சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும்!

அறிக்கை: சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

https://bit.ly/3izldyk

சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அத்தடை தற்காலிகமானதாகவும், அவ்வுத்தரவு வாய்மொழியாகவும் இருப்பது பல்வேறு ஐயங்களுக்கு வித்திடுகிறது.

தமிழகக் காவல்துறையினரின் உதவிகளுக்குக் கூடுதலான ஆட்கள் தேவைப்படுகிறார்களென்றால், அதற்குக் கூடுதல் காவலர்களை நியமிக்கச்செய்வது அல்லது ஊர்க்காவல் படையினரை உதவிக்குப் பயன்படுத்திக் கொள்ளச் செய்வது போன்றவற்றையே அரசு வழிகாட்ட வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் ஒரு உட்பிரிவைக் காவல்துறையே உருவாக்கி, அவர்களுக்குக் காவலர்களுக்கு இணையான அதிகாரங்களை வழங்கி, வரம்பு மீறவும், அத்துமீறவும், சிறுவணிகர்களிடம் பணம் பறிக்கவும், காவல்நிலையத்தில் சிறைப்படுத்தப்படுபவர்களைத் தாக்கவும்கூட பயன்படுத்தி வருகிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது. அதிலும் ‘சேவா பாரதி’ எனும் மதவாத அமைப்பினரை ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பிரிவாக வைத்துச் செயல்பட்டிருப்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறிய சட்டவிரோதமாகும். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டு இயங்கும் பன்மைத்துவம் மிகுந்த சனநாயக நாட்டின் நிர்வாகப்பிரிவில் ஒரு மதவாத அமைப்பை ஊடுருவ வழிவகை செய்திருப்பது மிகப்பெரிய நிர்வாகச்சீர்கேடாகும்.

‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் இவர்களுக்கும், மக்களுக்குமான தொடர்பென்ன? இப்பிரிவினருக்கான அதிகார வரம்பென்ன? அவர்களின் வேலைத்திட்டங்கள் என்னென்ன? அவர்களுக்கான சீருடை என்ன? அவர்களுக்குரிய பணிநேரம் எவ்வளவு? அவர்களுக்கான ஊதியம் என்ன? அது எதனை வைத்து வழங்கப்படுகிறது? அதற்கான நிதியாதாரமென்ன? இப்பிரிவைக் காவல்துறையினரே உருவாக்கி நிர்வகித்துக்கொள்ள சட்டத்தில் இடமுண்டா? எனும் எக்கேள்விக்கும் இதுவரை விடையில்லை. ஆனால், தமிழகம் முழுமைக்கும் இப்பிரிவு காவல்துறையினரின் துணைப்பிரிவு போல அதிகாரப்பூர்வமற்று, அரசின் அனுமதியோடே இயங்கியிருப்பது மக்கள் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் கொடுஞ்செயலாகும். சட்டத்திற்குப் புறம்பாக இவ்வாறு ஒரு பிரிவை காவல்துறையினரே உருவாக்கி, அவர்கள் அத்துமீறலில் ஈடுபட வழிவகை செய்திருப்பது மிகப்பெரும் சட்டவிரோதமாகும்.சாத்தான்குளம் வணிகர்களின் படுகொலைக்குப் பிறகு, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் அப்பிரிவுக்கெதிராகக் கண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு ஒரு சில மாவட்டங்களில் தற்காலிகத்தடை விதிக்கப்பட்டிருப்பதும், அதற்கான உத்தரவையும் வாய்மொழியாகவே அறிவித்திருப்பதும் மக்களின் கோபஅலையைத் தணிப்பதற்கான ஒரு யுக்திதானே ஒழிய, அது தீர்வுக்கான வழியல்ல! இவ்வளவு கொதிநிலையிலும் சென்னையில் அப்பிரிவுக்குத் தற்காலிகத்தடை விதிக்கப்பட மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே, காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுமைக்கும் ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் சட்டவிரோதப் பிரிவை மொத்தமாகக் கலைக்க உத்தரவிட்டு, அதனைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும், காவல்துறையினரின் உதவிகளுக்கு ஊர்க்காவல்படையினரைப் பயன்படுத்தவும், கூடுதலான காவலர்களை பணிக்கு நியமிக்கவுமான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் தமிழக காவல் துறை செய்த இரண்டு முக்கிய குற்றங்கள்

சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் தமிழக காவல் துறை செய்த இரண்டு முக்கிய குற்றங்கள்

  • பொய்யாக தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) காவல்துறை ரோந்து செல்லும் போது, தந்தை மகன் இருவரும் காவலருடன் சண்டை போட்டு வேண்டுமென்றே தரையில் விழுந்து புரண்டதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் கடைக்கு அருகே இருந்த மற்றொரு கடையில் இருந்த சிசிடிவி மூலமாக அங்கு எந்தவித சண்டையும் நடைபெறவில்லை என்பதும், கடையின் வெளியே நின்று கொண்டிருக்கும் காவலர்கள் தந்தை ஜெயராஜ் அவர்களை மட்டும் முதலில் தனியாக வாகனத்தில் அழைத்து செல்கிறார்கள் என்பதும் அதன் பிறகு மகன் பென்னிக்ஸ் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பி செல்கிறார் என்பது நிரூபணமானது !
  • முதல் தகவல் அறிக்கையில் பட்டப்படிப்பு பெற்ற பென்னிக்ஸின் கையெழுத்து இடம்பெறாமல் கைரேகை இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவரை அடித்து கொன்ற பிறகோ அல்லது அவர் சுயநினைவை இழந்த சமயத்திலோ அவரது கைரேகையை எடுத்து அவசர அவசரமாக இந்த போலியான முதல் தகவல் அறிக்கையை தயாரித்து வைத்துள்ளனர்.

https://bit.ly/2NQkASF

இந்த சமயத்தில் நாம் மிக முக்கியமாக பார்க்கவேண்டியது, இரட்டை படுகொலையை திட்டமிட்டு நடத்திய காவல்துறையை காப்பற்ற தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கொலை நடத்த சில மணி நேரங்களில் ஊடகங்களில் அவசர அவசரமாக தந்தை மகன் இருவரும் மூச்சு திணறலில் இறந்துள்ளனர் என்று பேட்டி கொடுத்தது ஏன் ???

இந்த திட்டமிட்ட படுகொலை வழக்கில் சதிச்செயலை மறைத்து திசை திருப்பிய குற்றத்துக்காக எஸ்பி அருண் பாலகோபாலன், தமிழக முதல்வர் மற்றும் இது லாக் அப் மரணம் அல்ல என்று சொன்ன அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகிய மூவரையும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 201/202 (குற்றவாளியை காப்பாற்றும் வகையில் நடந்ததை திசை திருப்ப முயற்சி செய்வது) கீழ் இணைத்து விசாரணையில் சேர்க்கப்படவேண்டும் !!!

செய்யுமா மாண்புமிகு மக்களின் அரசு… ??? சாத்தான்குளம் JusticeForJayarajandBennicks

சாத்தான்குளம் இரட்டைக்கொலை – மின்னம்பலம் தொகுப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் போலீஸாரால் தாக்கப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சப்ஜெயிலில் இறந்த சம்பவம் காவல் துறையில், மருத்துவத் துறையில், நீதித் துறையில், அரசியல் துறையில் சமூகத் துறையில் என்று பல்வேறு வடிவங்களில் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

இந்த சம்பவத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் செல்போன் கடையில் இருந்து சாத்தான்குளம் காவல் நிலையம் வரை முதல் படலம், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் வரை இரண்டாம் படலம், மாஜிஸ்திரேட் சரவணனிடம் இருந்து கோவில்பட்டி கிளைச் சிறை வரை மூன்றாம் படலம் என்று இதைப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த சம்பவத்தின் நீள அகலம், ஆழ உயரம் பற்றி பல்வேறு தரப்பினரிடையே மின்னம்பலம் டீம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களைத் தொகுத்துத் தருகிறோம்.

யார் இந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்?

சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவில் சாதாரண ஓர் ஓட்டு வீட்டில் வசிப்பவர் ஜெயராஜ். மர வியாபாரி, குறிப்பாக பனைமரக் கட்டைகளை விற்பனை செய்பவர். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மூன்று மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார். மகன் பென்னிக்ஸ்

எம்.எஸ்.டபிள்யூ படித்திருக்கிறார். (மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ்). சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் ஏபிஜெ என்ற பெயரில் ஒரு செல்போன் கடை வைத்திருக்கிறார். சாதி மத பேதம் பார்க்காமல் எல்லாரிடமும் போலீஸார் உட்பட நன்றாக பழகக் கூடியவர் பென்னிக்ஸ் என்கிறார்கள் ஊரில். செல்போன் கடை என்பதால் பலர் வந்து போவார்கள். யாரிடமும் முகம் கோணாமல் கனிவாக பேசக் கூடியவர் பென்னிக்ஸ். யாருக்காவது ரத்தம் கொடுக்க வேண்டும் என்று போன் வந்தால் உடனே கடையை மூடிவிட்டு ரத்தம் கொடுக்கச் சென்றுவிடுவார். ரத்த தானத்தில் அவ்வளவு ஈடுபாடு மிக்கவர். இதுவரை பல முறை ரத்த தானம் கொடுத்திருக்கிறார்.

செல்போன் கடைதான் வாழ்வாதாரம் என்ற நிலையில் பென்னிக்ஸுக்கு திருமணமும் பேசிக் கொண்டிருந்தார்கள். நாசரேத்தை சார்ந்த ஒரு பெண்ணை சில மாதங்கள் முன்புதான் பேசி முடித்திருக்கிறார்கள். கொரோனா சீசன் என்பதால் திருமணத்தை டிசம்பரில் வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அதற்குள்ளாகவே இப்படி ஆகிவிட்டது. நாடார் சமூகப் பிடிப்பும் ஒற்றுமையும் அதிகம் உள்ள சாத்தான்குளத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் மறைவுக்கு தேவர் சமுதாயம் சார்பில் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பென்னிக்ஸின் பழக்கவழக்கத்துக்கு உதாரணம்.

செல்போன் கடை டு காவல் நிலையம்!

ஏபிஜெ செல்போன் கடைக்கு எதிர் சாரியில் எப்போதுமே சில ஆட்டோக்கள் நின்றிருக்கும். அந்த ஆட்டோக்கள் அவ்வப்போது மொபைல் பார் ஆகவும் அவதாரம் எடுப்பதுண்டு. அந்த வகையில் அந்த ஆட்டோவுக்குள் சாத்தான்குளம் போலீஸ் நிலைய காவலர்கள் சிலரும் எப்போதாவது மது அருந்துவதுண்டு. இதை அடிக்கடிப் பார்த்து கோபமாகும் ஜெயராஜ், தனது வாய்க்கு வந்தபடி அவர்களைத் திட்டி வைப்பார் என்கிறார்கள். சம்பவம் நடந்த ஜூன் 19ஆம் தேதிக்கு சில நாட்கள் முன்னர், ஒரு மாலை நேரத்தில் செல்போன் கடைக்கு எதிரே ஆட்டோவில் அமர்ந்து மது அருந்திய போலீஸ்காரரையும் அதேபோல திட்டித் தீர்த்திருக்கிறார் ஜெயராஜ். போகப் போக அவரது பேச்சில் வார்த்தைகள் தடிக்கவே , அதை செல்போன் கேமரா மூலம் படம் பிடித்திருக்கிறார் அந்த போலீஸ்காரர். அன்று ஜெயராஜ் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் என்று எல்லாரையும் சகட்டுமேனிக்குத் திட்டியிருக்கிறார். அந்த போலீஸ்காரர் செல்போனில் படம் பிடித்த அந்தக் காட்சியை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும், சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் ப்ளே செய்து காட்டியிருக்கிறார். அந்தக் காட்சிகளைப் பார்த்ததுமே கடுமையான கோபம் வந்திருக்கிறது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு.

இவனைக் கொஞ்சம் பார்த்துக்கங்க என்று சப் இன்ஸ்பெக்டர்களிடம் சொல்லியிருக்கிறார். சில நாட்கள் கழித்து 18ஆம் தேதி மாலை 7 மணி அளவில் பழைய பஸ் நிலையம் அருகே சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், ஜேசுராஜ் ஆகியோர் பேட்ரல் வாகனத்தில் வந்திருக்கிறார்கள். ஜெயராஜின் செல்போன் கடை வழியாக மெல்ல மெல்ல சென்றுகொண்டே கடைகளை மூடும்படி அறிவித்துக் கொண்டே செல்கின்றனர். ‘இதோ அடைச்சுடுறேன் சார்’ என்று சொல்லிக் கொண்டே கடையை அடைத்துவிட்டார் பென்னிக்ஸ். அப்போது கடையில் ஜெயராஜும் இருந்தார். ஆனால் மகன் பென்னிக்ஸும் இருந்ததாலோ என்னமோ போலீஸார் சென்றுவிட்டார்கள்.

மறுநாள் 19ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் கடையில் ஜெயராஜ் இருந்தார். பென்னிக்ஸ் பக்கத்தில் சென்றிருந்திருக்கிறார். அன்றைக்கும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், முத்துராஜ், ஜேசுராஜ் உள்ளிட்டோர் பேட்ரலில் வந்திருக்கிறார். கடை மூடவில்லையா என்று போலீஸார் கேட்க, ஜெயராஜ் அதற்குப் பதில் பேசியுள்ளார். ஏற்கனவே ஜெயராஜ் மீது கோபத்தில் இருந்த போலீஸார், இன்றும் அவர் வாக்குவாதம் செய்வதைப் பார்த்து கோபமாகியுள்ளனர். பேசிக் கொண்டிருக்கும்போதே, ‘நீ ஸ்டேஷனுக்கு வா’ என்று அவர் சட்டை காலரைப் பிடித்து வண்டியில் ஏற்றியுள்ளனர். கடுமையான வசைச் சொற்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் போலீஸார். இதைப் பார்த்துக்கொண்டே பென்னிக்ஸ் கடைக்கு வந்துவிட, என்ன ஏது என விசாரித்துள்ளார். ‘உங்க அப்பாவை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போறோம். நீயும் வா’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். இதில் இருந்து போலீஸாரின் கோபம் ஜெயராஜ் மீது மட்டுமே என்பது தெரிகிறது.

அப்பாவை போலீஸார் வண்டியில் ஏற்றிச் செல்வதைப் பார்த்த பென்னிக்ஸ் தனது நண்பர்களான ராஜாராம், கல்யாண சுந்தரம், ஆண்டன் பிரகாஷ் ராஜா ஆகியோருடன் இரவு 7.00 மணியளவில் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்.

காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

சாத்தான்குளம் மெயின் ரோட்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டரில் அரசு மருத்துவமனை, கோர்ட், வட்டாட்சியர் அலுவலகம் என்று கடைசியாக காவல் நிலையம் அமைந்திருக்கும். அந்தப் பகுதியில் நின்று சத்தம் போட்டால்கூட ஊருக்குக் கேட்காது. அவ்வளவு உள்ளடங்கிய பகுதி அது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஷீட் தீர்ந்து போய்விட்டது. அதனால் எஃப்.ஐ.ஆர். வரிசை எண் கொடுக்கப்பட்டு இரவு 10.00 மணிக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் ஏட்டு முருகன்தான் புகார் கொடுத்தவர். அதைப் பெற்றவர் எஸ்.ஐ. ரகுகணேஷ். கடையை ஏன் மூடவில்லை என்று கேட்டதற்கு போலீஸை திட்டிக்கொண்டே இருவரும் தரையில் விழுந்து புரண்டார்கள் என்றும், போலீஸாரை அடித்துக் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாகவும் ஏட்டு முருகன் புகார் கொடுத்திருந்தார். அதன்படியே அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விட்டது என்று 188, 269, 294 பி, 353, 506(11) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்கள்.

அதாவது 7.00 மணிக்கு ஜெயராஜ் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னாலேயே அவரது மகன் பரபரப்பாக ஓடிச் சென்றிருக்கிறார். அப்போது ஜெயராஜை 59 வயதானவர் என்றும் பாராமல் போலீஸார் தாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பென்னிக்ஸுக்கு தன் தந்தை மேல் பாசம் அதிகம். மர வியாபரத்தை விட்டுவிட்டு செல்போன் கடையில் உட்கார்ந்து வேலை பார் என்று சொல்லக் கூடியவர். அப்படிப்பட்டவரை போலீஸார் தாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து டென்ஷனாகி, ‘சார் எங்க அப்பாவை விட்டுடுங்க. அது என்னோட கடைதான். நான்தான் பார்த்துக்கிட்டிருகேன். என்ன தப்பு பண்ணிட்டார்னு அடிக்கறீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.

‘உங்க அப்பாரு என்ன பேசினார்னு தெரியுமா உனக்கு?’ என்றிருக்கிறார்கள் போலீஸார். ‘என்னதான் பேசியிருக்கட்டும். அதுக்காக அடிப்பியலோ?’ என்று மீண்டும் கோபமாகியிருக்கிறார் பென்னிக்ஸ்.

‘அப்பன் சொத்துல பங்கு கேட்குறான் ஓய்… இவனுக்கும் கொடுங்க’ என்று சப் இன்ஸ்பெக்டர் சிரிக்க ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி போலீஸாரின் சட்டையைப் பிடித்திருக்கிறார் பென்னிக்ஸ்.

அவ்வளவுதான் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், ஏட்டு முருகன், ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உறுப்பினர்கள் என அனைவரும் சேர்ந்துகொண்டு ஜெயராஜையும், பென்னிக்ஸையும் தாக்கியிருக்கிறார்கள். தந்தையைப் பிடித்துக் கொண்டு மகனை அடித்திருக்கிறார்கள். மகனை பிடித்துக் கொண்டு தந்தையை அடித்திருக்கிறார்கள்.

அடுத்து வரும் வரிகளை மன வலிமை இல்லாதவர்கள் வாசிக்காதீர்கள்

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் நிலைய சுவரைப் பிடித்துக் கொண்டு நிற்க வைக்கப்படுகிறார்கள். ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இருவர் அவர்களது இரு கைகளையும் சுவரோடு அழுத்திப் பிடித்துக் கொள்கிறார்கள். இன்னும் இருவர் காலை விரித்துப் பிடித்துக் கொள்கின்றனர் . கால் முட்டிகளை இருவர் அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தம் ஆறு பேர் இப்படி இழுத்தும், அழுத்தியும் பிடித்துக் கொள்ள எந்த வகையிலும் தடுக்க முடியாத நிலையில் பென்னிக்ஸின் ஆசன வாயில் லத்தியை விட்டு செருகியிருக்கிறார்கள். வலியால் துடித்திருக்கிறார் பென்னிக்ஸ். அந்தக் கதறல் போலீஸ் நிலையத்தைத் தாண்டி வெளியே வரவில்லை. இதேபோன்ற ட்ரீட்மென்ட் ஜெயராஜுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் ஸ்டேஷன் ஜாமீனிலேயே விடக் கூடிய சாதாரண பிரிவுகள்தான்.

அன்று இரவு தகவல் அறிந்து ஜெயராஜின் மனைவியும், பென்னிக்ஸின் தாயாருமான ஜெயராணி தகவல் கேள்விப்பட்டு சாத்தான்குளம் காவல் நிலையம் சென்றபோது இருவரும் வலியால் முனகிக் கொண்டிருந்தார்கள். ‘எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்க போ’ என்று ஜெயராணியை போலீஸ் நிலையத்தில் இருந்து விரட்டிவிட்டார்கள் போலீஸார்.

மாஜிஸ்திரேட் மர்மங்கள்!

சாத்தான்குளம் சம்பவத்தில் இந்த படலம்தான் மிக முக்கியமானது. 19ஆம் தேதி இரவு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தாக்கப்பட்ட ஜெயராஜும், பென்னிக்ஸும் மாஜிஸ்திரேட் சரவணன் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையின்படி 19ஆம் தேதியே ஆவணம் மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஆஜர் செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கேதான் சட்ட வட்டாரத்தில் சலசலப்புகள் எழுகின்றன.

பொதுவாகவே போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒருவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டுமானால் முதலில் மெடிக்கல் ரிப்போர்ட் வாங்க வேண்டும். அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டோடு மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கோ, வீட்டுக்கோ ‘அழைத்துச் செல்லப்படுபவர்கள்’ மாஜிஸ்திரேட்டின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதும், அல்லது அனுப்ப மறுப்பதும் மாஜிஸ்திரேட்டின் உரிமை. தன் முன்னால் நிறுத்தப்படுபவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை மாஜிஸ்திரேட் உறுதி செய்துகொள்வார். அதற்காக விசாரணையும் நடத்துவார்.

‘ஏப்பா ஏதாவது சொல்ல விரும்புறியா?’ என்று மாஜிஸ்திரேட் கேட்பார். அதற்கு ஆஜர்படுத்தப்படுபவர் பதில் சொல்வார்.

‘போலீஸ் அடிச்சாங்களா?’ என்று கேட்பார். காயம் பட்டிருக்கிறார்களா என்று ஆராய வேண்டும்.

’ஐயா கடுமையா அடிச்சிருக்காங்க. ஆஸ்பத்திரிக்கு போனாதான் பொழைப்பேன்யா’ இப்படி ஏதாவது ஜெயராஜோ, பென்னிக்ஸோ சொல்லியிருக்க வேண்டும். தன் முன்னால் ஆஜர்படுத்தப்படுபவர்கள் என்ன சொன்னாலும் அதை ரிமாண்ட் ரிப்போர்ட்டின் பின் பக்கம் மாஜிஸ்திரேட் எழுதி கையெழுத்திட வேண்டும். தன் முன்னால் நிறுத்தப்பட்டிருப்பவர் நீதிமன்றக் காவலுக்கு செல்லும் நிலையில் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டால் அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்கவும் மாஜிஸ்திரேட்டுக்கு பெரிய அதிகாரம் உண்டு.

இவ்வளவு வலியோடும், வேதனையோடும். காயத்தோடும் துடித்த ஜெயராஜும், பென்னிக்ஸும் சட்டப்படி மெடிக்கல் ரிப்போர்ட் வாங்கப்பட்டு சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்களா? இருந்தவர்களை நேரில் பார்த்து ஆய்வு செய்துதான் நீதிமன்றக் காவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியெனில் மாஜிஸ்திரேட் சரவணனிடம் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டார்களா, அவர் ஆய்வு செய்தாரா?

வழக்கறிஞர்கள் சிலரிடம் விசாரித்தபோது. “காவல் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டது வரை இருவருக்கும் ஐந்தாறு கைலிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு கைலியிலும் அவ்வளவு ரத்தம். இந்த நிலையில் இருப்பவர்கள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டிருந்தால் வழக்கான கேள்விகள் கேட்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களைப் பார்த்தாலே நீதிபதி சிறைக்கு அனுப்ப முடிவெடுத்திருக்க மாட்டார். எனவே கொரோனா காலத்தைப் பயன்படுத்தி இருவரையும் ஆட்டோவில் ஏற்றி மாஜிஸ்திரேட் வீட்டு வாசலிலேயே நிறுத்தி போலீஸார் மாஜிஸ்திரேட்டிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். போலீஸார் இப்படியெல்லாம் தாக்கியிருப்பார்கள் என்பது தெரியாமல் மாஜிஸ்திரேட் கையெழுத்திட்டிருக்கிறார்’ என்கிறார்கள்.

கொரோனா காலத்தில் தேவையின்றி கைது நடவடிக்கைகள் கூடாது என்றும், சட்டம் ஒழுங்குக்குப் பெரிய அளவில் கேடு வரும் என்று கருதப்படக் கூடியவர்களை மட்டுமே கைது செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு உடனடியாக அவர்களை விடுவித்திருக்க முடியும். ஆனால், அப்படியும் கோவில்பட்டி சப் ஜெயிலுக்கு மாஜிஸ்திரேட் ஏன் அனுப்பினார் என்பதுதான் அடுத்த மர்மம்.

சாத்தான்குளத்தின் சர்ச்சை அலைகள்!- 2

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தாக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜெயராஜின் மனைவி ஜெயராணி 19 ஆம் தேதி இரவு 9 மணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அவரை போலீசார் விரட்டி விடுகிறார்கள். கொஞ்ச நேரத்திலேயே அவர் தனது மகள்களுடன் மீண்டும் சென்றிருக்கிறார். வாசலிலேயே காத்துக் கிடந்திருக்கிறார். சில நிமிடங்களில் ஒரு போலீஸ் வந்து, ‘மாத்தறதுக்கு துணி கொண்டாங்க’ என்று கேட்டிருக்கிறார். உடனே அவர் வீட்டுக்குப் போய் தன் கணவனுக்கு ஒரு வேட்டி, மகனுக்கு ஒரு வேட்டி என இரு வேட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.

வேட்டி வேண்டாம் சாரம் கொண்டா

வேட்டியை வாங்கிக் கொண்டு சென்ற போலீசார் அதை பென்னிக்ஸுக்கும் கட்டிவிட்டதும் வெள்ளை துணி முழுக்க ரத்தம் பீறிட்டது. ‘என்னய்யா வேட்டி கொண்டாந்திருக்கவோ… போய் சாரம் கொண்டாரச் சொல்லு போ’ என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் போலீஸ் வெளியே ஓடி வந்து, ‘அம்மா… சாரம் கொண்டாங்க ரெண்டு சாரம் கொண்டா’ என்று சொல்ல, அப்போதே அவருக்கு சுருக்கென்றது. எதற்காக வேட்டிக்கு பதில் சாரம் (லுங்கி) கேட்க்குறாங்க?” என்று நினைத்துக் கொண்டு, ‘வேட்டிதான் கொடுத்தனே?” என்று கேட்கிறார். நீ சாரம் எடுத்தாம்மா என்று அவரை அனுப்பியிருக்கிறார்கள். மீண்டும் இரு சாரங்களை (லுங்கி) கொண்டு வந்துகொடுக்கிறார் ஜெயராணி.

இரவு 12.30க்கு மேல் இன்ஸ்பெக்டர் வெளியே வந்து, ‘இந்தாம்மா.. உன் வீட்டுக்காரர் நல்லா இருக்காரு. இங்க கூட்டம் கூடாதீங்க. காலையில கோர்ட்டுக்கு வாங்க. இப்ப போங்க’ என்றதும்தான் இனிமேலும் அங்கே நிற்க முடியாமல் கிளம்பி வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள் ஜெயராணியும் அவரது மகள்களும்.

காலையில் சாத்தான்குளம் கோர்ட்டுக்குதான் கொண்டு வருவார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டே கண்ணீரோடு சென்ற நிலையில், இரவோடு இரவே சுமார் 2.30 மணிக்கு நீதிபதி சரவணன் வீட்டுக்குச் சென்று வாசலிலேயே இவர்களை ஒரு ஆட்டோவில் நிற்க வைத்திருக்கிறார்கள். அவர் கதவைத் திறந்து இருட்டில் வாசலைப் பார்த்துவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு அனுப்புகிறார்.

கோவில்பட்டிக்கு போகக் காரணம் என்ன?

அதன் பிறகுதான் போலீஸின் மாஸ்டர் பிளான் ஆரம்பமாகிறது. சாத்தான்குளத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் திருச்செந்தூர் சப் ஜெயில் இருக்கிறது. 35 கிலோ மீட்டரில் நாங்குநேரி சப் ஜெயில் இருக்கிறது. 18 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் விட்டு சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கோவில்பட்டி சிறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இரவு 2.30 மணிக்கு மேல் போலீஸ் வேனில் தூக்கிப் போட்டு அதிகாலை 4 மணிக்குள் கோவில்பட்டி கிளைச் சிறையை அடைகிறது சாத்தான்குளம் போலீஸின் வண்டி. அங்கிருக்கும் ஜெயிலர் சாத்தான்குளம் போலீசாருக்குத் தெரிந்தவர் என்கிறார்கள். அதனாலேயே அந்த சிறையைத் தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் சிறு காயம் இருந்தாலும் சிறைக்குள் அனுமதிக்க முடியாது. ஆனால், இரண்டு வேட்டி, இரண்டு-மூன்று லுங்கி என ரத்தம் தோய்க்கப்படும் அளவுக்கு காயமடைந்த பென்னிக்சையும், ஜெயராஜையும் எப்படி சிறைக்குள் அனுமதிப்பார்கள்? அப்படி அனுமதிக்க வேண்டுமென்றால் சாத்தான்குளம் போலீசாருக்கு நன்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

இடைப்பட்ட சிறைகளில் அடைக்க முடியாது, அங்கே சமூக இடைவெளியோடு அடைக்கும் அளவுக்கு இடம் இல்லை என்று கூறி கோவில்பட்டிக்கு அந்த அதிகாலையில் சென்றிருக்கிறார்கள் சாத்தான்குளம் போலீஸார். அதிகாலை நான்கு மணிக்கு கோவில்பட்டி சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் பென்னிக்ஸும், ஜெயராஜும். அப்போதும் பென்னிக்ஸ் கத்திக் கதறியிருக்கிறார். ஒரு நாள் முழுதும் சிறையிலேயே துடித்த பென்னிக்ஸ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை அங்கே கொண்டு செல்லும்போதே நிலைமை கவலைக்கிடமாகவே இருந்துள்ளது. 22 ஆம் தேதி மாலை மருத்துவமனையில் இறந்துவிடுகிறார் பென்னிக்ஸ். கொஞ்ச நேரத்திலேயே பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜும் மருத்துவமனையில் இறந்துவிடுகிறார்.

கோவில்பட்டி சப் ஜெயிலுக்குள் 20 ஆம் தேதி அதிகாலையில் ரத்தக் காயங்களோடு வந்த இருவரையும் அனுமதித்திருக்கக் கூடாது. ஆனாலும் சாத்தான்குளம் போலீஸார் அதற்காகத்தான் இத்தனை சப் ஜெயில்களைத் தாண்டி கோவில்பட்டி சப் ஜெயிலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கோவில்பட்டி சப் ஜெயில் ஜெயிலரும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இப்போது சாத்தான்குளம் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது சப் இன்ஸ்பெக்டர்கள் ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர். விசாரணை செய்ய வந்த நீதிபதிகளுக்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்காததால், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை வருவாய் துறையினர் கையிலெடுக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளதே… சாத்தான்குளம் போலீஸாரின் தடித்த தோல்களுக்கு சாட்சி.

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் பற்றியும் போலீஸ் மேலிடத்துக்கு உண்மைத் தகவல்களை சொல்வதற்கென்றே சிறப்புப் பிரிவு போலீஸுக்குள் இருக்கிறது. சாத்தான்குளம் போலீஸ் பற்றி அந்த குழுவின் அறிக்கை என்ன?

சாத்தான்குளத்தின் சர்ச்சை அலைகள்! – 3

கோவில்பட்டி கிளைச் சிறை அரசு அலுவலகங்கள் சூழ்ந்த காம்பவுன்ட்டில்தான் இருக்கிறது.  முதலில் நகராட்சி அலுவலகம்,   அடுத்து  கிளைச் சிறை அமைந்துள்ளது. இவற்றின் நேர் பின் பகுதியில் அரசு மருத்துவமனை, அரசு பெண்கள் பள்ளி ஆகியவை உள்ளன. அதற்கும் பின்னால் தாலுகா அலுவலகம், கோர்ட் , அதன் பின்னால் டெலிபோன் எக்ஸேஞ்ச் என பல அலுவலகங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. அந்த வகையில் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு பின் பக்கம் மருத்துவமனை இருக்கிறது.

மத்திய சிறையில்தான் முறையான மருத்துவமனையும் தினந்தோறும் மருத்துவர் விசிட்டும் இருக்கும். கிளைச் சிறைகளில் முறையான மருத்துவமனை கிடையாது. வாரத்துக்கு சில நாட்கள் அந்த ஊர் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டரை டூட்டி போடுவார்கள். அந்த வகையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அடைத்தபோது டூட்டியில் யாரும் இல்லை.  மறுநாள்தான் ஒரு டூட்டி டாக்டர் வந்திருக்கிறார். ஒவ்வொரு கைதியையும் அவர் பார்க்கும்போது பென்னிக்ஸை பார்த்து பதறிவிட்டார்.   ‘எப்படி இவரை இங்க கொண்டு வந்தீங்க’ என்று கேட்டபடியே  ஜி.ஹெச்.சில் சேர்க்கும்படி  வலியுறுத்தியிருக்கிறார்.  அதற்கும் பல மணி நேரங்கள் கழித்துதான் கோவில்பட்டி ஜி.ஹெச்சில் பென்னிக்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். போலீஸ் ஒரு கோபத்தில் அடித்துவிட்டது என்றால் கூட, அதற்கான சிகிச்சைகளை உடனடியாகக் கொடுத்திருந்தால் கூட இருவரையும் காப்பாற்றியிருக்க முடியும். அதையும் ஏன் தாமதித்தார்கள் என்பதுதான் விளங்கிக் கொள்ள முடியாத வன்மமாக இருக்கிறது என்கிறார்கள் சாத்தான்குளம் வர்த்தகர்கள்.

என்ன செய்கிறது எஸ்பி சிஐடி

இந்த நேரத்தில்  எஸ்பி சிஐடி என்ற போலீஸ் அமைப்பு என்ன செய்கிறது என்ற கேள்வி பலமாக எழுகிறது. ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் ஆகிறார். அவருக்குக் கீழ்தான் அந்த காவல் நிலையம் இயங்குகிறது. ஆனால் இன்ஸ்பெக்டர் தன் வரம்புக்குள் செயல்படுகிறாரா, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடக்கிறதா, சப் இன்ஸ்பெக்டர்கள் முறையாக செயல்படுகிறார்களா என்பதை எல்லாம் விசாரித்து மாவட்ட அளவில் இருக்கும் எஸ்பி இன்ஸ்பெக்டருக்கு ரிப்போர்ட் கொடுப்பதுதான் எஸ்பி சிஐடியின் வேலை. அதாவது போலீஸை கண்காணிக்க ஒரு போலீஸ். அமைப்புக்குள்ளேயே ஓர் உளவு அமைப்பு.  காவல்துறை தனக்குத் தானே வைத்திருக்கும் கடிவாளம்.

இந்த எஸ்பி சிஐடிக்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கை கிடையாது.  தலையைக் காட்டுவார்கள் போய்விடுவார்கள். இவர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒழுங்காக பணி செய்தாலே காவல் நிலையங்கள் கறாராகவும், நேர்மையாகவும் இருக்கும். ஆனால் தன்னை கவனிக்க வேண்டிய இவர்களை காவல்நிலையங்கள்  ‘கவனித்து’ விடுவதால்  காவல் நிலையங்கள் பற்றி நல்ல விதமாகவே ரிப்போர்ட் போகும் அல்லது கெட்ட விஷயங்கள் இல்லாமல் ரிப்போர்ட் போகும். சாத்தான்குளத்தின் எஸ்பி சிஐடி ஒழுங்காக வேலை செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.

அதற்கு மிக சமீபத்திய உதாரண சம்பவமும் இந்த இரட்டை மரணங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது.  ஜெயராஜையும், பென்னிக்ஸையும் தாக்கியவர்களில் ஒருவரான சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷுக்கு கொம்பன் என்றொரு பட்டப் பெயர். அவரது  வட்டத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. அந்த கொம்பன் பற்றி டிஜிபி வரைக்கும் ஒரு புகார் இந்த சம்பவத்துக்கு முன்பே போயிருக்கிறது.

சாத்தான்குளம் காவல்நிலையம் மீது டிஜிபி வரை சென்ற புகார்

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்கு உட்பட்டது பேய்க்குளம். ஸ்ரீவெங்கடேசபுரம் பகுதியின் கடைத்தெருவுக்குதான் பேய்க்குளம் என்று பெயர். வளர்ந்து வரும் பகுதி. இப்பகுதியில் வெவ்வேறு சாதியினர் வசிக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் பெரிய அளவிலான சாதிமோதல்கள் நிகழ்ந்ததில்லை. ஒருவேளை சாதிமோதலாக வாய்ப்புள்ள சம்பவங்கள் கூட மத்தியஸ்தர்களால் காவல்நிலையத்தின் தலையீட்டால் தணிக்கப்பட்டே வந்திருக்கிறது.  ஆனால் சில மாதங்களுக்கு முன் சாத்தான்குளத்துக்கு சப் இன்ஸ்பெக்ட்ராக வந்த ரகு கணேஷ் என்பவர் மீதுதான், சில நாட்களுக்கு முன் டிஜிபி வரை புகார் போயிருக்கிறது.

என்ன புகார்?

“ரகு கணேஷ் தன் சமுதாய இளைஞர்களைத் தூண்டிவிட்டு பேய்க்குளம் பகுதியில் மாற்று சமுதாய இளைஞர்களுடன் மோத வைத்தார். இதனால்,  ரகு கணேஷுக்கு ஆதரவான அவரது சமூகத்தவரான ஜெயக்குமார் என்பவர் மீது பலர் கோபத்தில் இருந்தார்கள்.  ரகு கணேஷால் பாதிக்கப்பட்ட சிலர் கடந்த மே 18 ஆம் தேதி ஜெயக்குமாரை கொலை செய்துவிட்டார்கள். இந்த பகுதியில் சமூக ரீதியாக நடந்த முதல் கொலை என்ற மாறாத கறை ஏற்பட்டது.  அந்தக் கொலை தொடர்பாக ஒரு மைனர் உட்பட 18 பேர் மீது எஃப். ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குக்காக பலரையும் விசாரணை என்ற பெயரில் ரகு கணேஷ் நள்ளிரவுகளில் வீடு புகுந்து கூப்பிடுவதும் மிரட்டுவதாகவும் இருந்தார்.

இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவரான துரை என்பவர் சிக்காத நிலையில், அவரது தம்பி என்ற ஒரே காரணத்துக்காக மகேந்திரன் என்ற 29 வயது பையனை ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். ஜெயராஜ், பென்னிக்ஸ் எப்படி தாக்கப்பட்டார்களோ அதேபோலத்தான் அந்த மகேந்திரனும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தாக்கப்பட்டார்.  அவருக்கு பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. தம்பியை பிடித்து அடிப்பது தெரிந்து துரை பிடிபட்டுவிட்டார். அதனால் மகேந்திரனை வீட்டுக்கு அனுப்பினார் எஸ்.ஐ. ரகு கணேஷ். போலீஸ் அடித்த அடியில் கடுமையாக காயம்பட்ட மகேந்திரன் வலி தாங்க முடியாமல் மருத்துவர்களிடம் போனார். தூத்துக்குடி ஜி.ஹெச்.சில் சிகிச்சை பெற்றும் சில நாட்களிலேயே  தலையில் ரத்தம் உறைந்து இறந்துவிட்டார். ஆனால் போலீஸாரின் மிரட்டலால் மகேந்திரனின் தாயார் தன் கண்ணீரையே புகாராக வழியவிட்டு மகனை கொண்டு போய்  கடைசி காரியங்களைச் செய்தார்.

இதைக் குறிப்பிட்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதிதான் பேய்க்குளம் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் டிஜிபிக்கு புகார் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த புகாரில்,  ‘பேய்க்குளம் மக்களின் பொது அமைதி கருதி எஸ்.ஐ. ரகு கணேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவரை சாத்தான்குளத்தில் இருந்து மாற்றினால் சாதி மோதல்களுக்கும், குழு மோதல்களுக்கும், இரவுகளில் வீட்டுக் கதவுகள் உடைக்கப்படுவதற்கும் முற்றுப் புள்ளி வைக்கலாம். எங்கள் ஊரின் நன்மை கருதி இந்த புகாரை நாங்கள் எந்த டிவிக்கோ, பத்திரிகைக்கோ புகாராகக் கொடுக்கவில்லை” என்று காவல்துறை தலைமையை நம்பி புகார் அனுப்பினார்கள் பேய்க்குளம் மக்கள்.

இந்தப் புகார் அனுப்பியது 17 ஆம் தேதி… ஒரே நாள்தான் இடைவெளி. 19 ஆம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் ரத்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டது. 17 ஆம் தேதி புகாரை மக்கள் அனுப்பினார்கள்.  உண்மையில் இந்தத் தகவல்களை எஸ்பி சிஐடி முன்பே தனது மேலிடத்துக்கு அனுப்பியிருந்தால், அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் 19 ஆம் தேதி சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். முந்தைய மகேந்திரன் மரணத்துக்கும் நீதி கிடைத்திருக்கும்.

ஒரு சில காவல் அதிகாரிகளால் காவல்துறைக்கு இன்று ஏற்படும் ஒட்டுமொத்த கெட்டப் பெயரும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

நன்றி

 மின்னம்பலம் டீம்

சாத்தான்குளம் ஜெயராஜ் -ம், பெனிக்ஸ்-ம் செய்தது என்ன கொலை குற்றமா?

ஒரு குற்றவியல் நீதிமன்றத்தால்
ஒரு குற்றம் அல்லது கொலை குற்றம் குற்றச்சாட்டப்பட்ட குற்றவாளிக்கு, தன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை குற்றமற்றவர் என்று நிரூபிக்க பல வாய்ப்புகள் தரப்படுகின்றது.

ஒரு வேளை கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்க பட்டு உயர்ந்தபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அதற்கு மேல் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்றும், அதன் பிறகும் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து முடிவு செய்ய நாட்டின் முதல் குடிமகனாகிய மாண்புமிகு. ஜனாதிபதிக்கு மட்டுமே தண்டனை வழங்கவும், தண்டனையை குறைக்கவும், விடுதலை செய்யவும் முழு அதிகாரம் உள்ளது. அதற்கான இப்படிபட்ட சட்ட வாய்ப்புகள் நம் இந்திய குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் இவ்வாறு இருக்கும் போது, இந்த சாத்தான்குளம் இரட்டை கொலையில் ஈடுபட்ட அனைத்து நாய்களும் தங்கள் சுயலாபத்திற்காக ஈகோவில் சட்டத்தை கையில் எடுத்தது எந்த வகையில் நியாயம்? இந்த நாய்கள் அரங்கேற்றிய கொலையை போன்று அந்த நாய்களையும் கொல்வதற்கு அல்லது முச்சந்தியில் விட்டு கல்லெறிந்து தீர்க்க சட்டத்தில் இடமில்லை அல்லவா?

எனவே, சட்டத்தை விட உயர்ந்தவர் எவரும் இல்லை; இந்த மனிதத் தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும்.

கடையை கூடுதல் நேரம் திறந்தார்கள் என்பதற்கு 2 உயிர்களை காவல்துறை கொல்வார்கள் என்றால்? தினமும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் டாஸ்மாக் கடைகளை பற்றிய நிலைபாடு என்ன? விற்பனை செய்ய காவல் காப்பார்களா?

JusticeForJeyarajAndFenix

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை – வழக்கறிஞர்கள் போராட்டம்

சாத்தான்குளத்தில் தந்தையையும் மகனையும் கொலை செய்த காவல்துறையினரையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை – அனைவரும் பதவி நீக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்

தந்தையையும் மகனையும் இரட்டை கொலை செய்த சாத்தான்குளம் கொலைகாரன்களை ஆயுத படைக்கு மாற்றி விட்டால் போன உயிர்கள் வந்து விடுமா?

கொலை வழக்கு பதிவு செய்து ,2 கொலைகாரன்களையும் நிரந்திரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
போலீஸ் நடத்திய கொலை வெறி தாக்குதலில் லாக்கப் கொண்டு செல்லும் முன் கடுமையாக தாக்கப்பட்டிருந்தும் சிறையில் அடைக்க மருத்துவ தகுதிச் சான்று கொடுத்த மருத்துவரும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருதி டாக்டர் மீதும் வழக்கு பதிவு செய்து இவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்.


America-ல் ஒரு கறுப்பு இனத்தவர் கொலை செய்யப்பட்டதும்!
தமிழ்நாட்டில் காவல்துறையால் இரு தமிழர்கள் கொலை செய்யப்பட்டதும் வெவ்வேறல்ல.


கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவு உறக்கம் இன்றி உழைத்த ஒரு சில நல்ல காவல் துறையினர் மத்தியில், இப்படியும் கொலைக்கார
அயோக்கியர்கள்.

சாத்தான்குளம் வணிகர்கள் படுகொலையில் யாரெல்லாம் குற்றவாளிகள்

சாத்தான்குளம் வணிகர்கள் படுகொலையில் யாரெல்லாம் குற்றவாளிகள் என்பது பற்றிய உண்மைகளை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தியின் அனல் பறக்கும் ஆக்ரோஷமான பேச்சு.

சாத்தான்குளத்தில் இரண்டு வணிகர்கள் அடித்து கொலை செய்த காவல்துறையினர், மட்டுமே குற்றவாளிகள் அல்ல.

அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று சான்றிதழ் வழங்கிய சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர், காவலர்கள் அடித்தார்களா? என்று கேள்வியே கேட்காமல் ரிமாண்ட் செய்த, சாத்தான்குளம் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன், கோவில்பட்டி ஜெயிலர் ஆகியோரும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டவர்களே…

உடனடியாகக் கைதுசெய்!

ஆய்வாளர் ஸ்ரீதர்,
உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்,
உதவி ஆய்வாளர் பால்துரை,
உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் (எ) கொம்பன்,
காவலர் வேலுமுத்து,
காவலர் ஜேசுராஜ்,
காவலர் சாமத்துரை,
காவலர் பாலா,
“தன்னார்வத் தொண்டர்” கணபதி,
“தன்னார்வத் தொண்டர்” கண்ணன்,
“தன்னார்வத் தொண்டர்” ஜேக்கப்,
“தன்னார்வத் தொண்டர்” எலிசா,
சாத்தான்குளம் அரசு மருத்துவர்(கள்),
சாத்தான்குளம் நீதிபதி பாரதிதாசன் (?),
கோவில்பட்டி சிறைத்துறை அதிகாரி(கள்)

இத்தனை பேரையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். இவர்களில் அரசுச் சம்பளம் வாங்குகிற அத்தனைப் பேரையும் பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்ய வேண்டும்.

தமிழக அரசே,

இவர்களை இடம் மாற்றிவிட்டோம், எச்சரித்துவிட்டோம் என்று படம் காட்டதே!

இந்தக் கொலைகாரர்களைக் காப்பாற்ற முயலாதே!

பச்சைத் தமிழகம் கட்சி
யூன் 23, 2020.

S_P_Udhayakumar