மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்!

1999-ம் ஆண்டு சூலை 23ம் தேதி அன்று ஆதவனேக் கொஞ்சம் மெதுவாகத் தான் எழுந்திருப்பான். மாஞ்சோலையில் வேலை செய்த நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் தங்களது 70 ரூபாய் கூலியை 100 ரூபாயாக உயர்த்தக் கோரியும், ஏற்கனவே சிறையில் உள்ள 625 தோட்டத் தொழிலாளர்களை விடுவிக்கக் கோரியும் மேலும் ஒரு சிலக் கோரிக்கைகளுடனும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாரைச் சாரையாகச் சென்றனர்.

அவர்களை தடுப்பதாகச் சொல்லி விரட்டியடித்து தடியடி நடத்தியதிலும், கற்களை வீசியதிலும் 17 தோட்டத் தொழிலாளர்களும், ஒரு குழந்தையும் உட்பட மொத்தம் 18 உயிர்கள், வெறும் முப்பது ரூபாய் கூலியை அதிகமாக கேட்டதற்கு பலிக் கொடுக்கப்பட்டது! மேலும் காவல் துறையின் தாக்குதலில் ஏறத்தாழ ஐநூறு தொழிலாளர்கள் வீதம் காயப்பட்டனர்!

அதிமுகவிற்கு ஒரு தூத்துக்குடி!
திமுகவிற்கு ஒரு மாஞ்சோலை!

ஈகிகளை நினைவுக் கூறுவோம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தோயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இசுலாமிய அமைப்பினர் தலைமையில் பேரணியாக சூலை 23, 1999 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப் பேரணியாக வந்தனர்.

வழி நடத்தி வந்த அரசியற் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவற்துறை மறுத்தது. ஆகையால் காவல்துறைக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்படவே, காவல் துறை திடீரென தடியடி நடத்தியது. காவல்துறையின் தாக்குதலை எதிர்பாராத மக்கள் நிலை குலைந்து சிதறி ஓடினார்கள். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மறுபுறம் தாமிரபரணி ஆறு.

தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சாதி மதத்தைச் சேர்ந்த பதினேழு பேர் மரணமடைந்தனர். மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தார்கள்.

குறிப்பு: திமுகவின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் தெலுங்கர் தெட்சிணாமூர்த்தி சின்னமேளம் (கருணாநிதி) அவர்களால் நடத்தப்பட்ட அரசப்பயங்கரவாத படுகொலை!!

மருது மக்கள் இயக்கம் சார்பில் உயிர் தியாகம் செய்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்! வீரவணக்கம்!!

புரட்சிவேங்கை மு.பா
நிறுவனர்/ தலைவர், மருதுமக்கள்இயக்கம், தமிழ்த்தேசிய_கூட்டமைப்பு

சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் – மாவட்ட ஆட்சியாளராக இருந்த கடந்த மூன்று வருட காலத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்

2017-ஆம் ஆண்டு இவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக பதவியில் இருந்த போது… கந்து வட்டி கொடுமை பற்றி காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் பல குறை தீர்ப்பு நிகழ்விலுகளிலும் மனுக்கள் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காதபடியால், இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டனர் ! இன்று வரை அவர்கள் இறப்புக்கும் கந்துவட்டி கொடுமைக்கும் நீதி கிடைத்தபாடு இல்லை… 😦

2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக மக்கள் போராடியபோது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பதினைந்து பேருக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். அந்த சமயத்தில் இவரை தூத்துக்குடிக்கு அவசர அவசரமாக மாவட்ட ஆட்சியாளராக பணிமாற்றம் செய்தார்கள். இவர் வந்தவுடன் ஒரு வாரம் தூத்துக்குடியில் இருந்து எந்தவிதமான செய்தியும் வெளியே கசிந்துவிடாமல் இருக்க, உடனடியாக இணையதள சேவை மற்றும் அலைபேசி சேவைகளை முடக்கி பல்வேறு உண்மைத்தன்மைகளை ஊடகத்திற்கும் மக்களுக்கும் தெரியவிடாமல் அமுக்கிவைக்க மிக முக்கிய காரணமாக இருந்தார். இன்று வரை அவர்களுக்கான நீதி கிடைத்தபாடு இல்லை… 😦

தற்போது 2020-ஆம் ஆண்டு இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளராக பதவியில் இருக்கும் போது… சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறிய கடைதிறப்பு என்ற சாதாரண வழக்குக்காக காவல்நிலையத்தில் வைத்து தந்தை மகன் என்று இரண்டு அப்பாவி வியாபாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் ! இவர்களுக்கான நீதியை மட்டும் இந்த மாவட்ட ஆட்சியர் எப்படி வாங்கி கொடுப்பார் என்று நம்புவது ???

தமிழக அரசு இதுபோன்ற மாவட்ட ஆட்சியாளர்களின் பதவி காலங்களில் நடைபெறும் அதிகார அத்துமீறல்கள் பற்றிய செய்திகள் வந்தவுடன், அவர்களை வேறு ஊருக்கு மாற்றாமல் வேறு துறைக்கே மாற்றிவிட்டு ஐயா சகாயம் போன்ற திறன்மிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியாளர்களாக நியமிக்க உடனடி அரசாணை ஏற்படுத்த இனியாவது வழிவகை செய்ய வேண்டும் !!!

சிங்கவால் குரங்கு

களக்காடு புலிகள் காப்பக எல்லைக்குள் இருப்பதே இந்த திருக்குறுங்குடி சிங்கவால் குரங்குகள் சரணாலயம். இங்கு குரங்குகள் அதிகளவில் வசிக்கின்றன.

திருநெல்வேலியில் இருக்கும் போது மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வருவேன். இப்போது பணி என்னை அயலில் தூக்கி சென்றுவிட்டது.

குரங்கு இனங்களான, அனுமன் குரங்கு எனப்படும் குல்லாய் மந்திகள், சுள்ளிய சாம்பல் மந்திகள், சிங்கவால் குரங்கு எனப்படும் சோலை மந்திகள் அதிகளவில் இங்கு காணப்படுகிறது.

அவை குடும்பத்துடனும் குட்டியுடனும் விளையாடும் விளையாட்டை இங்கு காணலாம்.

சிங்கவால் குரங்குகளை காண்பது அரிது என்றாலும், சுள்ளிய சாம்பல் மந்திகள், அனுமன் குரங்குகளை அதிகளவில் நம்மால் பார்த்து ரசிக்க முடியும்.

இங்கு, மலைமேல் அமைந்துள்ள நம்பி கோவிலுக்கு செல்லும் போது இவை அனைத்தும் நம்மை வழி மறித்து வழிப்பறி செய்கின்றன. அது ஒரு அலாதியான தருணமாக இருக்கும்.

குரங்குகளின் சொர்க்க பூமியாக இந்த இடம் திகழ்கிறது.

போதாக்குறைக்கு ஆற்பறித்து அசைந்தாடும் நம்பி நதியும் குறிப்பிட்ட மூன்று நம்பி அருவிகளும் நம்மை உச்சிக்குளிர செய்துவிடும்.

அட போங்கப்பா… அது மட்டுமா… கரடி, புலி, காட்டெருமை, யானை, சிறுத்தை, செந்நாய், கடமான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல விளங்குகளுக்கும் இவ்விடம் புகலிடமாக உள்ளதே…

அருணாசலம் பிள்ளை சாப்பாடும் சொதிக்குழம்பும்

சமையல் செய்வதும் ஏறக்குறைய தவம் செய்வதைப் போன்றதுதான்.

தவம் செய்கிறவர்களின் மனம் ஒருபுள்ளியில் இருக்கும்.

சமையல் செய்கிறவர்களும் அப்படித்தான்.
ஆக்குப்பரை எனும் சமையல்கட்டில் சமையல் செய்யும் சமையல்தொழிலாளி பதம் மாறாமல் எவ்வளவு உப்புப்போடவேண்டும் எவ்வளவு இனிப்பு போடவேண்டும், புளிகரைத்து ஊற்றினோமா என்பதில் கவனம் இல்லாவிட்டால் செய்த குளறுபடிகள் பத்துநிமிடங்களில் பச்சை வாழையிலையில் சாப்பிடும் வக்கனையான வாய் சாட்சிசொல்லிவிடும்.


ஆக்குப்பரை எனும் சமையல்கட்டில் சமையல் செய்யும் சமையல்தொழிலாளி பதம் மாறாமல் எவ்வளவு உப்புப்போடவேண்டும் எவ்வளவு இனிப்பு போடவேண்டும், புளிகரைத்து ஊற்றினோமா என்பதில் கவனம் இல்லாவிட்டால் செய்த குளறுபடிகள் பத்துநிமிடங்களில் பச்சை வாழையிலையில் சாப்பிடும் வக்கனையான வாய் சாட்சிசொல்லிவிடும்.

ஒருவினாடி கூட அங்கிங்கு அகலாமல் தவம் போல் செய்யப்படுவது சமையல். அதனால் சமையல்கலைக் கலைஞர்களைத் தவசுப்பிள்ளைகள் என்று நெல்லைப் பக்கம் அழைப்பர்.

தவசுப்பிள்ளை என்கிற சொல் திருநெல்வேலிக்கே உரித்தான சொல். எவ்வளவு பொருள்பொதிந்த சொல்!

ஒருதிருமணத்தில் திருப்தியான விஷயம் சமையல்தான். வடக்குப்படையான் மவன் கல்யாணத்துக்குப் போனேன் போட்டான்பாரு ஒரு சாப்பாடு சான்சே இல்லை தெரியுமா? என்று பத்து வருடங்களுக்கு முன்நடந்த திருமணத்தைப் பற்றி வளவு வீட்டில் உக்காந்து இன்னிக்கும் பேசிட்டிருக்கிற ஆளுக நம்ம பாளையங்கோட்டையில் உண்டு.

மதுரம், ஜானகிராம், ஆர்யாஸ், சரவணபவன் போன்ற பெரிய நிறுவனங்கள் இன்று பெரியபெரிய திருமண ஆர்டர்களை அந்தந்த மண்டபங்களுக்கே போய் அழகான ஸ்டால்கள் போட்டு சுடச்சுட அங்கேயே செய்து தருகின்றன.

எண்பதுகளில் தவசுப் பிள்ளை என்றால் அருணாசலம் பிள்ளைதான்.

திருமணம் என்றவுடன் இன்றிருக்கும் கேட்டரிங்க் எல்லாம் அன்று இல்லை.

சடங்கு காது குத்து நிச்சயதார்த்தம் என்றால் ஐம்பது பேருக்குள்தான் விசேச வீடுகளில் கூப்பிடுவார்கள், அவர்களுக்காகத் தனியே தவசுப் பிள்ளை போட்டு சமைக்க முடியாது.

அப்படிப்பட்டவர்களுக்கு ஆபத்பாந்தவன் தான் அருணாசலம் பிள்ளை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாடவீதியில் இருக்கும் சங்கர் அதேபோல்தான், கல்யாணவீடுகளில் அவர் சமையல் தூள்பறக்கும்.

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும்போது இறுதிநாள் அந்தாண்டு யார் ஓய்வு பெறப்போகிறார்களோ அவர்களுக்கு விருந்து உபசாரம் நடக்கும்.

சில்வர் வாளியில் அவியல் மணத்தோடு வந்துவிட்டதென்றால் அருணாசலம் பிள்ளை சமையல் என்று பொருள்.

சேனையையும் கத்தரிக்காயையும் கேரட் பீன்ஸையும் உருளைக்கிழங்குடன் போட்டு தேங்காய் எண்ணெய் கமகமக்க அவர் செய்துதரும் அவியலை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

அப்பாவோடு அருணாசலம் பிள்ளை வீட்டிற்கே போயிருக்கிறேன். அவர் ஜோஸப் பேக்கரிக்கு எதிரேயுள்ள முருகப்பெருமான் தெருவில் அப்போது அருணாசலம் பிள்ளை இருந்தார்.

நெற்றிநிறைய திருநீறு, தோளில்துண்டு, தும்பைப்பூ போன்ற வேட்டி..போனவுடன் முன்னறையில் சூடாகக் காபி வரும், ஆள்சிவப்பழமாய் இருப்பார். போனவுடன் பெரிய வணக்கம் போடுவார். “ சார்வா எங்கிருந்து வர்ரிய?” என்பார்.

சொல்லிமுடித்தவுடன் என்ன நிகழ்ச்சி? , என்ன சாப்பாடு? எத்தனை பேருக்கு வேண்டும்? என்று கேட்பார். அதற்கு அவர் வாங்கும் தொகை மிக நியாயமானது.

சென்னையில் அவர் இருந்திருந்தால் டிவி சமையல் நிகழ்ச்சி பத்திரிகைப் பேட்டி என்று அவரைக் கொண்டாடியிருப்பார்கள்.

அவர்வீடே கல்யாணவீடு மாதிரி இருக்கும். ஒருபக்கம் வெங்காயம், பூண்டு உறித்துக்கொண்டிருப்பார்கள், இன்னொரு பக்கம் காய்கறிகள் நறுக்கிக்கொண்டிருப்பார்கள். மூட்டைமூட்டையாய் அரிசி இருப்பில் இருக்கும்.

வாழைப்பழம் தார்தாராகத் தொங்கிக் கொண்டிருக்கும்.

எவ்வளவுபேருக்குச் சாப்பாடு என்று முந்தைய நாளே சொல்லிவிட்டால் சொன்னநேரத்தில் ஆட்டோவில் டானென்று உணவு வந்து இறங்கிவிடும்.

எண்பதுகளிலேயே தலையில் தொப்பியோடு சீருடையில் உணவு பறிமாற ஆட்கள் வைத்திருந்தார்.

அவர் திருநெல்வேலி ஸ்பெஷல் சொதிக்குழம்பு வைத்தார் என்றால் சாதப் பற்றாக்குறை வந்துவிடும். தேங்காய் துறுவலைத் தண்ணீர்விட்டு ஆட்டி பால் எடுத்து பாசிப்பருப்பை வறுத்து மிளகாய் பூண்டுடன் வேகவைத்து அவர் செய்யும் சொதிக்குழம்பு அத்தனை சுவையானது. இஞ்சிப் பச்சடியோடு சொதிக்குளம்பும் அவர் கை மணத்தில் திருநெல்வேலி முழுக்க மணக்கும்.

திருநெல்வேலியில் திருமணத்திற்கு மறுநாள் மறுவீடு அன்று அதுதான் வைக்கப்படும்.

மதியச்சாப்பாட்டிற்கு மட்டுமல்ல இரவு ஊத்தப்பத்திற்கும் இடியாப்பத்திற்கும் அவர் வைத்த சொதி சுவையான இணையுணவுதான்.

அன்றுமுதல் இன்று வரை வெள்ளிக்கிழமை என்றால் நெல்லை உணவகங்களில் சொதிக் குழம்புதான். சாப்பிட்டுவிட்டு சனி ஞாயிறு வீட்டில் தூங்கவோ என்னவோ அப்படியொரு வழக்கம் இன்று வரை நெல்லை உணவகங்களில் தொடர்கிறது.

பள்ளிநாட்களில் பாலாதான் ரெகுவிலாஸ் அழைத்துப் போனான். எந்த கடையில் எது நன்றாக இருக்கும் என்ற நாடித்துடிப்பை அறிந்தவன் அவன்.

நான் வழக்கம்போல் ங வென்று பின்னால் போகும் ரகம். அற்புதமான சுவைக்கலைஞன் அவன் நம் நண்பனாக வாய்த்து வேறுவழியில்லாமல் இப்படிக் கூட்டிக்கொண்டு அலைகிறானே என்று அவ்வப்போது நினைப்பேன்! என்ன செய்வது? யாருக்கு யார் நண்பனாக வாய்க்க வேண்டும் என்று அந்த தேவன் எழுதியதை இந்த தேவன் மாற்றமுடியுமா?

எங்கள் சொதிசுவையகமான ரகுவிலாஸ் டவுண் சந்திப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்தது. மிகப் பழைய உணவகம்.

சொதியும் கூழ்வத்தலையும் இஞ்சித் துவையலை ஒருபிடி பிடிப்போம். அதைவிட்டால் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள விசாகபவன். ஆரெம்கேவி போய் தீவாளிக்குத் துணிமணிகள் எடுத்துவிட்டு மூணுமணிக்கு விசாகபவன் போனாலும் சொதிக்குழம்பு இருக்கும்.

ரசம்,மோர், வத்தக் குழம்பெல்லாம் அன்று கணக்கில் எடுப்பதே கிடையாது.

மொத்தச் சாதம் முடிகிறவரை ஒன்லி சொதிதான். மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு பீடாவைச் சவைத்தவாறு அங்கிருந்து மார்க்கட் பஸ் ஏறினால் நயினார்குளம் அரசமரநிறுத்தம் வரும்போது ஒரு சொக்குசொக்குமே அந்தநாள் மீண்டும் வராது. தூங்கிஒருநாள் ஹைகிரவுண்ட் ரவுண்டானாவில் முழிப்புவந்து திரும்ப அதே பஸ்ஸில் மார்க்கட் வந்து இறங்கியது ADJ கண்டக்டர் தலையில் அடித்துக்கொண்டதும் மறக்கமுடியாத மகாத்மியங்கள்.

டவுண் போகமுடியவில்லை என்றால் மார்க்கட் அன்னபூர்ணாவுக்கு அருகில் உள்ள சேதுமெஸ்தான் எங்கள் அடுத்த தெரிவு.

பெரியகடை போன்றெல்லாம் இருக்காது.

வீட்டை மெஸ் ஆக மாற்றியுள்ளார்கள், அங்கே சொதிசாப்பிடுவோம்.

உணவுசமைக்கவும் உணவைப் புசிக்கவும் ரசனை இருந்தால் மட்டுமே சரியாகச் செய்யமுடியும்.

என் சேக்காளி ஒருவன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வியாழக்கிழமை சென்னையிலிருந்து நெல்லை எக்ஸ்பிரஸில் கிளம்பி பாளையங்கோட்டை வந்து சொதி சாப்பிட்டுவிட்டு இருநாட்கள் தாமிரபரணியில் திவ்யமாய் ஆனந்தக் குளியல் போட்டுவிட்டு ஞாயிறு மாலை அதே நெல்லை எக்ஸ்பிரஸில் இருட்டுக்கடை அல்வாவோடு கிளம்பி திங்கட்கிழமை எந்திரவாழ்க்கைக்குள் நுழைந்துவிடுவான்.

நகரத்தில் இருப்பவனுக்கும் நரகத்தில் இருப்பவனுக்கும் எப்போதும் ஒரு சொர்க்கம் இருக்கத்தானே செய்யும். எங்கள் சொர்க்கம் நெல்லையைத் தவிர வேறெங்கு இருக்கமுடியும்?

By

சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி

விஜய் டிவி “நீயா நானா” அந்தோணி செல்வராஜ் அவர்களின் சிறப்பு பேட்டி

எழுபதுகளில் இந்தியாவே வறுமையில தவிச்சுத் திண்டாடிட்டு இருந்தப்போ, நான் பிறந்தேன். திருநெல்வேலி பக்கத்துல ஆரைக்குளம்தான் சொந்த ஊர். அப்பா லாரி டிரைவர். அம்மா இல்லத் தலைவி. நாலு தங்கச்சிங்க.

அவ்வளவு வறுமையிலும் தாத்தா, அப்பான்னு எல்லாருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தது. எனக்கும் அந்தப் பழக்கம் அப்படியே தொத்திக்கிட்டது. பள்ளிக்கூடத்துல சுமாரான மாணவன்தான். ஆனா, எப்பவும் லைப்ரரியில்தான் இருப்பேன்.

நேசிச்சு வாசிச்ச ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுத்தது. அப்பாவின் வேலை, சென்னைக்கும் திருநெல்வேலிக்கும் ட்ரிப் அடிச்சுட்டே இருந்ததால இடப்பெயர்தலும் பயணங்களும் பழக்கமாச்சு. அப்பாவுக்கு நான் பத்திரிகையாளர் ஆகணும்னு ஆசை. அவருக்காகவே ஜர்னலிஸம் படிச்சேன்.

படிப்பு முடிஞ்சதும் சென்னை யிலயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைச்சது. ஆனா, நாலு தங்கச்சிகளை இன்னும் சீக்கிரம் கரையேத்தணுமேன்னு பாம்பே கிளம்பினேன்.

அங்கே முன்னணி ஆங்கில நாளிதழில் கிளார்க் மாதிரி ஒரு வேலை. ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வெறுப்பா இருந்தது.ஆனால், ‘அடுத்து என்ன?’ங்கிற கேள்விக்கான பதிலும் என்கிட்ட இல்லை…

பைபிளில், “பறவைகள் விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை” ன்னு ஒரு வாசகம் வரும். அது மனசுக்குள்ள பலமா எதிரொலித்துக்கொண்டே இருந்ததால், ஒரு நாள் சட்டுனு வேலையை விட்டுட்டேன்.

பிரின்டர்ஸ் ஆர்டர் எடுத்தேன். விளம்பர ஏஜென்ஸி, ஹோட்டல், ஐஸ்கிரீம் பார்லர்னு என்ன என்னவோ பண்ணேன். எல்லாமே தரமா பண்ணேன். ஆனா, வெற்றி கைக்கு எட்டலை. அப்பப்போ ஊருக் குப் போய் அம்மாகிட்ட பணம் கேட்பேன்.

நான் ஜெயிப்பேனான்னு தெரியலைன்னாலும், என் மேல இருந்த நம்பிக்கைக்காக நகையைக் கழட்டிக் கொடுத் தாங்க அம்மா. ‘உங்க பையன் என்ன பண்றான்?’னு யாரும் கேட்டா, ‘அவன் புத்திசாலி. சீக்கிரமே பெரிய ஆளா வருவான்’னு மட்டும் சொல்வாங்க.

அம்மாவுக் காகவாவது ஜெயிக்கணும்னு வெறி வரும். ஆனா, பாம்பே போய் இறங்கினதும் அதெல்லாம் மறந்துரும். ஏதாவது புதுசா டிரை பண்ணி அது ஃப்ளாப் ஆனதும் தான் திரும்ப அம்மா ஞாபகம் வரும். அந்த இலக்கற்ற பயணம்தான் எனக்கு அனுபவங்களையும் நல்ல நண்பர்களையும் கொடுத்தது.

ஒரு முறை என் குஜராத்தி நண்பர் ஒருவர் சில இயந்திரங்களை விற்க முயற்சி பண்ணார். இயந்திரங்களைப் பார்த்தவங்க எல்லாருமே, ஒரே ஒரு குறிப்பிட்ட மெஷினை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு, எல்லா மெஷினுக்கும் 85 ஆயிரம் ரூபாய் வரை விலைக்குக் கேட்டாங்க. ஏதோ யோசிச்சவர், ‘விற்க விருப்பம் இல்லை’னு சொல்லிட்டார். நானே வெறுத்துப் போயி, ‘வந்த விலைக்குத் தள்ளிவிட வேண்டியதுதானே’ன்னு கேட்டேன்.

“அந்த ஒரு மெஷின் எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, அந்த ஒரு மெஷினுக்காக மத்த எல்லா மெஷினுக்கும் நல்ல விலைகொடுக்க யாருக்கும் மனசில்லை’ன்னு சொன்னவர், அந்த ஒரு மெஷினை மட்டும் வேற ஒரு அறையில் வெச்சார். அடுத்ததா வந்த ஒருத்தர், மத்த மெஷின்களைப் பார்த்துட்டு 90 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிட்டார். பிறகு, அந்த மெஷினைக் கொண்டுவந்தார். இன்னொருத்தர் அதை 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கிட்டார். தனித்தனியா வித்ததுல 30 ஆயிரம் ரூபாய் லாபம்.

‘எதையும் மாத்தி யோசி. அப்பதான் ஜெயிக்க முடியும்’னு சொன்னார். பளார்னு கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருந்தது அந்த அட்வைஸ். அடுத்து, சேனலுக்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.

கமல் தங்கச்சி நளினியைப் பேட்டி எடுத்துட்டு இருந்தாங்க. பேட்டி எடுத்தவர் ரொம்ப சாதாரணமான கேள்விகளா கேட்டுட்டு இருந்தார். என்னால சும்மா இருக்க முடியாம… நான் படிச்ச, கேள்விப்பட்ட விஷயங்களைக் கேள்வியா மாத்தினேன். நளினி உற்சாகமா பதில் சொன்னாங்க.

நிகழ்ச்சி முடிஞ்சதும் என்கிட்ட வந்த தயாரிப்பாளர், ‘ஷோ நடக்கும்போது டைரக்டரை ஓவர்லுக் பண்ணக் கூடாது. ஆனா, உன் கேள்விகள் நல்லா இருந்தது. இனிமே, நீதான் இந்த ஷோவுக்கு டைரக்டர்’னு சொல்லி, அட்வான்ஸ் கொடுத்தார். வாழ்க்கையோட முதல் வெற்றி.

தயங்கி நின்னா ஜெயிக்க முடியாது’ங்கிற உண்மை புரிஞ்சது.
உடனே சென்னைக்குக் கிளம்பி வந்தேன்.

‘பிசினஸ் மகாராஜாக்கள்’னு ஒரு புத்தகம் படிச்சேன். அதை அப்படியே ஒரு நிகழ்ச்சி ஆக்கலாமேன்னு தோணுச்சு. கடன் வாங்கி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பத்தி ஆராய்ந்து ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டேன்.

அதுக்கப்புறம் ‘பேங்க் ஆஃப் பரோடா’வில் லோன் கேட்டு, அதன் ஜி.எம்மைச் சந்திச்சேன். ‘இந்த புராஜெக்ட் நல்லா இருக்கு. எப்போ எடுப்பீங்க?’ன்னு அவர் கேட்டார். ‘எடுக்க ஆரம்பிச்சுட்டேன்’னு சொன்னேன். அந்த ஒரு வரி பதில் அவருக்குப் பிடிச்சிருந்தது. உடனே, லோன் சாங்க்ஷன் பண்ணிட்டார். ‘சொல்லிட்டு இருக்கிறதை விட செய்ய ஆரம்பிச்சிரணும்’னு புரிஞ்சுக்கிட்டேன்.

அப்புறம், விஜய் டி.வி-யில் ‘கதையல்ல நிஜம்’ டீமில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் ‘கேள்விகள் ஆயிரம்’. லைவ் புரொகிராமில் இயக்குநர் பளீர்னு கேள்விகள் கேட்கலை. என்னைவிட சீனியர்கள் தயங்கி நிற்க, நான் கேள்விகள் கேட்டேன். இந்த முறையும் டைரக்ஷன் போஸ்ட் தேடி வந்தது. ‘இனிமே நான் சேனலில் தவிர்க்க முடியாத ஆளா இருக்கணும்’கிற வெறி மட்டும் இருந்தது.

காலையில் ஒரு நிகழ்ச்சி. சாயங்காலம் வேற நிகழ்ச்சி. ரெண்டு வருஷம் நிக்காம ஓடினேன்.

லோ-பிரஷரில் மயக்கம் வந்து விழுற அளவுக்கு உழைச்சேன்.
சென்னை வர்றதுக்கு இந்தியா முழுக்கச் சுத்தி யிருக்கேன்.

மனிதர்களையும், புத்தகங்களையும் படிச்ச அனுபவம் சென்னையில் அழகா கைகொடுத்தது. அனுப வங்களை முதலீடு ஆக்கினா அழகா ஜெயிச்சிரலாம்னு நம்பிக்கை வந்தது. மனைவியோட நகைகளை அடகு வெச்சு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சேன்.

‘சங்கமம்’,

‘நீயா… நானா?’,
‘நடந்தது என்ன?’,
இப்படிக்கு ரோஸ்’,
ரோஜாக்கூட்டம்’னு பல நிகழ்ச்சிகளை ஆரம்பிச்சேன். வழக்கமான ரூட்டைவிட்டுக் கொஞ்சம் மாத்தி யோசிச்சதால் எல்லாமே ஹிட்.

என்கிட்ட இப்போ 130 பேர் வேலை பார்க்குறாங்க

தமிழ் போக கன்னடத்திலும் நாலு ஷோ பண்றேன்.

கஷ்ட காலத்தில் எனக்குச் சோறு போட்ட நண்பர்கள் என்கூடவே இருக்காங்க. எல்லா கடனையும் அடைச்சாச்சு.

ஆனா, என் வெற்றியைப் பார்க்க என் அப்பா, அம்மா மட்டும் இல்லை. நல்ல நண்பர்கள் சுத்தி இருக்குற தைரியத்தில் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்கன்னு நினைக்குறேன்.

நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், நல்ல பயணங்கள். இதுதான் என் வாழ்க்கை.

நீங்க நல்ல விஷயங்களைத் தேடித் தேடிப் போகும்போது வெற்றி உங்களைத் தேடி வரும். எந்த விஷயத்துக்கும் பயப்படாதீங்க. ஏன்னா, எதுவும் தெரியாதவன்தான் தயங்குவான்… பயப்படுவான்!”

அந்தோணி செல்வராஜ்
ஆரைக்குளம்,
நெல்லை மாவட்டம்.

இயக்குனர், தயாரிப்பாளர்

விஜய் டிவி.

தண்ணீர் பஞ்சம் 2050 தொடர்ச்சி

தமிழகத்திற்கு உரிமையான நதிகளை மீட்டெடுக்க முடியாமல் அண்டை மாநிலத்தில் கையேந்தும் அரசை உருவாக்கி கொடுக்கும் தமிழக மக்களாகிய நாம்.

தமிழகத்தில் ஓடும் நதிகள் எல்லாம் அண்டை மாநிலத்தில் உருவாகி தமிழகத்தற்கு வருகிறது இதில் ஒரே ஒரு நதி மட்டும் தான் தமிழகத்தில உருவாகி கடலில் சேருகிறது அந்த தாமிரபரணி நதி மட்டுமே.
தமிழகத்தில் உள்ள நதிகளை பாதுகாக்காமல் நதிகளில் உள்ள மணலை குறி வைத்து கொள்ளையடிக்கும் அரசாங்கங்களை உருவாக்கி கொடுக்கும் மக்களாக நாம் இருந்து வருகின்றோம். அண்டை மாநிலங்களோடு சுமுகமான உறவு நிலை வைத்து கொள்ளாமல் தண்ணீர் தாவாக்களை தீர்க்க முடியாமல் தொடர்கதையாக நதி நீர் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நமக்கு உரிமையான நதிகள் நமது எல்லையில் உருவாகி அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்கிறது
தமிழக ஆட்சியாளர்கள் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதே கவலை கொள்ள வைக்கிறது.

“நதிகள் களவு போகின்றன” என்ற தலைப்பில் தினமலர் நிறுவனர் திரு.டி.வி.ஆர் அவர்களால் வெளியடப்பட்ட செய்திகள்
அண்டை மாநிலங்கள் தண்ணீர் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறையோடு இருந்தபோதும் தமிழகத்தில் மட்டும் ஒரு தீவிரமான கண்ணோட்டம் இல்லாமல் இருக்கிறார்கள். அண்டை மாநிலங்களை தண்ணீருக்கு நம்பி இருக்கவேண்டிய நிலையில் நாம் இருப்பதால் நமக்குள்ள நீர் நிர்வாகம் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் அத்தோடு நதிகளே இல்லாத பகுதிகள் விவசாயத்திற்கு முழுமையாக நம்பி இருக்கும் பாசன கண்மாய்கள் குளங்கள் பராமரிப்பு மிக அவசியமானது.

புனலூர் ஆறு கேரளத்தின் முக்கியமான நதிகளில் ஒன்று இந்த நதியில் தமிழகத்திற்கு எவ்விதமான பாத்தியதையும் கிடையாது என கேரள அரசு கூறுகிறது அது உண்மை இல்லை என்று கூறி மிகவும் முக்கியமான ஒரு வரைபடத்தை கண்டுபிடித்து 1961-ம் ஆண்டு ஜூன் 15ல் தினமலர் வெளியிட்டுள்ளது
இந்திய அரசாங்க சர்வே இலாகா 1914 -15 இல் வெளியிடப்பட்ட படம் அது இதை வெளியிட்டவர் கல் நெல்சர் எஸ்.ஜி .புற்றாடு என்பவர் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் சர்வேயர் ஜெனரலாக இருந்தவர் இவர்
இந்தப் புனலூர் ஆற்றின் கிளை நதிகள் செந்துவரணி ஆறு தீர்த்தக்கரை ஆறு குளத்துப்புழை ஆறு இதில் குளத்துப்புழை ஆறு தவிர மீதமுள்ள இரண்டு ஆறுகளும் தமிழ்நாட்டிலிருந்து உற்பத்தியாகிறது
தீர்த்தக்கரை ஆறு தென்காசி தாலுகாவில் பெரியணுருட்டி மலையில் இருந்து உற்பத்தியாகிறது.

சுவர்ண கிரி எஸ்டேட்டில் இருந்து உற்பத்தியாகும் இடத்தில் சொர்ண கிரி ஆறு வந்து கலக்கிறது
இதற்கு அடுத்து செந்தூர் ரணி ஆறு இது தென்காசி தாலுகா பரதேசி மொட்டை மலையிலிருந்து உற்பத்தியாகிறது இதில் நாரட்டாறு, அருவி ஆறு, உமி ஆறு ஆகிய 3உப நதிகள் வந்து சேர்கின்றன
குளத்துப்புழை ஆறு கேரளத்தில் உற்பத்தி ஆகிறது இதன் கிளை நதிகளான பொங்கு மலை ஆறு வெள்ளரி ஆறு சீனிக் கரை யாறு, சங்கிலிப்பாளையம் ஆறு ஆகிய நான்கு ஆறுகளும் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உற்பத்தியாகின்றன
நமக்கு உரிமையான இந்த ஆறுகளில் அனைகள் கட்டி தண்ணீரை தமிழகத்திற்குள் கொண்டு வந்து விட்டால தென்காசி தாலுகா, சங்கரன்கோவில் தாலுகா நெல்லை தாலுகாவில் ஒரு பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தின் மூலம் தற்போது 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

கேரளாவில் ஓடும் இந்த நதிகளால் மேலும் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் போது நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 90 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறவும் குடிநீர் தட்டுப் பாட்டையும் போக்க முடியும்
இந்த விபரம் குறித்து அப்போதைய தமிழக அரசின் முதன்மை பொறியாளரால் புணலூர் ஆற்று பகுதியை பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. தமிழக அரசின் முதன்மை பொறியாளர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தமிழக எல்லையில் இருந்து கேரள மாநிலத்திற்கு இந்த கிளைநதிகள் செல்கிறது இது உண்மைதான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
தமிழகத்திற்கு உரிமையான இந்த நதிகள் கேரள எல்லைக்குள் சென்று வீணாகவே இன்றும் கடலில் கலக்கின்றது.

நெல்லை மாவட்டத்தில் இருந்து 1961 க்கு பிறகு எத்தனையோ எம்.பிக்கள எம்.எல்.ஏ க்கள் மத்திய மாநில அமைச்சர்களாக இருந்து உள்ளார்கள். இன்றும் இருந்து வருகிறார்கள் இதில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்து உள்ளார்கள். எத்தனையோ மாநில அரசாங்கம் மாறி இருக்கிறது. ஆனால் உரிமைகளை மீட்க இன்னும் யாரும் பிறந்து வரவில்லை வரும் காலங்களில் உரிமையை மீட்க போராட கூடியவர்களை தேர்தல் மூலம் தேர்வுசெய்யக் கூடிய நிலையில் இருக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

இவன் : எஸ். எம் .ஏ. காந்திமதிநாதன்
மாவட்ட செயலாளர்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு
தூத்துக்குடி மாவட்டம்

புஷ்கரணி, புஷ்கரம் – இந்துத்துவாக்களின் பொய்யும் புரட்டும்

சமீபமாக திருநெல்வேலி குறித்து உறவினர்கள், நண்பர்கள் யாரிடமேனும் பேச்செடுத்தால், மறுவார்த்தையே “ஓ.. உங்க ஊரில் ‘தாமிரபணி மகா புஷ்கரணி’ ரொம்ப பேமஸாச்சே? ஊருக்குப் போறீங்களா புஷ்கரணிக்கு?” என்று தான் தொடர்கிறார்கள்.

அது என்ன புஷ்கரணி- புஷ்கரம் ?

இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரை, பிராணகிதா போன்ற ஆறுகளைப் புண்ணிய தீர்த்தங்கள் என புராணங்கள் வாயிலாகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நீராடி, மலர்த்தூவி, தீபாராதனை காட்டி, வழிபடுகிற சடங்கிற்கு புஷ்கரம் என்று பெயர் சூட்டி வழங்குகின்றார்கள்.

ஆறுகளை வழிபடுவது இந்த நிலத்தின் தொன்மம். ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் தாமிரபரணி’ என்பது வழக்கு. திருநெல்வேலியின் பூர்வாங்கம் தாமிரபரணியின் படித்துறைகளில் பொதிந்து கிடக்கிறது. ஆறும் ஊறும் கலந்துகிடக்கிற மக்களை இன்றும் நீங்கள் அங்குசென்றால் கண்ணாரக் கண்டடைய முடியும். மேல் தட்டு கீழ்தட்டு என்ற பாகுபாடுகள் எதையும் தனக்குள் கொள்ளாமல் அநேக மக்களின் அன்றாடப் பாடுகளுக்குள் கலந்துகிடக்கிற நதி அது.

அப்பேர்பட்ட தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்படும் 144 ஆண்டுகளுக்கு முந்தைய, விருச்சிகத்தில் இருந்து கடகத்திற்கு இடம்பெயரும் நாட்களில் நடைபெறும் ‘தாமிரபரணி புஷ்கரம்’ எனும் இந்து மதக் கட்டுக் கதைகள் உண்மையானதா?

தாமிரபரணியில் இந்தப் புஷ்கர நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்னின்று உழைப்பவர்கள் காஞ்சி காமகோடி பீடத்து நிர்வாகிகள். இவர்கள்தான் “இந்த 144 ஆண்டுக்குப் பிறகு” என்ற போலி வரலாற்றைத் தாமிரபரணி ஆற்றின் மீது கட்டமைப்பவர்கள். கிமு. ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்குகிற மடம் தங்களுடையது என்று காஞ்சி மடத்தின் தோற்றக்கதையிலே அடித்து விடுகிற இவர்களுக்கு இந்தக் காலகட்டப் பிரச்சனை ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இது 2018ம் ஆண்டு. இவர்களின் கணைக்குப்படி, 144 ஆண்டுகளுக்கு முன் புஷ்கரம் நடைபெற்றது என்றால் 1874ம் ஆண்டில் அப்படி ஓர் நிகழ்வு நடைபெற்றிருக்க வேண்டும். சற்றும் முன் அல்லது பின்னாக 1870 முதல் 1875 வரையிலான திருநெல்வேலி வரலாற்றைச் சரியாக அமர்ந்து வாசித்தால் இவர்களது முழுப் புரட்டும் பொய்யும் அம்பலம் ஏறிவிடும்.

1870ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை திருநெல்வேலி ஜில்லாவில் ஆக்டிங் கலெக்டராக இருந்தவர் ஜே.ஆர்.அற்புத நாத். அவரையடுத்து மாவட்ட கலெக்ட்டராகப் பொறுப்பேற்ற ஆர்.கே.பக்கிள் 16 நவம்பர் 1870 முதல் 27 பிப்ரவரி 1874 வரை திருநெல்வேலி மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தவர். பின், நிர்வாக காரணங்களுக்காக அதே ஆண்டில் மட்டும் டபிள்யு.ஏ.ஹெப்பள், டபிள்யு.எச்.காமின் இருவரும் ஆக்டிங் கலெக்டராக மாற்றி மாற்றிப் பொறுப்பேற்றனர்.

1875 அக்டோபரில் 5ம் தேதியில் ஒருநாள் கலெக்டராக இருந்த ஹெப்பள்-க்குப் பிறகு, ஜே.பி.பென்னிங்டன் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரின் நேரடிப் அதிகாரத்திற்கு வருவதற்காக அடுத்த 13 நாட்களும் திருநெல்வேலி கலெக்டர் இல்லாத மாவட்டமாகவே இயங்கியது. 18 அக்டோபர் 1875ல் ஏ.ஜே.ஸ்டூவர்ட் மீண்டும் ஆக்டிங் கலெக்டராக வந்தபோதும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு சீரான நிலைக்குத் திரும்பவில்லை.

மேற்சொன்ன மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எவருடைய குறிப்புகளிலும் தாமிரபரணி ஆற்றில் இப்படி ஒரு விழா நடைபெற்றதற்கான அறிவிப்புகளோ அல்லது அனுமதி வழங்கின குறிப்புகளோ கிடையாது. மாறாக, 1869, 1874, 1877 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே மூன்று தடவை தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைந்தன.

1869-74ம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலியின் ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர் தென்பகுதிகள் அளவிட முடியாத பாதிப்புகளைச் சந்தித்தன. 77ல் கொற்கை, கோரம்பள்ளம் நீர்த்தேக்கங்கள் உடைந்து விழுந்தன. 1868 முதல் 74 வரையிலான ஆண்டுகளைத் தாமிரபரணியின் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்திய ஆண்டுகள் என்றே வருணிக்கிறது கெஸட்ஸ் ஆஃப் திருநெல்வேலி வால்யூம் ஒன்று.

அதில் 1874ம் ஆண்டின் வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பு ஒன்று, “நவம்பர் 24ம் நாள் பாளையங்கோட்டை திரும்பவும் ஒரு பெரு வெள்ளத்துக்குத் தயாராகிவிட்டது. 1869ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இது மூன்று அடி தான் குறைவு. திருநெல்வேலி கிருஷ்ணப்பேரி தேக்கங்கள் நிறைந்துவிட்டன. நயினார்குளம் நிரம்பி வழிந்து பயமுறுத்துகிறது. நெல்லையும் பாளையங்கோட்டையும் ஒன்றிலிருந்து ஒன்று முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இடைப்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகளும், மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.” என்று தெரிவிக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தான் தாமிரபரணி மகா புஷ்கரம் நடைபெற்றதாகக் காஞ்சி காமகோடி பீடம் தன் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறது.

சரி மாவட்ட கெசட் தான் பொய் சொல்லுகிறது என்றால், அதே காலகட்டத்தில் காஞ்சி பீடத்தில் ஆறாவது மடாதிபதியாகப் பொறுப்புக்கு வந்த சுதர்சன மகா தேவேந்திர சரசுவதி (1851லிருந்து 1891)யாவது உண்மையைச் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர், கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்த காரணத்தால் மடத்தின் கணக்குகளைக் கண்காணித்து வந்த அவரது சித்தப்பா கணபதி சாஸ்திரியால், தஞ்சை மன்னரின் உதவியோடு சிறை வைக்கப்பட்டது துவங்கி சிறையில் உண்ணாநோன்பிருந்தது வரைக்கும் அவரது அத்தனை எழுதி வைக்கப் பட்டிருக்கிறது. காஞ்சி பீடத்தினரால், தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெற்றதாக எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. ஏன்? உண்மையில் அப்படியோர் நிகழ்வு நடந்திருந்தால் தானே?

விவரங்கள் இப்படி இருக்க இவர்கள் எப்படி 144 ஆண்டுகள் முந்தைய புனித அடையாளத்தைத் தாமிரபரணி மீது ஏன் புகுத்த முயல்கிறார்கள்? இங்கே தான் மதவாத விஷ்வ இந்து பரிஷத் உட்பட்ட காவி அடையாளங்களின் கரங்கள் வேலை செய்யத் துவங்குகின்றன. இவர்கள் முதலில் பொய்யை உண்மையென அறிவிப்பார்கள். அனைத்து பிராமணிய ஊடகங்களும் அவர்களுக்கு உறுதுணையாக மேற்படி பொய்யை உண்மை உண்மை என்று அறைகூவும். பிறகு மக்கள் வாய்மொழியில் இது நிஜம் தான் போல என்ற நம்பிக்கை உருவாகத் துவங்கும்.

இந்த மகா புஷ்கர நிகழ்விற்காக நதியின் கரைகளையும், துறைகளையும் கோயில் சாலைகளையும் புனரமைக்க மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படும் என்றாலும் இவர்களது கைங்கரியத்தால் தங்களது மத அடையாளங்களை மக்களின் தொன்மங்களுக்குள் விசமமாகப் புகுத்தத் துவங்குவார்கள். எளிய மக்களின் அடையாளமாக விளங்கும் நாட்டார் தெய்வங்களை, ஆற்றங்கரைப் பள்ளிவாசல்களை, தேவாலயங்களை, எளிய மக்களின் இயற்கை வழிபாடுகளை அடையாளமிழக்கச் செய்து, அவற்றுக்கு காவிநிறம் பூசுவார்கள். எங்கள் அய்யனார் கோயில்களில் பின்னே நவக்கிரகங்கள் புகுந்ததெப்படி?

தாமிரபரணி ஆற்றங்கரை உலகின் தொன்மையான நாகரிக வெளி. ஆதிச்சநல்லூர் அதன் கண்டெடுக்கப்பட்ட எச்சம். அங்கே காவி மத அடையாளத்தின் பெயரால் தங்கள் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் பிராமணியச் சிந்தனையின் யுக்தியை, அதன் முன்பின்னுள்ள சக்திகள் எளிய மக்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியோடு பொருத்தி விளையாட்டுக் காண்பிக்கின்றன.

நம் மக்களிடம் இதுகுறித்து எதிர்க்கருத்தைச் சொன்னால், “என்னம்ன்னாலும் நம்மூருக்கு நல்லதுதான்ல செய்தான்” என்பார்கள். அவர்களிடம் விளங்கச் சொல்லிப் புரியவைப்பதில் சங்கடம்தான் எஞ்சும். ஊரின், நகரத்தின், தேசத்தின் முக்கியமான அடையாளங்கள் மீது கல்லெறிந்து, அந்த சலசலப்பிலே தங்களை வளர்க்கத் துடிக்கும் புத்திசீவிகள் காவிகள். கங்கை முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் அதைத்தான் செய்தார்கள் செய்வார்கள்.

தாமிரபரணி ஆறும், திருநெல்வேலி ஊரும் நம்முடையது. எனில், இந்தப் பொய்யும் புரட்டு செய்து கொண்டாடும் விழா யாருக்கானது.

தாமிரபரணி புஷ்கரம் எனும் வைதீக அரசியல்.

கிபி 1426 ல் எழுதப்பட்ட ஒரு நூல் ஜாதக பாரி ஜாதா. இந்த நூலில் உள்ள ஒரு கதையில் வரும் ஒரு பார்ப்பனர் பெயர் தான் புஷ்கரா.அந்த பார்ப்பனர் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாராம். சிவன் அவருக்கு ஒரு வரம் கொடுத்தாராம்.

அந்த வரத்தின்படி அவரால் தண்ணீரில் வாழவும் நீரை புனிதமாக்கவும் முடியுமாம். அந்த பார்ப்பனர் ஒவ்வொரு ஆற்றிற்கும் ஒரு ராசியை தீர்மானித்தாராம். அதன்படி 12 ஆறுகளில் 12 ராசிப்படி இருப்பாராம்.

அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் குரு இடம் பெயரும் போது அந்த ஆற்றில் அந்த பார்ப்பனர் இருப்பதாக ஐதீகம். அவர் இருப்பதாக நம்பப்படும் 12 ஆறுகள்-ராசிகள் பட்டியல் இதுதான்.

  1. கங்கை-மேஷம்
  2. நர்மதை-ரிஷபம்
  3. சரஸ்வதி-மிதுனம்
  4. யமுனை-கடகம்
  5. கோதாவரி-சிம்மம்
  6. கிருஷ்ணா-கன்னி
  7. காவிரி-துலாம்
  8. பீமா-விருச்சிகம்
  9. பிரம்மபுத்திரா-தனுஸ்
  10. துங்கபத்ரா-மகரம்
  11. சிந்து-கும்பம்
  12. பிராணஹிதா-மீனம்.

இப்போது கேள்வி இதுதான்.

  1. புஷ்கர் ஐயர் இல்லாத ஆறான தாமிரபரணியில் புஷ்கரா நடத்துவது ஏன்?
  2. அவர் தாமிரபரணியில் இருக்கிறார் என்றால் விருச்சிக ராசிப்படி அவர் பீமா ஆற்றில் தானே இருக்க வேண்டும்?
  3. பீமா ஆற்றில் இருந்தால் ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு ஆறுகளில் எப்படி இருக்க முடியும்?
  4. தண்ணீர் ஓடும் ஆறுகளில் மட்டும் தான் இருப்பாரா? தண்ணீர் இல்லாத வைகை உள்ளிட்ட ஆறுகளில் புஷ்கர் இருப்பாரா?
  5. மனிதர்களுக்கும்-பறவைகளுக்கும்-விலங்கினங்களுக்கும் பொதுவாக இயற்கை உருவாக்கிய நதியை புஷ்கர் மட்டும் உரிமை கொண்டாடுவது நியாயமா?
  6. நம்பிக்கை என்ற பெயரில் நதியை மாசுபடுத்துவது ஏன்?
  7. இத்தனை ஆண்டுகளாக தாமிரபரணிக்கு வராத புஷ்கர் ஐயர் திடீரென வந்தது எப்படி?

அனைத்திற்கும் ஒரே விடை தான்.
ஆண்டாண்டு காலமாக கொலைகளைச் செய்து கொண்டு, கொல்லாமை பேசுவதே வைதீக அரசியல். அந்த அரசியலை நிலைநிறுத்த தமிழகச் சூழலைத் தயார்படுத்தும் அடுத்த கட்ட நகர்வே தாமிரபரணி புஷ்கரம்.

உச்ச நீதிமன்றத்தில் கங்கை மாசு குறித்து அரசு கொடுத்த அறிக்கை இது. கங்கையில் ஒரு லிட்டர் நீரில் உயிரியில் கழிவுகளின் அளவு 7.4 மில்லி கிராம். அனுமதிக்கப்பட்ட அளவு எவ்வளவு தெரியுமா?

2 மில்லி கிராம்.

மணல் எனும் மேலாடையை ஏற்கனவே இழந்து நிற்கும் தாமிரபரணி மீது,
ஆலைக் கழிவுகள்,செங்கல் சூளை ஆக்கிரமிப்புகளால் அலறி நிற்கும் தாமிரபரணி மீது அடுத்த தாக்குதல் புஷ்கர் விழாவா?

இது தாமிரபரணி நதி மீதான தாக்குதல் மட்டுமல்ல தாமிரபரணி வளர்த்த புதல்வர்கள் அனைவரின் மீதான தாக்குதலே.

தாமிரபரணியர்களின் தாகம் தீருமா?

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் – தமிழ்வாணன்

வீரபாண்டியக்(?) கட்டபொம்மனுக்கும் வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ நூலில் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே .

திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். வீரபாண்டியக் கட்டபொம்மனோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக்கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் (பேட்டி) தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.

ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்மன் குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பரிவாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்மன் தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பிவிடுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார் அங்கும் கட்டபெம்மனை பார்க்க ஜாக்சன் மறுத்துவிடுகிறான். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்மனும் ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்டபொம்மனை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.

இறுதியில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம் கொடுத்தான், வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டுவந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்மன் மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்கவேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்மன் அஞ்சி அங்கிருந்து தப்பிவிடுகிறார். அவன் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளையன் கொலை செய்யபடுகிறான். கட்டபொம்மனின் அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளை கைது செய்யப்படுகிறார்.

இந்த நிகழ்வு கட்டபொம்மனை வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார் தமிழ்வாணன்.

அப்படி என்றால் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் அதாவது கட்டபொம்மனைத் தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.

கட்டபொம்மனை பற்றிக் கூற ஆரம்பித்ததில் இருந்தே கட்டபொம்மன் தன்னுடைய பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது கொள்ளையடித்து வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார் தங்கள் பாளையத்தில் கட்டபொம்மன் கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார். அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்மன் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற் களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்மனை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க அஞ்சு நாட்களைக் கடத்துகிறார். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். (இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்மன் தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே தப்பினான் என்கிறார்).

கட்டபொம்மனைப் பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்திடம் இருந்து நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்மன் புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்மனைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் காட்டி தூக்கில் போடுகிறார்கள்.

இந்நூல் மூலம் நமக்கு தெரியவருவதுயாதெனில்,

வெள்ளைக்காரனுக்கு அவ்வப்போது பணிந்து சென்ற ஒருவரை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று பொய்ப் பரப்புரை செய்து கட்டப்பட்ட பிம்பமே கட்டபொம்மு.

எட்டப்பன் என்ற ஒருவனைத் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்ற ஒருவனைக் காட்டியுள்ளது. இது பொய்.

ஆக, கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் வரலாற்றுப் பிழையாகவே இருக்கும் என்று கருதுகிறேன். அதில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி (வரி)” போன்ற நீண்ட வசனத்தைப் பேசியிருக்க மாட்டான்.

தமிழர்கள் அவசியம் தமிழ்வாணன் எழுதிய கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற நூலை வாங்கிப் படித்து தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்துக் கொள்ளுங்கள்.