மீட்கக்கோரியும் தெற்கெல்லையில் மார்சல் நேசமணி தலைமையிலும், வடக்கெல்லையில் ம.பொ.சி., மங்கலங்கிழாரின் ஒன்றுபட்ட தலைமையிலும் தமிழர்கள் விடாது போராடி வந்தனர். 1.11.1956இல் மொழிவழித் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.

இருப்பினும், தமிழர்களின் வரலாற்று வழி வந்த கோலார், கொள்ளேகால், நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, உடுமஞ்சோலை, செங்கோட்டை வனப்பகுதி, கண்ணகி கோயில், தேவி குளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், புத்தூர், நகரி, ஏகாம்பரம் குப்பம், ஆகிய பகுதிகளை தமிழகம் இழந்ததால் காவிரி நீருக்கும், முல்லைப் பெரியாற்று நீருக்கும், பாலாறு நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வந்து விட்டது.

மா.பொ.சி. அவர்களால் சென்னை, திருத்தணியும், நேசமணி அவர்களால் கன்னியாகுமரியும் தமிழனுக்கு கிடைத்த ஆறுதல் பரிசாகும். மா.பொ.சியின் தமிழரசுக் கழகமும். நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும் போராடியிருக்கா விட்டால் மொழிவழித் தமிழ்நாடு கிடைத்திருக்காது. அன்றைய காங்கிரசு அரசும், திராவிட இயக்கங்களும் தனியாக போராட்டம் நடத்த மறுத்த செயல் தமிழக வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகவே உள்ளது. 1946 முதல் 1960 வரை வீறு கொண்டெழுந்த தமிழக எல்லைப் போராட்டங்கள் குறித்து இன்றளவும் காங்கிரசும், திராவிட இயக்கமும் பேசுவதில்லை.

தற்போது தில்லியில் ஆட்சி நடத்தும் பாரதீய சனதாவாகட்டும், முன்பு ஆண்ட காங்கிரசாகட்டும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் ஒன்றுபட்டு செயல்படுவதை நாமறிவோம்!

தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும் இன்றைய சோனியா காங்கிரசு விசுவாசம் காட்டுவது போலவே அன்றைய நேரு காங்கிரசும் விசுவாசம் காட்டியது. தமிழக காங்கிரசை வழி நடத்திய காமராசரும் தேசிய சிந்தனையுடன் தமிழக எல்லைகளை மீட்பதில் அக்கறையற்றவராகவே காணப்பட்டார்.

தில்லியின் ஆசிர்வாதத்தோடு ஆட்சி நடத்திய இராசாசி கூட, “சென்னையை ஆந்திராவிற்கு தமிழகம் துறக்குமானால் நான் பதவி துறப்பேன்” என்று பேசினார். காமராசரோ இந்திய தேசம் என்ற ஒற்றை கொள்கையில் பிடிவாதமாக இருந்து கொண்டு “குளமாவது மேடாவது” என்று தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை விட்டுக்கொடுத்தார்.

சங்கரலிங்கனார் நடத்திய “தமிழ்நாடு” பெயர் சூட்டும் போராட்டத்தை கண்டு கொள்ள மறுத்தார். எனினும் தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பியிருந்தார். அண்ணா தலைமையிலான ஆட்சி அமைந்த போதே இதற்கான ஒப்புதல் கிடைத்தது. எல்லை ஆணையம் அமைக்கக் கோரி இயக்கம் நடத்திய ம.பொ.சி.யை கட்சியிலிருந்தும் நீக்கினார். அன்றைய காங்கிரஸ் கட்சியிலிருந்து தெலுங்கர்களின் ஆதிக்கம் மற்றும் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் போன்றவற்றுடன் நெருங்கியிருந்த இராசாசி போன்றவர்களால் ம பொ சி க்கு மறைமுகமாகவே உதவ முடிந்தது என்று தகவல்கள் உள்ளது. நேசமணிக்கும் இதே நிலை தான். மலையாள சமஸ்தான காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்தார். நேசமணியின் விருப்பமான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை சென்னை மாகாண காங்கிரசோடு இணைக்க மறுத்தார். அவரது விருப்பமில்லாததற்கு காரணமே நல்ல நிலையிலிருந்த கன்னியாகுமரியை பின்தங்கியிருக்கும் தமிழகப்பகுதியுடன் இணைக்க வேண்டுமா என்ற குழப்பமே. இருப்பினும் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கிணங்க காமராசரின் தலைமையிலேயே குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இன்று வரை தனது சாதியினர் அதிகமிருந்ததனாலேயே குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்தார் என்ற பழிச்சொல்லுக்கும் குறைவில்லை.

எல்லை மீட்புப் போருக்கு காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சி தீமை செய்தது ஒருபுறம் என்றால், திராவிடக் கட்சிகளின் திராவிட நாடு கோரிக்கையும், மறுபுறம் தீமை செய்தது. தமிழ்நாடு மாகாண கோரிக்கையை திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகவே பெரியார் கருதினார். அதே வேளையில் விசாலா ஆந்திரா, ஐக்கிய கேரளம், சம்யுக்த கர்நாடகம் என்று முழக்கம் எழுப்பிய தெலுங்கர்களையோ, மலையாளிகளையோ, கன்னடர்களையோ, திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகக் கருதி பெரியார் கண்டிக்க மறுத்தார்.

தி.க.விலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்ட அண்ணாவும் திராவிட நாடு கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்திருந்தும் எல்லைப் மீட்புப் போரை முன் நின்று நடத்த ஓடோடி வரவில்லை.

அண்ணாவோடு மாறு பட்டு 1956இல் திராவிட நாடு விடுதலையை கைவிட்டு, தமிழ்நாடு விடுதலைக்கு போராடுவதாக அறிவித்த பெரியாரும் வடவேங்கடம், திருத்தணி மீட்பு போரில் மவுனம் காத்து வந்தார். கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல தாய் மண்ணை விற்று தமிழ்நாடு வாங்க முடியாது என்பதும் உண்மை.

வடக்கெல்லைப் போரில் இரண்டு பேர் சிறையிலும், தெற்கெல்லைப் போரில் ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான கதை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்! தங்கள் பங்களிப்பு இல்லாத காரணத்தால் திராவிட இயக்கங்கள் இந்த வரலாற்றை மூடி மறைக்கவே நினைக்கின்றன.

மொழிவழி கர்நாடகம் அமையப் பெற்ற நவம்பர் ஒன்றாம் நாளில் கன்னடர்கள் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடத் தவறுவது இல்லை. கன்னடர்கள் சிவப்பு மஞ்சள் நிறம் கொண்ட கன்னடக் கொடிகளை தங்கள் இல்லங்களில், தெருக்களில், அலுவலகங்களில் பறக்க விடுவர். ஆடியபாடியும் பாடிய படியும் கன்னடர் எனும் இனவுணர்வோடு மகிழ்ச்சி கொள்வர். இதனை கன்னடர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

காலங்காலமாக அண்டை தேசங்களாலும், தில்லி அரசாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் அவல நிலையை இனியும் தொடர தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. இழந்த மண்ணை மீட்கவும், இருக்கும் மண்ணை காத்திடவும், இறையாண்மை கொண்ட தமிழ்நாடு விடுதலை பெறவும் தமிழர் தாயக நாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்!

தமிழ்நாடு தினம்

இன்று நமது இன் தமிழ்நாடு எழுந்த நன்நாளே!

தேடிய பொருளென திசை தோறும் வைத்த இனம்

தேய்ந்தழிந்து போனதென இங்கு லந்தோர்கள் நினைத்த போழ்து இல்லை நான் இருக்கிறேன் எனச் சொல்லி
எழுந்தது தான் எம் இன்தமிழ் நாடே.. இருக்க நீ வாழ்க! வாழ்க!*

பாவலர்
மு இராமச்சந்திரன்
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

கெட்டிபொம்முலு என்ற கட்டபொம்மன்

3 ஆண்டுகளுக்கும் மேலாக தேடி ஒரு வழியாக இந்த புத்தகத்தை வாங்கி படித்து விட்டேன்.

நாம் திரையில் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கும் இந்நூலில் சொல்லப் பட்டிருக்கும் பல செய்திகள் நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கின்றன. முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு என்பது. பலபேர் இன்று வரை கட்டபொம்மனை பச்சைத் தமிழன் என்றே போற்றிப் பரப்புரை செய்து வருகிறார்கள்.

கட்டபொம்மனின் பரம்பரை பின்வருமாறு,
· காட்ர கட்ட பிரமையா – குலமுதல்வன்
· கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்மன் – கொள்ளுப் பாட்டன் (காலம் 1709 – 1736)
· பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் – பாட்டன் (காலம் 1736 – 1760)
· இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் – தந்தை (காலம் 1760 – 1790)
· வீரபாண்டிய கட்டபொம்மன் – கதை நாயகன் (காலம் 1790 – 1799)

இந்த தலைமுறையிலும் எந்த ஒரு கட்டபொம்மனும் வெள்ளையரை எதிர்க்க பயந்தவர்களே. அதற்க்கு தமிழ்வாணன் அவர்கள் நிறைய மேற்கோள்கள் காட்டியுள்ளார். மேலும் இவர்கள் தங்களை சுற்றியுள்ள சிறு கிராமங்களை கொள்ளையடிப்பதையே முழுநேர தொழிலாய் கொண்டிருக்கிறார்கள்.

வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கும் (கடைசி கட்டபொம்மன்) வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே தர விரும்புகிறேன்.

திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன் வரிகட்டச் சொல்லி வீரபாண்டியக் கட்ட பொம்மனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். வீரபாண்டியக் கட்டபொம்மனோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக்கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார். ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்மன் குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்மன் தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பிவிடுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திப்பதற்காக அவரை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார் அங்கும் கட்டபெம்மனை பார்க்க ஜாக்சன் மறுத்துவிடுகிறான். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்மனும் ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்ட பொம்மனை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.

இறுதியில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து வரிகட்டாமையைப் பற்றி விளக்கம் கொடுத்து தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டு வந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்மன் மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்கவேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்மன் அஞ்சி அங்கிருந்து தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளையன் கொலை செய்யபடுகிறான்.

இந்த நிகழ்வு கட்டபொம்மனை வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார். அப்படி என்றால் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் அதாவது கட்டபொம்மனைத் தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.

கட்டபொம்மனை பற்றிக் கூற ஆரம்பித்ததில் இருந்தே கட்டபொம்மன் தன்னுடைய பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது ‪‎கொள்ளையடித்து வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார் தங்கள் பாளையத்தில் கட்டபொம்மன் கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார். அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்மன் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற்களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்மனை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார்.

கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க அஞ்சு நாட்களைக் கடத்துகிறார். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்மன் தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே என்கிறார். கட்டபொம்மனைப் பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்திடம் இருந்து நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்மன் புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்மனைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் காட்டி தூக்கில் போடுகிறார்கள்.

எனக்குள்ள வருத்தம் என்னவென்றால், வெள்ளைக்காரனுக்கு பணிந்து சென்ற ஒருவரை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று உண்மையை மறைத்து வீரனாக திரித்து, ஒரு வரலாற்றையே அடுத்த தலைமுறைக்கு தவறாக காட்டப்பட்டது.

திரைப்படத்தில் வரும் எட்டப்பன் என்ற ஒருவனைத் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்ற ஒருவனைக் காட்டியுள்ளது. ஆக, கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் ‎வரலாற்றுப் பிழையாகவே இருக்கிறது.
தமிழர்கள் அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.

“வெள்ளையனுக்கு அடிமைப்படாத ஒரு சுதந்திர அரசுக்கு அதிபதியாக இருந்திருந்தால், கட்டபொம்மன் கலெக்டரைக் காணப் போயிருக்க வேண்டியதில்லை. கலெக்டரின் ஆணையை அவன் ஆண்மையுடன் மறுத்து நின்றிருக்கலாம். அவன் என்றுமே கும்பினிக்கு வரி செலுத்தாதவனாக இருந்தால், புதிதாக வந்து வரி கேட்பவர்களிடன் கொடுக்க முடியாது என்று உறுதியுடன் கூறியிருக்கலாம். அவன் எழுதியுள்ள எந்த ஒரு கடிதத்திலும், கட்டபொம்மன் ஆங்கிலக் கும்பினியின் மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை. வரி கொடுக்க முடியாது என்றும் சொல்லவில்லை. அதற்கு மாறாக, வரி செலுத்துவதற்கு தவணைகள் தாம் கேட்டிருக்கிறான் அல்லது சாக்குப்போக்குகள் சொல்லி வந்திருக்கிறான்” (பக்கம் 159)

கட்டபொம்மனின் கோழை மற்றும் கொள்ளைத்தனத்தை விரிவாக எடுத்துக்கூறிய தமிழ்வாணன் அவர்கள், புலித்தேவனின் வீரத்தையும் அங்கங்கே பதிவு செய்திருக்கிறார். மேலும் பக்கம் 89, 90ல் அவர் புலித்தேவனைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளதாகவும் அதை தனியாக ஓர் புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் நான் தேடிய வரை அப்படியொரு புத்தகம் எனக்கு அகப்படவில்லை.

இதில் இன்னொரு சுவாரிஸ்யமான தகவல் கம்மந்தான் கான்சாஹிப் பற்றியது. மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முஹமதியனாக மதம் மாறிய மாவீரன் தான் கம்மந்தான் கான்சாஹிப். 1760களில் இவன் மதுரை கவர்னராக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டவன் (பக்கம் 91). இவன் கதையைத்தான் திரு.கமல்ஹாசன் அவர்கள் மருதநாயகம் எனும் திரைப்படமாக எடுக்க முயற்சிகள் எடுப்பதாக செய்திகள் வருகின்றன.

இறுதியாக…

16-10-1799 அன்று கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு தூக்கிலேற்றப்பட்டான், அவன் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் அல்ல, தான் செய்த கொலை கொள்ளைகளை ஒப்புக்கொண்டமையால்.
திரு.குருகுகதாசப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம் என்ற நூலில் இருந்து நிறைய மேற்கோள்கள் தமிழ்வாணன் அவர்களால் இந்த புத்தகத்தில் காட்டப்பட்டுள்ளது.

திரு.ம.பொ.சி யின் வீரபாண்டிய கட்டபொம்மன் நூலுக்கு மறுப்பு தெரிவிக்கும் நூலாக தமிழ்வாணன் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் உண்மை வரலாறை மக்களுக்கு தெளிவு படுத்தும் தமிழ்வாணன் அவர்களின் இந்த முயற்சிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.