தகவல் அறியும் சட்டப்படி காவிரி குறித்தகேள்விகளுக்கு நடுவண் நீராற்றல் துறை இந்தியில் விடையளித்ததற்குக் கண்டனம்!

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்று அறிந்து கொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ளவும், நடுவண் அரசின் நீராற்றல் துறைக்கு, கடந்த 16.07.2020 அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 8 வினாக்கள் கொண்ட கடிதம் புதுதில்லிக்கு அனுப்பி இருந்தேன்.

அதற்கு விடையளித்து நீராற்றல் துறையிலிருந்து வந்த இரண்டு கடிதங்கள், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே உள்ளன.

தமிழ்நாட்டில் இந்தி மொழி – கல்வி மொழியோ அல்லது மாநில அலுவல் மொழியோ அல்ல! தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 343 ( 2 )-இன்படி இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்கிறது. உறுப்பு 343 ( 3 )-இன்கீழ் 1963இல் இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, ஆங்கிலம் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசின் அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் இருக்கின்றன.

சட்டங்கள் இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, முழுக்க முழுக்க இந்தியில் விடை அளிப்பது சட்ட விரோதச் செயல்! அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்திய அலுவல் மொழிச் சட்டம், தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் ஆகிய மூன்றுக்கும் எதிரான செயல்!

தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 25 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீராகவும் மக்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும் காவிரி நீர் கர்நாடகத்திலிருந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வருகிறதா என்று அறிந்து கொள்வதற்கும், 2018இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு செயல் படுகின்றவா எனத் தெரிந்து கொள்வதற்கும், கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் அக்கறை கொண்டு கவலையோடு நான் கேட்ட கேள்விகளுக்கு – எனக்குத் தெரியாத மொழி மட்டுமின்றி – ஒற்றை ஆட்சிமொழியாக எந்தச் சட்டத்தின் கீழும் இல்லாத இந்தி மொழியில் நடுவண் அரசின் நீராற்றல் துறை விடையளித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயல்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், தனக்கு சொந்தமாக அலுவலகம் கொண்டிருக்கிறதா, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், இப்பணியில் முழுநேர அதிகாரியாக இருக்கிறாரா அல்லது வேறொரு பணியில் இருந்து கொண்டு, கூடுதலாக இப்பொறுப்பில் இருக்கிறாரா, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு அமர்த்தப்பட்ட முழுநேர அதிகாரிகள் எத்தனை பேர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரையறுத்த அளவின்படி நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதா என்பவை உள்ளிட்ட 8 கேள்விகள் கேட்டிருந்தேன்.

இவற்றில் சிலவற்றிற்கு நீராற்றல் துறையின் புதுதில்லி தலைமையகமும், பெங்களுருவில் உள்ள அதன் தென்னகக் கண்காணிப்பகமும் எனக்கு அளித்த பதில் கடிதங்கள் முழுக்க முழுக்க இந்தியில் இருக்கின்றன (அவற்றின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்). இதுகுறித்த எதிர்ப்புக் கடிதத்தை நடுவண் நீராற்றல் துறைக்கு அனுப்பியுள்ளேன்.

இதுபோல், தொடர்ந்து நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணித்துக் கொண்டுள்ளது. அண்மையில், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய யோகா காணொலி பயிலரங்கில், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே தில்லியிலிருந்து பேசினார்கள். தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட மருத்துவர்கள், தங்களுக்கு இந்தி தெரியாது ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கூறியபோது, அத்துறையின் செயலாளர், “இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள்!” என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், வானூர்தி நிலையத்தில் நடுவண் தொழிற்சாலை காவல்படை அதிகாரியிடம் ஆங்கிலத்தில் ஒரு விவரம் கேட்டபோது, அவர் இந்தியில் விடையளித்திருக்கிறார். கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதற்கு, “இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?” என எதிர்வினா கேட்டுள்ளார்.

இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் அல்ல – தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தாக்கும் செயல்கள்! தமிழை நீக்கி விட்டு – இந்தியையும் சமற்கிருதத்தையும் கொண்டு வந்து நிலைநாட்ட வேண்டும் என்ற மோடி அரசின் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதி என்றே கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு, யாருக்கோ ஏற்பட்ட பாதிப்பு என்று எண்ணாமல், தனது மக்களுக்கும், மொழிக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து என்பதை உணர்ந்து, தில்லி அரசிடம் உரியவாறு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் தமிழ், புதுதில்லியுடன் செய்தித்தொடர்புக்கு ஆங்கிலம் என்ற சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,

காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 90251 62216, 94432 74002

Fb.com/KaveriUrimai

SaveMotherCauvery

http://www.kaveriurimai.com

சொந்த செலவில் தூர் வாரும் பணியை செய்யும் கிராம மக்கள் – கிராம மக்களுடன் கைகோர்த்த நாம் தமிழர் கட்சியினர்.

பொதுப்பணித்துறை கைவிரித்த தூர் வாரும் பணியை 7 கிலோமீட்டர் நீளத்துக்கு பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.

நாகை மாவட்டம், திருப்பூண்டி அருகே பூவைத்தேடி, காமேஸ்வரம் மற்றும் புஷ்பவனம் பகுதி விவசாயிகளுக்கு காவிரி நீர் கை கொடுக்காததால் மானாவாரி பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பின்னர், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில், குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதையடுத்து பழைய சந்திரநதி பாசன வாய்க்காலை தூர்வாரி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் பொதுப்பணித் துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்யாத நிலையில், திருப்பூண்டி முதல் பி ஆர் புரம் வரை உள்ள 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தூர்வாரும் பணியை கிராம மக்களே ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளில் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து செயல்பட்டு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

https://bit.ly/3deU0gB

மதுக்கடை திறப்புக்கு தடை விதித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு.

அடேய் அடிமைகளா!

தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக பறிக்கிறது.

GST யை திணித்து தமிழகத்தின் வருவாயை பறித்தது. “நீட்” தேர்வை திணித்து தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவை தகர்த்தது. ஒட்டுமொத்த தமிழகமும் போராடிப்பெற்ற “காவிரி மேலாண்மை வாரியத்தின்” அதிகாரத்தை பறிக்கிறது.அழிவுத்திட்களை திணித்து தமிழகத்தின் இயற்கை வளங்களை அழிக்கிறது.

புதிய கல்விக்கொள்கை என்றப்பெயரில் “பார்ப்பன குலக்கல்வியை” திணிக்கிறது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை, அயலாருக்கு தாரை வார்க்கிறது. புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி தமிழக விவசாய, நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கத் துடிக்கிறது.

இவ்வாறு நாள்தோறும் தமிழரின் இனப்பகை இந்திய அரசு தமிழ்நாட்டின் மீது அறிவிக்கப்படாத போர் செய்து வருகிறது. ஆனால் இவற்றிற்க்கெல்லாம் எந்த எதிர்வினைகளையும் ஆற்றாமல், தங்களின் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு கொள்ளையடிப்பதற்க்காக, தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மோடியின் காலடியில் பலியிட்ட அடிமைகள்.

இன்று மதுக்கடைத் திறப்பிற்க்கு நீதிமன்றம் தடைவிதித்தவுடன் உடனே மேல்முறையீடு செய்து எதிர்வினையாற்றுகிறது என்றால் இந்த அடிமைகள் எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

அடேய்! அடிமைகளே!!

உங்களின் சுயநலத்தால் இன்று தமிழினமும், தமிழகமும் தனது தனித்தன்மையை இழந்து தவிக்கின்றது. இந்திய ஒன்றியத்திற்க்கே “சுயமரியாதையை” கற்றுக்கொடுத்த இனம் இன்று உங்களைப்போன்ற அடிமைகளால் இழிநிலைக்கு ஆளாகிவருகிறது.

இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் “மாநில சுயாட்சியை” கற்றுக்கொடுத்த தமிழ்நாடு இன்று அடிமைகளால் மோடி அரசுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து உள்ளது.

அடிமைகளே! உங்களின் கட்சியின் பெயரிலும், கட்சியின் கொடியிலும் உள்ள “அறிஞர் அண்ணா” எழுதிய ஒரு நூலையாவது படித்துப்பாருங்கடா!.

இந்திய ஒன்றியம் தனது ஆட்சிகாலத்தில் தமிழகத்தை வஞ்சித்தபோது, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரட்டி இந்திய ஒன்றியத்தை நடுங்கவைத்தார்.
ஆனால் இன்று அண்ணாவின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்யும் நீங்கள் இந்திய ஒன்றியத்திற்க்கு அடிமை சேவகம் செய்து வருகின்றனர்.

ஊரடங்கைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி!

புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்!


கொரோனா நெருக்கடியில் அனைவரது கவனமும் இருக்கும் சூழலைப் பயன்படுத்தி, தனது ஆரியத்துவ சர்வாதிகார நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக நரேந்திர மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அரைகுறை தற்சார்ப்புத் தன்மையையும் முற்றிலும் குழி தோண்டிப் புதைக்கும் சட்ட விரோத ஆணையை இப்போது பிறப்பித்துள்ளது.

இந்திய அரசின் நிர்வாகப் பணிகள் ஒதுக்கீட்டு விதிகள் – 1961-க்கு, திருத்தங்கள் செய்வது என்ற பெயரில் இந்திய அரசின் நீர்வளத்துறை தொடர்பான திருத்த விதிகளை 27.04.2020 நாளிட்ட இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின் (S.O. 1371(E), 24.04.2020) வழியே அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்த விதிகள் வழியாக, காவிரி மேலாண்மை ஆணையம் இந்திய அரசின் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனமாக மாற்றப்படுகிறது. இதற்கென 33E என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இருந்த பணிகள் ஒதுக்கீட்டு விதியில், மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிற பதிவு 33E–இன் வழியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்திய நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏற்றாற்போல் பிற மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

ஏற்கெனவே உள்ள பணி ஒதுக்கீட்டு விதி 1961இல் பிரிவு IV – இந்திய நீர்வளத்துறை அமைச்சகம் நிர்வாகம் செய்ய வேண்டிய சட்டங்களைக் குறிக்கிறது. அவற்றுள் பதிவு 32 – மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் 1956-ஐக் குறிக்கிறது. அதாவது, 1956ஆம் ஆண்டு தண்ணீர் தகராறு சட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நீர்வளத்துறைக்கு இருக்கிறதென்று பொருள். ஆயினும், அந்தப் பொறுப்பு அதிகாரம், 1956 சட்டத்திற்கு இசைய அமைய வேண்டும் எனக் குறிக்கிறது. தண்ணீர் தகராறு சட்டம் – 1956இன் வரம்புக்குட்பட்ட வகையில்தான், நீர்வளத்துறை அதில் செயல்பட முடியும் என்று பொருள்.

இப்போதைய திருத்த விதி, இந்தப் பதிவு 32–ஐ விதியிலிருந்தே நீக்கி விடுகிறது. (Entry 32 omitted).

பதிவு 33 – ஆற்று வாரியச் சட்டம் 1956ஐக் (River Board Act, 1956) குறிக்கிறது. 1956ஆம் ஆண்டின் ஆற்று வாரியச் சட்டம், அதற்குக் கீழ் 33A முதல் 33E வரை புதிய பதிவுகள் இணைக்கப்படுகின்றன. அதில், 33E – காவிரி மேலாண்மை ஆணையமும் நீர்வளத்துறை அதிகாரத்தின் கீழ் வருவதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்றாற்போல், 7A என்ற புதிய பதிவு சேர்க்கப்படுகிறது.

இதுவரை இந்திய நீர்வளத்துறை கங்கை நிதி மேலாண்மை மற்றும் தூய்மையாக்கல் குறித்த அதிகாரத்தைத்தான் பெற்றிருந்தது.

இப்போது, 7A – இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் தூய்மை சீர்கேட்டை தடுப்பது ஆகிய அதிகாரங்களை இந்திய நீர்வளத்துறைக்கு அளிக்கிறது. அந்தந்த மாநில அரசுகளின் ஆற்று நீர் மேலாண்மை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஓசையில்லாமல் இந்திய அரசு பறித்துக் கொள்ள இந்நிர்வாக விதி சீர்திருத்தத்தின் வழியாகவே சட்ட விரோத ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தப் பதிவு 7A-வுடன் 33E-ஐ இணைத்துப் படித்தால்தான், இது எவ்வளவு பெரிய சர்வாதிகாரத்தனமான சட்டமீறல் என்பது புரியும்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16இல் வழங்கிய இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பு கூறியது. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதாக இந்திய அரசு 2018 சூன் 1ஆம் நாளிட்ட ஆணையின் வழியாக அரசிதழில் வெளியிட்டது.

அந்த அறிவிப்பிலேயே காவிரி மேலாண்மை ஆணையம் தற்சார்பான கூட்டுரு நிறுவனம் (Body Corporate) எனத் தெளிவாக அறிவித்தது. (The Cauvery Water Management Authority shall be a body corporate having perpetual succession and a common seal and shall sue and be sued). இந்த ஆணையத்தின் தலைவரையும், 2 நிரந்தர உறுப்பினர்களையும் வாக்களிக்கும் உரிமை இல்லாத செயலாளரையும் பணியமர்த்துவது இந்திய அரசின் உரிமை. தொடர்புடைய ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சார்பாக இரண்டு இரண்டு பகுதி நேர உறுப்பினர்களை இந்த ஆணையத்திற்கு அமர்த்த வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறுகிறது. இவ்வாறு ஆணையத்தை அமர்த்தப்பட்டதற்குப் பிறகு, அதன் நிகழ்ச்சி நிரலையும், மற்ற பணிகளையும் முடிவு செய்து கொண்டு இயங்கும் தற்சார்பு அதிகாரம் ஆணையத்திற்கே உண்டு என்பதையும் 2018 சூன் 1 அறிவிக்கை தெளிவுபடக் கூறுகிறது.

இந்த ஆணையம் செயல்படுவதற்கு முன் தொகையாக 2 கோடி ரூபாய் இந்திய அரசு வழங்கினாலும், அதன் தொடர் செயல்பாட்டுக்கான நிதிப் பொறுப்புக்கு தற்சார்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு 40%, கர்நாடகம் 40%, கேரளம் 15%, புதுச்சேரி 5% என்ற வகையில் பிரித்துக் கொள்ள வேண்டுமென்றும், தங்கள் தங்கள் மாநிலம் தொடர்பான ஆணைய உறுப்பினர்களின் செலவுகளை அந்தந்த மாநிலமே ஏற்க வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டன.

ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்படக்கூடியவரின் கல்வி மற்றும் பணித் தகுதிகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியாக வரையறுத்தது. அதன்படி 2018 சூன் ஆணையும் வரையப்பட்டது. ஆனால், இப்போது, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பதிவு 33E-இன் வழியாக, இந்தத் தற்சார்பு முற்றிலும் குடை சாய்க்கப்படுகிறது.
இதற்கு மாநிலங்களிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956, வரம்பு விதிக்கும் என்பதால் அதைக் குறித்தப் பதிவு 32 (Entry 32) இப்போது நீக்கப்படுகிறது.

அதற்குப் பதிலாக, எல்லா ஆறுகளின் மீதும் முற்றதிகாரம் செலுத்தும் வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய பதிவு 7A சேர்க்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 77 (3)-இன்படி, இந்தப் பணி ஒதுக்கீட்டு விதித் திருத்தம் செய்யப்படுவதாக இந்த அறிவிக்கைக் கூறுகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்திலோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ மீறுவதற்கு இந்த 77 (3) குடியரசுத் தலைவருக்கு, அதாவது இந்திய அமைச்சரவைக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கிவிடவில்லை.

அரசமைப்புச் சட்டம் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் அதிகாரச் சமநிலையை நிலை நிறுத்தும் நோக்கம் கொண்டது. எடுத்துக்காட்டாக, தலைமைத் தேர்தல் ஆணையரை உரிய சட்ட வழிமுறைப்படி இந்திய அரசுதான் அமர்த்திக் கொள்ள வேண்டும். பணியமர்த்தும் அதிகாரம் இந்திய அரசுக்கு இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தற்சார்பு அதிகாரத்தில் அரசு குறுக்கிட முடியாது. அரசமைப்புச் சட்டம் அதை அனுமதிக்காது. அதேபோலத்தான், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வெளியிடப்பட்ட அரசு அறிவிக்கை உறுதிப்படுத்திய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்சார்புத்தன்மையை ஒரு நிர்வாக விதித் திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்துவிட முடியாது.

பல்வேறு அமைச்சகங்களுக்கிடையில், பணி எளிமைக்காக (For the more convenient transaction of the business of the Government of India) பணி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத்தான் 77 (3) வழங்குகிறது. இதை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மீறுவதற்கான இந்த ஏற்பாடு, குடியரசுத் தலைவரின் வழியாக நரேந்திர மோடி ஆட்சி நிகழ்த்துகிற சட்டக்கவிழ்ப்பாகும்.

எல்லோரின் கவனமும், கவலையும் கொரோனா நெருக்கடியில் குவிந்திருக்கும்போது, நரேந்திர மோடி அரசு செய்திருக்கும் இந்த சர்வாதிகார நடவடிக்கை முற்றிலும் கோழைத்தனமானது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு எஞ்சியுள்ள மிகக் குறைந்த உரிமையையும் தட்டிப் பறிக்கும் இனப்பகை செயலாகும்! இதனை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!

இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவிக்கை (S.O. 1371(E), 24.04.2020) வழியாக செய்யப்பட்டுள்ள பணி ஒதுக்கீடு விதித் திருத்தங்களை முற்றிலும் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நரேந்திர மோடி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

காவிரி ஆணையத்தில் தமிழ்நாடு சரியாக வாதிட்டதா?

காவிரி ஆணையத்தில்
தமிழ்நாடு சரியாக வாதிட்டதா?

முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும்

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

இன்று (28.5.2019) புதுதில்லியில் நடுவண் நீர்வளத்துறை தலைமை அதிகாரி திரு. மசூத் உசேன் அவர்கள் தலைமையில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்த முடிவினைத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, “வரும் சூன் மாதம் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 9.2. டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்” என்று ஆணையிட்டியிருப்பதாக அறிவித்தார்.

கடந்த டிசம்பரிலிருந்து மே (2019) வரை 19.5 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். டிசம்பர் 7.3. டி.எம்.சி, சனவரி 3.00 டி.எம்.சி., பிப்ரவரி – மார்ச்சு, ஏப்ரல் – மே மாதங்களுக்குத் தலா 2.3 டி.எம்.சி திறந்திருக்க வேண்டும். இந்த பாக்கித் தண்ணீரைத் தமிழ்நாட்டு அதிகாரிகள் கேட்டதாகத் தெரியவில்லை. திரு.பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களிடம் இதுபற்றிக் கூறவில்லை.

தண்ணீர் ஆண்டு என்பது சூன் மாதம் தொடங்கி மே மாதம் முடிகிறது. 2018 – 2019க்கான தண்ணீர் ஆண்டில் டிசம்பர் முதல் மே மாதம் வரையில் தமிழ்நாடு பெற வேண்டிய தண்ணீரை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பு ஏன் கேட்கவில்லை? கேட்டோம் என்றோ அல்லது கேட்கவில்லை என்றால் அதற்குரிய காரணத்தையோ தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

சூன் மாதம் நான்கு தவணைகளில் திறந்துவிட வேண்டிய தண்ணீர் பற்றி கர்நாடகத் தரப்புக் கருத்துக் கூறும்போது, பருவமழை நன்றாக இருந்தால் திறந்துவிடுகிறோம் என்று சமாளிப்பாகக் கூறியுள்ளார்கள். 9.2 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகம் ஒப்புக்கொண்டதாக இதை எடுத்துக் கொள்ளமுடியாது. கடந்த கால அனுபவங்கள் மிகவும் கசப்பானவை.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவிற்கும் முழு நேரப்பணியாகக் கொண்ட அதிகாரிகளை அமர்த்த வேண்டும் என்றும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பெங்களூரில் நிறுவப்படவேண்டும் என்றும் தமிழ்நாட்டுத் தரப்பு அதிகாரிகள் ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தினார்களா என்பது பற்றி பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறவில்லை.

இக்குறைபாடுகள் பற்றி பொதுப்பணித்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் சந்தேகங்களை போக்க தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். இனியாவது கடந்த டிசம்பரிலிருந்து திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுபடி ஆணையிட வேண்டுமென்று மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 76670 77075, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
http://www.kaveriurimai.com
==========================

தமிழ்நாட்டிற்காகவே மேகதாதுவில் அணை கட்டுகிறதாம் கர்நாடக அரசு?!

என்ன ஒரு பாசம் கர்நாடக அரசிற்கும் கன்னடர்களுக்கும். அப்படியே பொங்கிப் பாய்கிறது காவிரியாக அன்பும் பற்றும். கேரளாக்காரர்கள் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு தனியாக புதிதாக வேறு அணை கட்டித் தருகிறோம் என்பதும் தமிழர் மேல் உள்ள தீராத பற்றினால் தானே?!. நாம் அவற்றை எல்லாம் நம்பியே ஆக வேண்டும்?! இல்லாமல் போனால் தமிழருக்கு பகுத்தறிவே இல்லாமல் போய்விடும். நம்புங்கள் தமிழர்களே! நம்புங்கள்.
ஏற்கெனவே இருந்த காவிரி நீர் தமிழகத்தை எட்டி பார்க்காமல் செய்த அதே கர்நாடகம் எது எதையோ சொல்லி தமிழக முதலமைச்சருக்கே நேராக கடிதம் எழுதுகிறது. என்ன ஒரு தைரியத்தை தமிழகத்தை ஆண்ட ஆளுகின்ற முதலமைச்சர்கள் தந்திருக்கிறார்கள் அவர்களுக்கு.

காவிரி நீரை பருக வேண்டும் என்றால் தமிழர்கள் கர்நாடகத்திற்கு வரவேண்டும்.. என்ற தேவராச அரசுக்கு கூட்டணி அமைத்தவர்கள் அல்லவா நம்ம முதலமைச்சர்கள்.
கடலில் போய் எவ்வளவு நீர் கலந்தாலும் ஒரு பொட்டு தண்ணீரும் தமிழ் நாட்டிற்கு தர மாட்டோம் என ஒற்றுமை இந்தியாவை பேசிய கேரள நீர் பாசன துறை அமைச்சராக இருந்த பாலகிருட்டிணபிள்ளையை நாம் மறந்து தானே போனோம்.

தமிழ்நாட்டில் தமிழரெல்லாம் ரசிகர் மன்ற அரசியலில் பெரும் பதவிகளை எல்லாம் பெறும் பாக்கியம் பெற்றவர்களான பின்பு எல்லாம் நடிப்பும் வேடமுமாகிப் போனது.
இனிமேல் ஆறாவது? ஏரியாவது.. அது எல்லாம் தமிழ் நாட்டிற்கு எதற்கு? இதற்கு முன் கன்னடர்கள் விட்ட தணாணீரையே தமிழ்நாடு அரசு தேக்கி வைத்துக் கொள்ள வில்லையாமே.. என்ன அக்கரை பாருங்கள் கன்னடத்தவருக்கு!
இங்கே அரசியலா நடக்குது? எல்லாம் பொய் புகழ்ச்சி.
ஆங்கிலேயன் அணைகளை கட்டிய போது வைத்த சட்டத்தை தூக்கி வாரி குப்பையில் போட்டவர்கள். எத்தனை நீதிமன்ற நடுவர் மன்ற ஆணைகளை தீர்ப்புகளை கண்ணெடுத்தும் பார்க்காதவர்கள் நமக்காக அணை கட்டி நீரைத் தேக்கி தமிழர் வீடுகளுக்கும் கொண்டு வந்து கொடுக்கப் போறாங்களாம்?!
அப்போ நமக்கு எதுக்கு தனியா ஒரு மாநில அரசு? அதனால தான் அவர்களே நம்ம தமிழ் நாட்டு பாராளுமன்ற உரிப்பினர்களை நேரில் சந்தித்து பேச ஒரு கர்நாடக அமைச்சரே போயிருக்காரு தில்லிக்கு.

இனிமேல் நம்ம வாழ்க்கையை நமக்கு உதவாத நடுநிலை என்ன என்பதே தெரியாத நடுவணரசும் தமிழ்நாட்டு வளமை காக்க எண்ணாத தலைவர்களம் தமிழ்நாட்டில் பெருகி வழியும் வரை நமக்கு கவலை எதுவும் வரப் போவதில்லை.
அப்படியே நமக்கு காவிரியும் முல்லைப் பெரியாறும். கூடவே நம் உரிமை எண்ணங்களும். இருக்கும் எதையும் காக்கத் தெரியாத அரசும் அரசியலும் மக்களுக்கு தொல்லையே.. இவர்களிடம் மண்டியிட்டு கிடக்கும் மக்களை பற்றி சொல்லவே தேவையில்லை. கவலையே இல்லாதவர்களாக ஆக்கியவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
வணக்கம்.

பாவலர் மு. இராமச்சந்திரன்
தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

காவிரி கலவரத்தில் உயிர் நீத்த தமிழர்கள் நினைவு நாள்

13.12.1991

காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டதை எதிர்த்து கன்னட இனவெறியர்கள் கும்பல் கும்பல்களாக இணைந்து கொண்டு கையில் ஆயுதங்களை தூக்கியபடி கன்னட வாழ் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் . ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். ஒரு இலட்சத்திற்கும் மேல் அகதிகளாக தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர். கன்னட காமுகர்கள் வெறி கொண்டு தமிழ்ப்பெண்கள் பலரை பாலியல் வல்லுறவு கொண்டனர். தாலி அணிந்த பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

கோடிக்கணக்கான தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழர் வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டன. இலங்கையில் சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய சூலைக் கலவரத்திற்கு இணையாக கன்னட இனவெறியர்கள் நடத்திய இந்த திசம்பர் கலவரத்தை குறிப்பிடலாம். கன்னட இனவெறியன் வட்டாள் நாகராஜ் என்பவன் முழு அடைப்பு என்ற பெயரில் தமிழர் மீது தாக்குல் நடத்த உத்தரவிட்டான்.

காங்கிரசு முதல்வர் பங்காரப்பாவோ ஒருபடி மேலாக காவல்துறை பாதுகாப்போடு தமிழர் மீது தாக்குதல் நடத்த தன் கட்சியினரை தூண்டி விட்டான்.

தமிழர் மீது கோரத்தாண்டவம் நடத்திய கன்னட வெறியர்கள் தண்டிக்கப்பட வும் வில்லை . தமிழர்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்பட வும் வில்லை. தமிழர்களாகிய நாம் இந்த கறுப்பு நாளை நினைவு கூறுவோம்.

கன்னட இனவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடி தமிழர் உயிரையும் , உடைமையும் காக்க உறுதியேற்போம்!

Tamilthesiyan.wordpress.com

காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி அளிப்பதா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கர்நாடகாவில் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணைகட்ட முனையும் கர்நாடக அரசின் செயல்திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் மத்திய அரசின் செயலானது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. தமிழர்களின் உரிமையினை மறுத்து உணர்வினை உரசிப் பார்க்கும் பாஜக அரசின் இத்தொடர் தமிழர் விரோதப் போக்குகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.

கர்நாடகாவில் அமைந்துள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலுக்கு அருகாமையில் மேகதாதுவில் இரு தடுப்பணைகள் கட்டி, நீர்மின் நிலையம் தொடங்க ரூ. 5912 கோடி மதிப்பீட்டில் செயல்திட்டத்தினை வகுத்து நிறைவேற்றுவதற்குரிய அரசியல் காய்நகர்த்தல்களைக் கர்நாடக அரசு செய்து வருவதை அறிந்து அதனை நாம் தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில், தற்போது அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகிற காவிரிப்படுகை முழுவதும் புயல் பாதிப்பினுள் சிக்குண்டு விவசாயிகளும், பொது மக்களும் பாரிய இழப்புகளைச் சந்தித்து துயரத்தின் நிழலில் நிற்கிற கொடுஞ்சூழலில் அவர்களது அவலத்தைப் போக்கக் கரம் நீட்டாத மத்திய அரசு, அவர்களின் வாழ்வாதார உரிமையான காவிரி நதிநீர் உரிமையைக் காவு கொடுக்கும் வகையில் மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கியிருப்பது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சும் கொடுஞ்செயல். தமிழகத்தின் ஒப்புதல் அல்லாது கர்நாடகா அரசு அணைகட்டக் கூடாது என திட்டவட்டமாக காவிரி நடுவர் மன்ற விதிகள் தெளிவுப்படுத்தி இருக்கிறபோதும் அது எதனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது, தான்தோன்றித்தனமாக கர்நாடகா மாநிலத்திற்குச் சார்பாக முடிவெடுத்துள்ள மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கானது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் பெருந்துரோகமாகும்.

காவிரி நதிநீர் சிக்கலில் தொடக்கம் முதலே விதிகளை மீறிப் பல்வேறு அணைகளைக் கட்டியும், நிர்ணயிக்கப்பட்டதைத் தாண்டிப் பாசனப் பரப்பைப் பலதருணங்களில் விரிவுப்படுத்தியும் அராஜகப் போக்கைக் கையாண்டு வந்தது கர்நாடக அரசு. அதுமட்டுமல்லாது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஒரு ஆண்டுகூட செயல்படுத்தாது இருந்ததோடு, உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் பொருட்படுத்தாது கடத்தி விட்டிருக்கிறது என்பதன் மூலம் சனநாயக நெறிமுறைகளையும், சட்டதிட்டங்களையும், துளியும் மதியாது அத்துமீறி, பெரும் அநீதியைத் தமிழர்களுக்கு இழைத்திருக்கிறது என்பதை நாடறியும். அச்செயலின் விளைவாகத்தான், காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழர்களுக்கு எட்டாக்கனியாக மாறிப்போனது.

மத்திய அரசின் பாரா முகத்தாலும் கர்நாடக அரசின் தொடர் தமிழர் விரோதப் போக்காலும், முப்போகம் விளைவித்த காவிரிப் படுகையின் வேளாண் பெருங்குடி மக்கள் இன்றைக்கு ஒருபோக விளைச்சலுக்கும் வழியின்றி வேளாண்மையைக் கைவிடுவதும், தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோவதுமானப் பெருந்துயரம் இம்மண்ணில் பன்னெடுங்காலமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டிவிட்டால் சொட்டு காவிரி நீரும் இனி தமிழகத்திற்கு இல்லை எனும் பேராபத்து நிலை உருவாகும். அதன்மூலம், காவிரிப்படுகையின் வேளாண் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டு முழுமையாக வெளியேற்றி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எரிகாற்று வளங்களை நீரியல் விரிசல் முறையில் மண்ணைப் பிளந்து எடுத்துப் பொருளீட்டலாம் எனும் பெரும் வணிகசதி இதனுள் ஒளிந்திருக்கிறது. ஆகவேதான், தமிழகத்திற்குரியக் காவிரி நதிநீரை மத்திய, மாநில அரசுகள் நீண்ட நெடிய காலமாகத் தர மறுத்து வந்திருக்கின்றன என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. தனிப்பெரு முதலாளிகளின் தேவைக்காக மண்ணை நாசப்படுத்தி அழித்தொழிக்க முனையும் இக்கொடுங்கோல் திட்டங்களை மானத்தமிழர்கள் இனியும் அனுமதிக்க மாட்டோம் என ஆளும் வர்க்கத்துக்கு உரைக்கிறோம்.

ஆகவே, தமிழர்களின் உணர்வினை மதித்து காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அளித்திருக்கும் அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், அதற்கு மத்திய அரசிற்கு உரிய அரசியல் அழுத்தங்களைக் கொடுத்தும், சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தை நாடியும் கர்நாடக அரசின் செயலைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

வலைதளம்: https://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

http://bit.ly/CauveryDam

மொழிவழி மாநில வரலாறு அறிவோம்!

1895இல் மொழிவழி மாகாணம் கேட்டு முதன்முதலில் போராடியவர்கள் ஒரியர்கள். ஒரிய தேசத் தந்தை மதுசூதன் தாஸ் தலைமையில் அவர்கள் போராடி 1935இல் ஒரிசா என்ற பெயரில் தனி மாகாணம் கண்டனர். அதுபோலவே 1906 முதல் தனி மராத்திய கோரிக்கையும் வலுப்பெற்றது.

1919இல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்த திலகரும் கூட தனி மராத்திய கோரிக்கையையும் சேர்த்தே எழுப்பி வந்தார். காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி இயங்கிய போது மொழிவழி மாகாண கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தது.

1921இல் மொழிவழி அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதோடு அதற்கு சுயாட்சியும் வழங்க வேண்டும் என்று 1924இல் பெல்காமில் கூடிய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி பிரதேசங்கள் ஒன்றாக இயங்கி வந்த போது 1915 இலிருந்து ஆந்திரர்கள் தான் முதன் முதலில் தனி மாகாணம் கேட்கத் தொடங்கினர். 1921இல் தனி ஆந்திர காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்ட பின்னர் எல்லைச் சிக்கல் ஏற்பட்டது.

திருப்பதிக்கு தெற்கே உள்ள தமிழகப் பகுதிகளும் தங்களுக்கே சொந்தம் என்று ஆந்திரர்கள் வாதிட்டனர். திருப்பதி, திருத்தணி, சித்தூர் ஆகிய. மூன்று தாலுக்காக்களையும் தமிழ்நாடு காங்கிரசில் சேர்க்கப்பட வேண்டுமென்று சத்திய மூர்த்தி ஐயர் கோரினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆந்திர காங்கிரசுக்கு மேற்படி தாலூக்காக்கள் தாரை வார்க்கப்பட்டது.

1926இல் மத்திய சட்டப்பேரவையில் சி.சங்கரன் நாயர் என்பவர் சென்னை மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் பத்து மாவட்டங்களை தனியாகப் பிரித்து சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

1937இல் இராசாசி அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை மேற்கண்ட போது தமிழ்நாடு தனி மாகாண கோரிக்கையை தமிழறிஞர்கள் எழுப்பினர். இந்தி திணிப்பிற்கு எதிராக பெரியாரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். போராட்டம் தீவீரமடைந்த நிலையில் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்தது. பெரியார் அந்த முழக்கத்தை “திராவிட நாடு திராவிடருக்கே” என்று திசை மாற்றினார். தமிழ்நாடு மாகாணக் கோரிக்கை காணாமல் போனது.

அதற்குப் பிறகு 1946இல் தமிழ்நாடு மாகாணக் கோரிக்கைக்கு புத்துயிர் தந்தவர் ம.பொ.சிவஞானம் ஆவார். மொழிவழித் தமிழகம் அமைக்கக் கோரியும், தமிழக எல்லைகளை மீட்கக்கோரியும் தெற்கெல்லையில் மார்சல் நேசமணி தலைமையிலும், வடக்கெல்லையில் ம.பொ.சி., மங்கலங்கிழாரின் ஒன்றுபட்ட தலைமையிலும் தமிழர்கள் விடாது போராடி வந்தனர். 1.11.1956இல் மொழிவழித் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.

இருப்பினும், தமிழர்களின் வரலாற்று வழி வந்த கோலார், கொள்ளேகால், நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, உடுமஞ்சோலை, செங்கோட்டை வனப்பகுதி, கண்ணகி கோயில், தேவி குளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், புத்தூர், நகரி, ஏகாம்பரம் குப்பம், ஆகிய பகுதிகளை தமிழகம் இழந்ததால் காவிரி நீருக்கும், முல்லைப் பெரியாற்று நீருக்கும், பாலாறு நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வந்து விட்டது.

மா.பொ.சி. அவர்களால் சென்னை, திருத்தணியும், நேசமணி அவர்களால் கன்னியாகுமரியும் தமிழனுக்கு கிடைத்த ஆறுதல் பரிசாகும். மா.பொ.சியின் தமிழரசுக் கழகமும். நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும் போராடியிருக்கா விட்டால் மொழிவழித் தமிழ்நாடு கிடைத்திருக்காது. அன்றைய காங்கிரசு அரசும், திராவிட இயக்கங்களும் தனியாக போராட்டம் நடத்த மறுத்த செயல் தமிழக வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகவே உள்ளது. 1946 முதல் 1960 வரை வீறு கொண்டெழுந்த தமிழக எல்லைப் போராட்டங்கள் குறித்து இன்றளவும் காங்கிரசும், திராவிட இயக்கமும் பேசுவதில்லை.

தற்போது தில்லியில் ஆட்சி நடத்தும் பாரதீய சனதாவாகட்டும், முன்பு ஆண்ட காங்கிரசாகட்டும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் ஒன்றுபட்டு செயல்படுவதை நாமறிவோம்!

தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும் இன்றைய சோனியா காங்கிரசு விசுவாசம் காட்டுவது போலவே அன்றைய நேரு காங்கிரசும் விசுவாசம் காட்டியது. தமிழக காங்கிரசை வழி நடத்திய காமராசரும் தேசிய சிந்தனையுடன் தமிழக எல்லைகளை மீட்பதில் அக்கறையற்றவராகவே காணப்பட்டார்.

தில்லியின் ஆசிர்வாதத்தோடு ஆட்சி நடத்திய இராசாசி கூட, “சென்னையை ஆந்திராவிற்கு தமிழகம் துறக்குமானால் நான் பதவி துறப்பேன்” என்று பேசினார். காமராசரோ இந்திய தேசம் என்ற ஒற்றை கொள்கையில் பிடிவாதமாக இருந்து கொண்டு “குளமாவது மேடாவது” என்று தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை விட்டுக்கொடுத்தார்.

சங்கரலிங்கனார் நடத்திய “தமிழ்நாடு” பெயர் சூட்டும் போராட்டத்தை கண்டு கொள்ள மறுத்தார். எனினும் தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பியிருந்தார். அண்ணா தலைமையிலான ஆட்சி அமைந்த போதே இதற்கான ஒப்புதல் கிடைத்தது. எல்லை ஆணையம் அமைக்கக் கோரி இயக்கம் நடத்திய ம.பொ.சி.யை கட்சியிலிருந்தும் நீக்கினார். அன்றைய காங்கிரஸ் கட்சியிலிருந்து தெலுங்கர்களின் ஆதிக்கம் மற்றும் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் போன்றவற்றுடன் நெருங்கியிருந்த இராசாசி போன்றவர்களால் ம பொ சி க்கு மறைமுகமாகவே உதவ முடிந்தது என்று தகவல்கள் உள்ளது. நேசமணிக்கும் இதே நிலை தான். மலையாள சமஸ்தான காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்தார். நேசமணியின் விருப்பமான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை சென்னை மாகாண காங்கிரசோடு இணைக்க மறுத்தார். அவரது விருப்பமில்லாததற்கு காரணமே நல்ல நிலையிலிருந்த கன்னியாகுமரியை பின்தங்கியிருக்கும் தமிழகப்பகுதியுடன் இணைக்க வேண்டுமா என்ற குழப்பமே. இருப்பினும் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கிணங்க காமராசரின் தலைமையிலேயே குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இன்று வரை தனது சாதியினர் அதிகமிருந்ததனாலேயே குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்தார் என்ற பழிச்சொல்லுக்கும் குறைவில்லை.

எல்லை மீட்புப் போருக்கு காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சி தீமை செய்தது ஒருபுறம் என்றால், திராவிடக் கட்சிகளின் திராவிட நாடு கோரிக்கையும், மறுபுறம் தீமை செய்தது. தமிழ்நாடு மாகாண கோரிக்கையை திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகவே பெரியார் கருதினார். அதே வேளையில் விசாலா ஆந்திரா, ஐக்கிய கேரளம், சம்யுக்த கர்நாடகம் என்று முழக்கம் எழுப்பிய தெலுங்கர்களையோ, மலையாளிகளையோ, கன்னடர்களையோ, திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகக் கருதி பெரியார் கண்டிக்க மறுத்தார்.

தி.க.விலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்ட அண்ணாவும் திராவிட நாடு கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்திருந்தும் எல்லைப் மீட்புப் போரை முன் நின்று நடத்த ஓடோடி வரவில்லை.

அண்ணாவோடு மாறு பட்டு 1956இல் திராவிட நாடு விடுதலையை கைவிட்டு, தமிழ்நாடு விடுதலைக்கு போராடுவதாக அறிவித்த பெரியாரும் வடவேங்கடம், திருத்தணி மீட்பு போரில் மவுனம் காத்து வந்தார். கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல தாய் மண்ணை விற்று தமிழ்நாடு வாங்க முடியாது என்பதும் உண்மை.

வடக்கெல்லைப் போரில் இரண்டு பேர் சிறையிலும், தெற்கெல்லைப் போரில் ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான கதை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்! தங்கள் பங்களிப்பு இல்லாத காரணத்தால் திராவிட இயக்கங்கள் இந்த வரலாற்றை மூடி மறைக்கவே நினைக்கின்றன.

மொழிவழி கர்நாடகம் அமையப் பெற்ற நவம்பர் ஒன்றாம் நாளில் கன்னடர்கள் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடத் தவறுவது இல்லை. கன்னடர்கள் சிவப்பு மஞ்சள் நிறம் கொண்ட கன்னடக் கொடிகளை தங்கள் இல்லங்களில், தெருக்களில், அலுவலகங்களில் பறக்க விடுவர். ஆடியபாடியும் பாடிய படியும் கன்னடர் எனும் இனவுணர்வோடு மகிழ்ச்சி கொள்வர். இதனை கன்னடர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

காலங்காலமாக அண்டை தேசங்களாலும், தில்லி அரசாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் அவல நிலையை இனியும் தொடர தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. இழந்த மண்ணை மீட்கவும், இருக்கும் மண்ணை காத்திடவும், இறையாண்மை கொண்ட தமிழ்நாடு விடுதலை பெறவும் தமிழர் தாயக நாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்!