அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் 6 சோழர்காலக் கோயில்கள்…!

சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாகம் ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை மட்டுமல்லாது பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் ஜேதவனாராம, அபயகிரி ஆகிய விகாரை வளாகங்களில் காணக் கிடைத்தது.

பேராசிரியர் சிற்றம்பலம் இவற்றில் சிலவற்றைப் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைக் கண்டவுடன் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க அடுத்தடுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன். இக்கால கட்டத்தில் 130 வருடங்களுக்கு முன்பு எச்.சி.பி.பெல் எனும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் எழுதியிருந்த ஆய்வுக் குறிப்புகளைத் தேடி இலங்கைத் தொல்பொருள் திணைக் களத்திற்கு சென்று அவை பற்றிய விபரங்களையும் குறிப்பெடுத்தேன். அதில் அனுராதபுரத்தின் வடக்கில் இருந்த ஆறு கோயில்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது குறிப்பின் படி இந்த ஆறு கோயில்களும் ஒரே இடத்தில் உள்ளன. இவற்றை பெல் அவர்கள் தமிழர் இடிபாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மூன்றாவது தடவையாக அனுராதபுரத்திற்கு சென்றேன். அனுராதபுரம் பெளத்த யாத்திரீகர்களாலும், சுற்றுலாப் பயணிகளாலும் எப்பொழுதும் நிரம்பி வழியும் ஓர் சுற்றுலாத்தலம். அன்றும் அப்படித்தான். கூட்டம் களை கட்டியது. இந்தத்தடவை பெல் அவர்கள் குறிப்பிட்டிருந்த கோயில்களைத் தேடி அபயகிரி விகாரையின் வடக்குப் பக்கம் உள்ள பங்குளிய, பெருமியன் குளம், அசோகாராம, விஜேராம ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் பெல் குறிப்பிட்ட கோயில்களைக் காண முடியவில்லை.

அப்போதுதான் இவ்விடங்களுக்கு நடுவில் இருந்த ஓர் காட்டுப்பகுதி என் கவனத்தை ஈர்த்தது. அக்காட்டுக்குள் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஏற்பட்டது. அப்பகுதியில் தற்செயலாக சந்தித்த இரு சிங்கள தம்பிமாரின் உதவியுடன் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தேன். சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்லாத இடம். பட்டப் பகலில் கூட ஆள் நடமாட்டம் இல்லாத இடம். பறவைகளும், காட்டு வண்டுகளும் கத்தும் ஓசை மட்டுமே காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சமே படாமல் சற்று இருட்டாக அக்காட்டுப்பகுதி காணப்பட்டது.

காட்டுக்குள் சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது காலில் ஏதோ தடுக்கி விழப் பார்த்தேன். என் காலில் தடுக்கியது என்னவென்று பார்த்தபோது தான் தெரிந்தது, அது சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஓர் நாகக்கல். முக்கால்வாசி மண்ணுள் புதையுண்டு அக்கல் காணப்பட்டது. ஆர்வம் மேலிட அப்பகுதியில் இருந்த பற்றைகளையும், காய்ந்த சருகுகளையும் விலக்கிப் பார்த்த போது ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தேன்.

அவ்விடத்திலே காட்டுப் பற்றைகளுள் மறைந்தும், மண்ணுள் புதையுண்டும் ஏராளமான கோயில்களின் இடிபாடுகளும், பரந்த அளவில் நூற்றுக்காணக்கான கற்தூண்களின் துண்டங்களும், செங்கல் அத்திவாரங்களும், கட்டிடங்களின் சிதைவுகளும், ஓர் தீர்த்தக் கேணியின் இடிபாடுகளும், தீர்த்தக் கேணியின் படிக்கட்டுகளும் காணப்பட்டன. அதுதான் எச்.சி.பி.பெல் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கோயில்களின் வளாகம் என்பதைப் புரிந்து கொண்டேன் என்கிறார்.

ஆனால் கோவில் இருந்த அனேக இடங்களில் இன்று இருப்பது பெளத்த பிக்குகள் கட்டி பெளத்த கோவில்கள் தான். அனுராதபுரம் இன்று முற்று முழுதாக சிங்கள மயமாக்கப்பட்டு விட்டது. ஆனால் அங்கே பூர்வீகக் குடிகளாக இருந்தது தமிழர்கள் மட்டும் தான். இவ்வாறு தான் எமது தமிழ் இனம் அருகி வருகிறது இலங்கையில். இலங்கை தமிழர்களை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு இனமாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் 100 வருடங்களில் நாம் காணமல் போய் விடுவோம். அது நிச்சயம்.

இராசேந்திர சோழன்

இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது.

முதலாம் இராஜேந்திர சோழன்

ஆட்சிக்காலம்
கி.பி. 1012 – கி.பி. 1044

தலைநகரம்
தஞ்சாவூர்,
கங்கைகொண்ட சோழபுரம்

இறப்பு
கி.பி. 1044

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.

சோழப் படைத்தலைவன் இராஜேந்திரன்

இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மாதண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். ‘பஞ்சவன் மாராயன்’ என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. ‘மும்முடிச் சோழனின் களிறு’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிரரையும் வென்றான்.

இணை அரசனாக நிர்வகித்தல்

இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன், இராஜராஜ சோழனின் படைகளுக்குப் பொறுப்பேற்று வெற்றியைத் தேடித் தந்தான்.

முடி சூடுதலும் தொடக்ககால ஆட்சியும்

இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

நாட்டின் பரப்பும் அமைப்பும்

தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும்(இலங்கை) உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராஜராஜன், இராஜேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம்(இலங்கை), மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராஜேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான்.

இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி தான் ஆட்சி செய்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் இராஜேந்திரன் தன் நாட்டை தமிழ் அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராஜேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும், கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராஜேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராஜேந்திரனுடைய இராணுவச் சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன.

படையெடுப்பு

தொடக்க காலம்

சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாகக் கி.பி. 1012 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.

ஈழத்தின்(இலங்கை) மீதான படையெடுப்பு

முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான “மஹா வம்சமும்” கூறுகிறது.

பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு

ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018இல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களைக் கவர்ந்தான் என்றும், தொடர்ச்சியாகக் கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களைப் படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.

இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்தச் சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட இல்லை.

சாளுக்கியர் படையெடுப்பு

இராஜேந்திரன் கி.பி. 1021 இல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்குக் கி.பி. 1015இல் ஐந்தாம் விக்ரமாதித்தனுக்கு பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய இரண்டாம் ஜெயசிம்மன் பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் காலத்தில் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மன் இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும், தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் ஏழாம் விஜயாதித்தனை (VII) ஆதரித்துக் குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதிச் சண்டையில் இராஜேந்திரன், இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் – இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.

இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன், இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரை ஆற்றின் கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022இல் மணம்முடித்துச் சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி. 1031இல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனைக் கீழைச் சாளுக்கிய மன்னனாக்கினான் இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்துக் கி.பி.1035இல் விஜயாதித்தனையும், அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரேந்திரனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.

கங்கையை நோக்கிய படையெடுப்பு

மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனைக் கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019இல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்துப் புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளைச் சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புக்கள்
கடாரம் படையெடுப்பு
இராஜராஜனின் ஆட்சியின் 14ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.

“அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் “போர் வாயில்” அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன், பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது.

பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன்(லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருந்தது. ” வலைப்பந்தூரு” என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடையோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும், அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றும் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்”

கி.பி. 1025இல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை (இந்தோனேசியாவை) நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயோத்துங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்காலச் சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும், இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன்தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக் கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும், சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தைச் சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்தப் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாகச் சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்ட கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் நியமிக்கப்பட்டான் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

பண்ணை

இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இலாமுரி தேசம்

இலாமுரி தேசம் என்பது, சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும். இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவாரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.

இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள்

கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர். ஆனால் இராஜேந்திரனின் மக்களின் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன. இவற்றின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் இவர்கள் போரிட வேண்டியிருந்தது எனத் தெரியவருகிறது. தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே திக் விஜயம் செய்த இராஜேந்திரன், இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் தானே கலந்து கொள்ளாமல், தன் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததான். இதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றுப் புகழடையச் செய்தான்.

எனினும் இராஜாதிராஜனின் கல்வெட்டுகள் அனைத்தும் இராஜேந்திரனின் ஆட்சிக் காலத்திற்குட்பட்டனவாக உள்ளதால், இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களும் முக்கியமாகின்றன.

தெற்கில் குழப்பம்
பாண்டிய, கேரள நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது. எனவே இராஜாதிராஜன் ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. ஆனால் பாண்டிய, கேரள நாடுகளின் மீதான படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை. இக்காலத்திய பாண்டியர் கல்வெட்டுக்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெற்றிகொண்ட சோழர்களின் கல்வெட்டுகள் மூலமே இதனை நாம் அறிகிறோம். நடுநிலைச் சான்றுகள் கிடைக்கவில்லை, எண்ணற்ற சோழ பாண்டிய கல்வெட்டுகளும் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சுந்தரபாண்டியனே இக்கலகத்தை நடத்திய இயக்கத்தின் தலைவனாயிருக்கவேண்டும்.

‘திங்களேர்’ என்று தொடங்கும் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியின் ஒரு கூற்று, மூன்று பாண்டியர்களுடன் இம்மன்னன் செய்த போரை விவரிக்கும் பொழுது, தன் தந்தையை எதிர்த்த(‘தாதை முன்வந்த’)விக்கிரம நாராயணனுடன் போரிட்டு அவனை வென்றதாகக் கூறுகிறது. பத்துநாள் நடைபெற்ற போரின் முடிவில் இராஜாதிராஜன் பூபேந்திரச் சோழன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டான். விக்கிரம நாராயணன் ஒரு தென்னாட்டு மன்னனாகவே இருத்தல் வேண்டும். ஆனால், இந்த மெய்க்கீர்த்தியிலேயே பின்பகுதியில் கூறப்படும் சாளுக்கியருடனான இரண்டாம் போரில், இவனே சக்கரவர்த்தி விக்கிரம நாராயணன் என்று குறிப்பிடப்படுவதால், இவன், சாளுக்கிய படைத்தலைவனாகயிருக்க வேண்டும்.

பாண்டிய நாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து இராஜாதிராஜன் காந்தளூருக்குச் செல்லும் வழியில் வேணாடு மன்னனை ‘விண்ணுலகத்திற்கு அனுப்பினான்’. பின்னர் தென் திருவாங்கூரைச் சேர்ந்த கூபகர்களின் தலைவனைப் பலம் இழக்கச் செய்தான் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சோழப்பேரரசின் கருணை
சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது.

இராஜேந்திரனின் கடைசி ஆண்டுகள்

இராஜேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகள், விஜயாலய சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழநாடு மிகப் பரந்து விரிந்தது; சோழருடைய பெரும் படையின் வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன. புதிதாய்ச் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆங்காங்கு ஏற்பட்ட குழப்பங்களை அடக்க வேண்டியிருந்தது. திறமை படைத்த புதல்வர்கள் அப்பணியைச் செவ்வனே செய்தனர்.

சுந்தர பாண்டியனையும், அவனுடைய நண்பர்களையும் பாண்டியரோடு நடைபெற்ற போரில் தோற்கடித்தும் ஆகவமல்லனுக்கு எதிராக சாளுக்கியப் போரில் ஈடுபட்டும் சோழர்கள் தொடர்ச்சியாக அப்பகுதிகளைக் கைவசப்படுத்தியிருந்தார்கள். இவ்விரு போர்களிலும் பட்டத்து இளவரசனான இராஜாதிராஜன் தலைமை ஏற்றான். மைசூரிலும் நம்பிஹல்லி என்ற பகுதியிலும் சோரியருடன் ஏற்பட்ட சிறு பூசல்களைச் சமாளிக்கக் குறுநில மன்னர்கள் பலர் சோழருக்கு உதவினர்.

இராஜேந்திர சோழனின் மரணம்

ராஜேந்திர சோழன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலிருந்து 30 கி.மீ தெலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில் இறந்தார் இதற்கு சான்றாக பிரம்ம தேசத்திலுள்ள சந்திர மெளலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன [4] இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட பல்லவர் கால கோவிலில் அமைந்துள்ளது.

விருதுகள்
இராஜராஜ சோழனைப் போன்றே இராஜேந்திரனும் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான்.

இவற்றையெல்லாம் விட, இம்மன்னனே விரும்பிச் சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, ‘கங்கை கொண்ட சோழன்’ என்பதாகும். இவ்விருது இம்மன்னன் புதிதாக நிறுவிய தலைநகரின் பெயரைக் கொண்டது.

பட்டத்தரசிகள்
திருப்புவன அல்லது வானவன் மாதேவியார், முக்கோலான்,வீரமாதேவி என்போர் இராஜேந்திரனின் மனைவியர் ஆவர். வீரமாதேவி என்பாள், இம்மன்னனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். இவன் புதல்வர்களில் மூவர் இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன் ஆகியோர் இவனுக்கு அடுத்தடுத்துச் சோழ அரியணையில் அமர்ந்தனர். இம்மூவரில் யார் சோழபாண்டிய பிரதிநிதியான ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று கூற இயலாது. இம்மூவரைத் தவிர வேறு புதல்வர்களும் இருந்தனர். இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் என்ற பிரானார், தன் சகோதரன் இராஜாதிராஜனின் ஆட்சியின் தொடக்கத்தில் திருமழவாடிக் கோயிலுக்கு விலையுயர்ந்த முத்துக்குடை அன்பளிப்பாக அளித்தாள். இம்மன்னனின் மற்றொரு மகள், புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், குலோத்துங்கனின் தாயும் ஆவாள். இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் காணப்படும் இவனுடைய ஆட்சி ஆண்டுகளில் 33-ஆம் ஆண்டே கடைசியானது. இராஜாதிராஜனின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, இராஜேந்திரன் இறந்ததைக் கூறுகிறது. ஆகையால் இராஜேந்திரன் கி.பி 1044இல் காலமாயிருக்க வேண்டும்.

மெய்க்கீர்த்தி

இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி “திருமன்னி வளர இருநில மடந்தையும்/ போர்ச்செயப் பாவையும் சீ்ர்த்தனிச் செல்வியும்/ தன்பெருந் தேவிய ராகி இன்புற” எனத் தொடங்குகின்றது. இம்மெய்க்கீர்த்தி இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதன்முதலில் காணப்படுகின்றது என்று தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார்.

முழு மெய்க்கீர்த்தி

திருவன்னி வளர விருநில மடந்தையும்
போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்
தன்பெருந் தேவிய ராகி யின்புற
நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்
தொடர்வன வேலிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்
நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்
பொருகட லீழத் தரசர்த முடியும்
ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்
முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த (10)
சுந்தர முடியு மிந்திர னாரமும்
தொண்டிரை யீழ மண்டல முழுவதும்
எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்
குலதன மாகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்
தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
செருவிற் சினவி யிருபத் தொருகால்
அரசுகளை கட்ட பரசு ராமன்
மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20)
பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்
டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு
பீடிய லிரட்ட பாடி யேழரை
யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும்
விக்கிரம விரர் சக்கரக் கோட்டமு
முதிர்பட வல்லை மதுரை மண்டலமும்
காமிடை வளைஇய நாமணைக் கோணமும்
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசடைப் பழன மாசுணி தேசமும்
அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற் (30)
சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும்
பூசுரர் சேருநற் கோசல நாடும்
தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்
இரண சூரனை முரணறத் தாக்கித்
திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் (40)
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி
ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கட லுத்தர லாடமும்
வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்
அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்ம
னாகிய கடாரத் தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50)
துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்
புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்
வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்
ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா சோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60)
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்
கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65)
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான
உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு…”

கற்றளி

மாமன்னன் இராஜராஜசோழனின் தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவ்வம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராசேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது

-அமுதக்கனி

சோழர் ஆட்சியில் 15 படுக்கைகளுடன் இயங்கிய அதுலர் சாலை

ஆயிரம் வருடங்கள் தொன்மையான தமிழகக் கோயில் ஒன்றினுள்ளே மருத்துவமனை ஒன்று செயல்பட்டதைக் கல்வெட்டுச் செய்தியால் அறியமுடிகிறது. திருமுக்கூடல் கல்வெட்டில் அங்கு ‘வீரசோழன்’ என்னும் பெயரில் இயங்கிய மருத்துவமனை பற்றிய செய்தியின் சுருக்கம் கீழே:

கோயில் இருப்பிடம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் அருள்மிகு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோவில்.

ஆதுலர் சாலை அல்லது மருத்துவமனை பற்றி உள்ள கல்வெட்டுச் செய்தி:
கோயிலின் உள்ளே செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த மருத்துவமனை 15 படுக்கைகள் கொண்டிருந்தது.

மருத்துவர்:
ஆலம்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாமன் பட்டர் என்பவர் நாடி பார்த்து மருந்து கொடுப்பவராக இருந்துள்ளார். இவருக்கான ஊதியம் தினமும் 3 குறுணி நெல் 4 காசுகள்.

அறுவை சிகிச்சை செய்பவர்:
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் சல்லிய கிரியை பண்ணுவான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். இவருக்கான ஊதியம் தினம் 1 குறுணி நெல்லும் 2 காசுகளும்.

நீர் கொண்டு வருபவர்:
மருத்துவமனைக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒரு பணியாள் இருந்துள்ளார். இவருக்கான ஊதியம் ஆண்டுக்கு 15 கலம் நெல்.

மருத்துவப் பணி மகளிர்:
மருத்துவப் பணி மகளிராக இருவர் இருந்துள்ளனர். இவர்கள் மருந்து அடும் பெண்கள் என அழைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கான ஊதியம் தினம் 4 நாழி நெல்லும் அரைக் காசும்.

நாவிதன்:
மருத்துவக் குழுவில் நாவிதர் ஒருவர் இருந்துள்ளார். நாவிதர்கள் கத்தியைக் கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் சவரத் தொழிலையும், அறுவை தொழிலையும் செய்துள்ளனர். இவர் நரம்பு உடல் உறுப்புகள் பாதிக்கா வண்ணம் சிறு அறுவை சிகிச்சை செய்வதால் இவரும் மருத்துவர் என்று அழைக்கப்பட்டார். பிள்ளைப் பேற்றுத் துறையில் நாவிதர் மனைவிமார் ஈடுபட்டதால் இவர்கள் மருத்துவச்சி என அழைக்கப்பட்டனர். நாவிதர்க்கான ஊதியம் நாளொன்றுக்கு 4 நாழி நெல்.

நோயாளிகள்:
நோயாளிகளை வியாதிப்பட்டு கிடப்பார் என்று பெயர் கொண்டு அழைத்ததாகக் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகின்றது. இவர்களுக்கு ஒரு வேளைக்கு ஒரு நாழி அரிசி வழங்கப்பட்டது.

மருந்துகள்:
ஆதுலர் சாலையில் ஒரு ஆண்டுக்குத் தேவையான பலவகையான மருந்துகளிருந்தன, அவை;

  1. பிராமியம் கடும் பூரி – 1 எண்ணிக்கை
  2. வாசா ஹரீ தகி – 2 படி
  3. தச மூலா ஹரீ தகி – 1படி
  4. பல்லாதக ஹரீ தகி -1 படி
  5. கண்டீரம் – 1 படி
  6. பலா கேரண்ட தைலம் -1 தூணி
  7. லசு நாக ஏரண்ட தைலம் -1 தூணி
  8. பஞ்சக தைலம் -1 தூணி
  9. உத்தம கர்ணாதி தைலம் -1 தூணி
  10. பில்வாதி கிருதம் -1 பதக்கு
  11. மண்டூகர வடகம்-2000 எண்ணிக்கை
  12. திராவத்தி -1 நாழி
  13. விமலை – 2000 எண்ணிக்கை
  14. சுனேற்றி – 2000 எண்ணிக்கை
  15. தம் ராதி – 2000 எண்ணிக்கை
  16. வஜ்ர கல்பம் – 1 தூணி 1 பதக்கு
  17. கல்யாண லவணம் – 1 தூணி 1 பதக்கு. இந்த அனைத்து மருந்துகளையும் பத்திரப்படுத்திப் பாதுகாக்க 40 காசுகள் வழங்கப்பட்டுள்ளது என்று திருமுக்கூடல் கோயிலின் கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது.

பதிவு: அ அருள்வேந்தன் அ.

தகவல்-
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
அவர்கள்.

சிங்கப்பூரிலுள்ள சோழர் கால தமிழ் கல்வெட்டு

150 ஆண்டுகளுக்கு மேலாக படிக்க முடியாமல் மர்மமாக இருந்த ‘சிங்கப்பூர் ஸ்டோன்’ கல்வெட்டு சமீபத்திய ஆய்வில் சோழர் கால கல்வெட்டு என ஆஸ்திரேலிய ஆய்வாளர் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரின் சிங்கப்பூரா நதிக்கரையின் முகத்துவாரத்தில் பாறைகளை உடைத்தபோது கண்டெடுக்கப்பட்ட துண்டு கல்வெட்டு ஒன்று யாராலும் தெளிவாக படிக்க முடியாமல் மர்மமாக இருந்தது. இந்த கல்வெட்டு “சிங்கப்பூர் ஸ்டோன்” என்று அழைக்கப்பட்டு சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் முதல் பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் இக்கல்வெட்டை ஆராய்ந்து பலவாறு கருதுகோளிட்டு எழுதி வந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இயன் சின்கிளேர் என்ற ஆய்வாளர் ஒருவர் அக்கல்வெட்டில் ‘கேசரிவ’ என பொறிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்திருக்கிறார். இது ஆயிரமாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் தங்களது பெயருக்கு முன் அடைமொழியாக இராஜகேசரிவர்மன், பரகேசரிவர்மன் என்ற பட்டங்களை சூட்டிக்கொண்டதை காட்டுகிறது. கல்வெட்டு முழுவதுமாக கிடைக்காததால் யாருடைய காலத்து கல்வெட்டு என உறுதியாக கூறமுடியவில்லை என்றும் ஆய்வாளர் இயன் தெரிவித்திருக்கிறார். எனினும் இத்தனை ஆண்டுகளாக மர்மமாக இருந்த கல்வெட்டு தற்போது சோழர் கல்வெட்டு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வணிக/அரசியல் தொடர்பு இருந்திருக்கிறது என்பதனை அறிய முடிகிறது. ஏற்கனவே கம்போடியா, மலேசியா , இந்தோனேசியா போன்ற நாடுகளை இராஜேந்திர சோழன் வெற்றி பெற்றான் என்பதனை கல்வெட்டுகள் மூலம் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

vicky kannan

திராவிடம் – தமிழர்களைச் சீரழித்தது போதும்!

திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத் தலைவர்கள் பெயரில் அழைத்துக் கொள்கிறார்கள்.

திராவிடத்திற்கென்று என்றுமே தனித்துவமான தத்துவமோ, சித்தாந்தாமோ இருந்ததில்லை! அதில் கொஞ்சம் – இதில் கொஞ்சம் எடுத்துக் கொள்வார்கள். தமிழறிஞர்கள் முன்வைத்த தமிழ் இன – மொழி கருத்துகள், மேற்கத்திய நாத்திகவாதம், காங்கிரசார் – கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் கொள்கைகள் முதலியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் பஞ்சாமிர்தத் தத்துவம் பேசுவார்கள். “மாஸ்கோவுக்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன்; நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன்” என்று பேசினார் அண்ணா.

திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகளே, உங்கள் கழகங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குச் செய்த சாதனைகள் என்ன? உங்கள் திராவிடக் கட்சிகள் உருவாகவில்லை என்றால் தமிழர்கள் – உங்கள் பெரியார் சொன்னதுபோல் காட்டுமிராண்டிகளாக – நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்திருப்பார்களா? உங்களுக்கு அறைகூவல் (சவால்) விடுக்கிறோம். எந்தக் காலத்தில் – எந்த நூற்றாண்டில் தமிழர்களைவிட வட இந்தியர்கள் முன்னேறி இருந்தார்கள்? எதில் முன்னேறி இருந்தார்கள்?

எந்தக் காலத்தில் தமிழர்கள் பின்தங்கியிருந்தார்கள்?

கடந்த ஐயாயிரம் ஆண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டு விவாதிப்போம்! எந்தக் காலத்தில் உ.பி., ம.பி., பீகார், இராசஸ்தான்காரர்களை விடத் தமிழர்கள் எதில் பின் தங்கி இருந்தார்கள்? வங்காளிகளும், மராத்தியரும் தமிழர்களைவிட முன்னேறி இருந்தார்களா?

சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் நடந்த மன்னராட்சியில் தமிழர்கள்தாம், தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில், குறிப்பாக வணிகத்தில் – கல்வியில் – கலைகளில் முன்னேறி இருந்தனர். பூம்புகார், கொற்கை, முசிறி இவையெல்லாம் தமிழர் வணிகத்தின் பன்னாட்டுத் துறைமுகங்கள். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடப் போன தமிழன் கூடத் தன் பெயரை கோடரி போன்ற வேட்டைக் கருவிகளில் தமிழில் பொறித்து வைத்திருந்தான். தமிழ்நாட்டில் கல்வி அவ்வளவு வளர்ச்சி பெற்றிருந்தது என்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். (செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் பெயர் பொறித்திருந்ததைப் பார்த்த போது).

திராவிடத் தலைவர்கள் அவதாரம் எடுக்கவில்லையென்றால் தமிழர்கள் படித்திருக்க மாட்டார்கள்; மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்று தமிழ் இனத்தை ஏகடியம் பேசுகின்றீர்கள். ஆடுமாடு மேய்த்த தமிழனும், தமிழச்சியும் கல்வி கற்று விட்டுத்தான் அந்த வேலையைச் செய்தார்கள். படிக்காத காட்டுமிராண்டிச் சமூகத்தில்தான் 3,500 ஆண்டுகளுக்கு முன் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் எழுதப்பட்டனவா?

படிக்காத தமிழ்ச்சமூகம்தான் மூன்று தமிழ்ச் சங்கங்களை உருவாக்கி, அதில் புலவர்கள் படைப்புகளை அரங்கேற்ற வேண்டும் என்று ஏற்பாடு செய்ததா? எண்ணற்ற பெண்பாற் புலவர்களை உருவாக்கியதா?

படிக்காத காட்டுமிராண்டித் தமிழ்ச்சமூகம்தான் ஆதிச்சநல்லூர் – கீழடி – அரப்பா வரையிலான ஐயாயிரம் ஆண்டு நாகரிகச் சின்னங்களை வைத்திருக்கிறதா?

ஆங்கிலேய ஆட்சி வருவதற்கு முன்பே இரும்பு உருக்குத் தொழில் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்தது என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் வட இந்தியாவைவிட பெருளாதாரத்திலும் கல்வியிலும் தமிழ்நாடுதான் முன்னேறி இருந்தது.

இந்திய விடுதலைக்குப் பின் நடந்த காங்கிரசு ஆட்சியிலும், வட இந்திய மாநிலங்களை விடத் தமிழ்நாடுதான் கல்வியில் முன்னணியில் இருந்தது. படித்தோர் எண்ணிக்கை (Literacy Rate) வட இந்தியாவை விடத் தமிழ்நாட்டில்தான் அதிகம்!

மன்னராட்சியிலேயே 2,000 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டிய இனம் தமிழினம்! பொறியியல் துறையின் மிகப்பெரிய சாதனையாக 1,000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இனம் தமிழினம்! வெள்ளைக்காரன்தான் மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை போன்றவற்றைக் கட்டினான். பிறகு காங்கிரசு ஆட்சியில் பவானி சாகர் உள்ளிட்ட பல அணைகள் கட்டப்பட்டன.

பெரிய ரெயில்வே தொழிலகங்களைத் தமிழ்நாட்டில் வெள்ளைக்காரன் நிறுவினான். காங்கிரசு ஆட்சியில் ஆவடி, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., நெய்வேலி தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. திராவிட ஆட்சிகளும் வேறு சில திட்டங்களை நிறைவேற்றின. ஓர் ஆட்சியின் அடிப்படை அது!

பாழாய்க் கிடந்த – நாடோடிக் கும்பலைக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கல்வியைக் கொண்டு வந்தன; தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தன என்பன போன்ற கட்டுக்கதைகளை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள் – திராவிடச் சிற்பிகளே!

சுரண்ட வந்த வெள்ளைக்காரன்கூட ஆட்சி நிர்வாகம் அமைத்த பின், கல்வி – வேலை – தொழில் – வேளாண்மை – பொதுநலம் எனப் பல துறைகளில் பல முன்னேற்றங்களை உண்டாக்கினான். வெள்ளைக்காரனுக்கு மாறாக சோழர் – பாண்டியர் ஆட்சியின் நீட்சியாக சனநாயக மலர்ச்சி ஏற்பட்டு தமிழர் ஆட்சி தொடர்ந்திருந்தால், 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களை விட அதிக முன்னேற்றத்தைத் தமிழ்நாடு அடைந்திருக்கும்! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திரச்சோழன் வைத்திருந்த கப்பற்படைக்கு நிகராக உலகத்தில் எந்த ஆட்சியும் வைத்திருக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

இந்தியாவின் காலனி

அன்று இங்கிலாந்தின் காலனியாக இருந்தது தமிழ்நாடு; இன்று இந்தியாவின் காலனியாக இருக்கின்றது தமிழ்நாடு! இந்த வரையறுப்பை இன்றைக்கு சொல்ல தி.க. தயாரா? தி.மு.க. தயாரா? இந்திய ஏகாதிபத்தியக் காலனியத்தை எதிர்த்துப் போராடத் திட்டம் வெளியிடத் தயாரா? உங்கள் பெரியார்தான் சொன்னார், 1947 ஆகத்து விடுதலை தமிழ்நாட்டிற்கு இல்லையென்று! அப்படிச் சொன்னவர்தான் பின்னர், காங்கிரசுக்குக் காவடி தூக்கினார்.

தமிழ்நாடும் தமிழரும் அடிமையாய் உள்ளார்கள் – மெய்யான விடுதலை பெற வேண்டும் என்ற உண்மையை தொடக்கக் காலத்தில் சொன்னதால்தானே தி.க.வையும் தி.மு.க.வையும் தமிழர்கள் ஏற்றார்கள்; காங்கிரசைக் கைவிட்டார்கள். தனிநாடு பேசித்தானே தி.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டில் வளர்ந்தன. வளர்ந்த பின் தி.க.வும், தி.மு.க.வும் செய்ததென்ன? பச்சைத்துரோகம்! தமிழினத்துக்குத் துரோகம் செய்து, தில்லிக்குக் காவடி தூக்கின!

1954லிருந்து இந்திய ஏகாதிபத்தியக் கட்சியான காங்கிரசுக்கு பிரச்சார பீரங்கியானார் பெரியார். 1967இல் காங்கிரசு தோற்று தி.மு.க. தமிழ்நாடு ஆட்சியைப் பிடிக்கும் வரை காங்கிரசுக்கு – சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஓட்டுக் கேட்டு ஊர் ஊராகப் போனவர் பெரியார். “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தமது ஏட்டில் எழுதிக் கொள்வார் – அவ்வப்போது தமிழ்நாடு தனியாக வேண்டும் என்று கூறிக் கொள்வார் – ஆனால் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாக முழங்கி வருவார். அக்கட்சிக்கு ஓட்டு கேட்பார். எப்படிப்பட்ட “விடுதலை வீரர்” பெரியார்!

அண்ணாவை வீழ்த்துவதே பெரியாரின் நோக்கம்
யாரைத் தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? தி.மு.க.வைத் தோற்கடிக்க! திராவிட சித்தாந்தத்தின் சிறப்பே சிறப்பு! திராவிடச் சிந்தனைச் சிற்பிகள் சொல்லுவார்கள் – காமராசருக்காக – காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார் என்று! அதன் பொருள் என்ன? அண்ணாவைத் தோற்கடிக்கத் தானே காமராசருக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? என்னே திராவிடத் தந்தை, என்னே திராவிட மகன்! என்னே திராவிடத் தத்துவ ஆற்றல்!

தனிநபர் பகை அரசியல்

எப்போதுமே தனிநபர் பகைதான் திராவிட அரசியலில் முதன்மை வகிக்கும்! அண்ணாவையும், தி.மு.க.வையும் ஒழித்துக் கட்டுவதற்காக காங்கிரசை ஆதரித்தார் பெரியார். வேறென்ன?

அண்ணாவும் அவர் தம்பிகளும் தி.மு.க.விலிருந்து ஏன் பிரிந்தார்கள்? பெரியார் மணியம்மையாரை தம் 70 ஆம் அகவையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதுதான் தி.மு.க. பிரிந்ததற்கான முதன்மைக் காரணம்! இக்காரணத்தைத்தான் தி.மு.க.வினர் வெளியே சொன்னார்கள்.

கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட தனிநபர் பகையில் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. உருவானது. அ.தி.மு.க.வுக்கு செயலலிதா தலைமை உருவான பின் கருணாநிதிக்கும் அம்மையாருக்குமான தனிநபர் பகை அசிங்கமானது; அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டது.

கருணாநிதி முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் செயலலிதா சட்டப்பேரவைக்குப் போவதில்லை. தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக! அப்படி ஒரு நிகழ்வு 1989இல் நடந்தது. செயலலிதா முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் கருணாநிதி சட்டப்பேரவைக்குப் போவதில்லை. ஏன்? அ.இ.அ.தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்தி விடுவார்கள் என்று அஞ்சி அவர் போவதில்லை. திராவிடம் வளர்த்த பண்பைப் பாருங்கள் – நாகரிகத்தைப் பாருங்கள் – சனநாயகத்தைப் பாருங்கள்! “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” காக்கும் திராவிடப் பாரம்பரியத்தைப் பாருங்கள்!

சட்டப்பேரவையில் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக உட்கார முடியாத கேவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? தமிழ்நாட்டின் நாகரிகத்திற்கும் தமிழர்களின் பண்பிற்கும் கேடு உண்டாக்கிய கட்சிகள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்!

கருணாநிதிக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பகையினால்தான் ம.தி.மு.க. உருவானது. எந்தப் புதிய தத்துவத்திற்காக – இலட்சியத்திற்காக ம.தி.மு.க. உருவானது? எதுவுமில்லை!

வைகோ மீது கருணாநிதி சாட்டிய குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல. “விடுதலைப்புலிகளோடு சேர்ந்து கொண்டு வைகோ என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்” என்று கூறினார் கலைஞர். நடுவண் அரசின் உளவுத்துறை ஆதாரங்கள் இருக்கின்றன என்றார்.

கருணாநிதி இந்தக் கொலைக் குற்றச்சாட்டை தமது “பிதாமகர்” பெரியார் வழியைப் பின்பற்றித்தான் வைத்தார். திராவிடர் கழகத்தில் பிளவு உண்டானபோது அண்ணா தன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார் என்று, தமது ஏட்டில் பெரியார் எழுதினார். அண்ணா பெரியாரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்தத் தந்தையின் பாணியைத்தான் தனையன் கருணாநிதி பின்பற்றினார்! திராவிடத்தின் தந்தை மகன் பாசம் – அண்ணன் தம்பி பாசம், அடடா.. அடடா..!

ஏன் வந்தது திராவிடம்?

திராவிடக் கட்சி என்பது 1944-இல் பிறக்கும்போதே போலியாகப் பிறந்த கட்சி என்பதற்கு “திராவிடர் கழகம்” என்ற பெயரே சான்று!

தமிழர்களுக்காக மட்டுமின்றி, தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோருக்காகவும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கியவர் பெரியார். தமிழர் என்று சொன்னால், தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவேதான் “திராவிடர்” என்று சொல்கிறேன் என்றார் பெரியார். ஆனால், ஆந்திர – கர்நாடக – கேரள மாநிலங்களிலுள்ள தெலுங்கர் – கன்னடர் – மலையாளிகள் தங்கள் மண்ணில் திராவிடர் கழகத்தை ஏற்கவில்லை.

அந்த உண்மை தெரிந்த பின்னும் 1949இல் தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க.வை உருவாக்கியபோது, அண்ணாவும் மற்ற தலைவர்களும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களையும் இந்தியாவிலிருந்து விடுதலை செய்வதற்காகப் புதிய கழகம் உருவாக்கப்படுகிறது என்றார்கள். எவ்வளவு பெரிய பொய்!

தி.மு.க.வுக்கு மற்ற மூன்று மாநிலங்களில் தமிழர்களைத் தவிர பிறரிடம் கிளைகள் இல்லை; அத்துடன் அம்மாநிலங்களில் தனிநாட்டுக் கோரிக்கை எவராலும் வைக்கப்படவில்லை. உண்மையான தனிநாட்டு விடுதலை வீரர்களாக இருந்தால் – இப்படித் தொடர்பில்லாத மற்ற தேசிய இனங்களுக்கும் சேர்த்து விடுதலைக் கோரிக்கையை வைப்பார்களா? பிறக்கும்போதே போலித்தனம்! “நாங்கள் உண்மையான விடுதலை கோரவில்லை” என்று தில்லி ஏகாதிபத்தியத்திற்கு உணர்த்தும் உத்தி!

தி.க.வும் தி.மு.க.வும் தமிழர்களுக்குச் செய்த துரோகங்களின் சிகரம் எது? “தமிழர்” என்ற வரலாற்று வழிப்பட்ட நம் இனப்பெயரை நீக்கி நமக்கு “திராவிடர்” என்று புதிதாக ஒரு இனப்பெயரைச் சூட்டியதுதான் மன்னிக்க முடியாத துரோகம்! ஓர் இனத்தின் இயற்கையான பெயரை மாற்ற இவர்களுகளுக்கென்ன அதிகாரம் இருக்கிறது? அப்படித்தான் இவர்களுக்கென்ன வரலாற்று அறிவு இருந்தது? திராவிடம் என்பதற்கு சமற்கிருதச் சான்றுகளைத்தான் அண்ணா காட்டினார்.

அடுத்து, தமிழர் மானிடவியலைக் கற்காத – அரைகுறை தமிழ்ப் பண்டிதர் கால்டுவெல் “திராவிடர்” என்று கூறியதை சான்று காட்டினார்கள். “சாண் ஏறினால் முழம் சறுக்குபவர் கால்டுவெல்” என்றார் பாவாணர்.

திராவிடர் என்பதில் பிராமணர் இல்லையா?

“திராவிட“ என்பது ஆரியப் பிராமணர்கள் உருவாக்கிய சொல். வடக்கே இருந்து தெற்கே புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்கப் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சொல். இன்றைக்கும் பல பிராமண சங்கங்கள் “திராவிட” அடையாளத்தோடு செயல்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டு – புதூரு திராவிட பிராமண சங்கம், சவுத் கனரா திராவிட பிராமண சங்கம் (http://www.skdbassociation.com).

குசராத், மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்க “பஞ்சதிராவிடர்கள்” என்றார்கள். (பஞ்ச – ஐந்து. அப்போது மலையாள மொழி உருவாகவில்லை). வடக்கே கங்கைச் சமவெளி நோக்கி இமயமலைவரை சென்ற பிராமணர்களுக்கு “கௌட பிராமணர்கள்” என்று பெயர் சூட்டினர். தமிழர்களைக் குறிக்க “திராவிடர்” என்ற சொல்லை அவர்கள் உருவாக்கவில்லை.

கால்டுவெல் “திராவிட” என்ற சொல்லை மனுஸ்மிரிதி மற்றும் குமாரிலபட்டரின் “தந்த்ர வார்த்திகா” ஆகிய சமற்கிருத நூல்களிலிருந்து எடுத்ததாகக் குறிப்பிடுகிறார் (திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்). சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்திக்கால இலக்கியம், சித்தர் இலக்கியம் எதிலும் தமிழில் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.

தமிழர் இன அடையாளத்தை மறைப்பதற்காகத் திட்டமிட்டு பெரியாரால் பரப்பப்பட்ட சொல் திராவிடம். “தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ப் படிக்காதீர்கள்; ஆங்கிலத்தைப் படியுங்கள், வீட்டில் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள்” என்று 1968 – 1969 இல் கூட திரும்பத் திரும்ப எழுதியவர், பேசியவர் பெரியார்.

தமிழ் இனத்தின் மீது – தமிழ் மொழி மீது அவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி ஏற்படும்படி தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? பெரியாருக்கு என்ன அநீதி இழைத்தார்கள்?

பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதற்காக அவரைத் தமிழர்கள் அயலாராகக் கருதவில்லை. நாம் பெரியாரை விமர்சிப்பது, அவர் அயல் இனத்தார் என்ற பொருளில் அன்று! சம உரிமையுள்ள தமிழ்நாட்டு மண்ணின் மகன் பெரியார் என்ற புரிதல்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வழியில் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து வரும் தெலுங்கு – கன்னடம் – சௌராட்டிரம் – உருது – மராத்தி போன்ற மொழிகள் பேசும் அனைவரையும் சம உரிமையுள்ள மண்ணின் மக்களாகவே நாங்கள் வரையறுக்கிறோம். ஆனால், பெரியாருக்குத்தான் தன் இனம் குறித்து ஏதோவொரு ஐயுறவு ஏற்பட்டு “தமிழர்” என்ற இனப்பெயரை நீக்கி, “திராவிடர்” என்ற ஆரியப்பெயரைத் திணித்தார்.

“திராவிடர்” என்று சொன்னால் அதில் பிராமணர்கள் சேர மாட்டார்கள் என்று ஒரு கட்டுக்கதையை பெரியார் உருவாக்கினார். தி.மு.க.வில் பிராமணர்கள் பலர் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு கன்னடப் பிராமணப் பெண் தலைவி ஆனார். அந்த செயலலிதாவுக்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார் ஆசிரியர் வீரமணி.

பிராமணிய எதிர்ப்பு மரபு

சங்க காலத்திலிருந்து பிராமணியத்தை எதிர்த்து வரும் இனம் தமிழினம். ஆரியர்களை அடக்கி அவர்கள் தலையில் கல்லை ஏற்றி வந்த தமிழன் கதை கூறும் நூல் சிலப்பதிகாரம். பக்திக்காலம் – சித்தர்கள் காலம் தொட்டு வள்ளலார் காலம் – மறைமலையடிகள் காலம் வரை பிராமணிய எதிர்ப்பும், சமற்கிருத எதிர்ப்பும் தமிழினத்தின் குருதியில் கலந்தது. தமிழினத்திற்கு மரபு வழியில் ஆரிய – பிராமணிய எதிர்ப்பு தொடர்ந்து இருந்துவந்த காரணத்தால்தான், பெரியாரின் பிராமண ஆதிக்க எதிர்ப்பு இங்கு மக்களைத் திரட்டித் தந்தது.

தமிழ்நாட்டில் வெகுமக்கள் ஆதரவோடு நடந்த பிராமணிய எதிர்ப்புப் போராட்டம் போல் இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநிலத்தில் நடந்தது? அந்த மாநிலங்களிலெல்லாம் வர்ணாசிரம தர்மம் இல்லையா? பிராமண ஆதிக்கம் இல்லையா? ஏகலைவன் கட்டை விரல் வாங்கிய கதை, தவமிருந்த சம்பூகன் தலை வெட்டிய கதை எல்லாம் வடநாட்டில்தானே நடந்தது! ஏன் அம்மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல் பிராமண எதிர்ப்பு வெகுமக்கள் ஆதரவைப் பெறவில்லை?

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் 2,500 ஆண்டுகளுக்கு மேல் மனித சமத்துவம் பேசி வரும் இனம் – தமிழினம்! ஆரியத்தின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துவரும் இனம் – தமிழினம்!

“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால், போர் கொண்ட மன்னர்க்கு பொல்லாத நோயாம்” என்று திருமூலர் பாடினார். அவரேதான் “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்றார். ”வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்! வேதாகமங்களின் விளைவறியீர்! சூதாகச் சொன்னவலால், உண்மைநிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார். பல தெய்வ சிலை வணக்கத்தை மறுத்து, அனைவருக்கும் பொதுவான ஒளி வணக்கத்தை அறிமுகப்படுத்தினார். சாதி – மதம், ஆண் – பெண் வேறுபாடின்றி அனைவரும் உறுப்பு வகிக்கக் கூடிய “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்ற பொதுநிலைக் கழகத்தை 1865இல் தொடங்கி நடத்தியவர் வள்ளலார். இது எங்கள் மரபு!

இந்த மரபு பெரியாருக்கு வாய்ப்பளித்தது. பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். அதற்கு நன்றி பாராட்டுகிறோம்! அதற்காக, எங்கள் இனத்தின் பெயரை நீக்குவதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்கள் தாய்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றும், எங்கள் இனத்திற்கு நாகரிக வரலாறு இல்லை என்றும், எங்கள் இனத்தில் சரியான அறிவாளி யாருமே இல்லை என்றும் பேசி தமிழினத்தை இழிவுபடுத்தியதைத் தமிழர்கள் சகித்துக் கொள்ள வேண்டுமா? தமிழை “நீச பாஷை” என்றார்கள் பிராமணர்கள்; தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். இவருடைய பிராமண எதிர்ப்பு, பாதிக் கிணறு தாண்டுவதாக இருக்கிறதே!

திராவிடத்துக்குப் புத்துயிரூட்டப் புறப்பட்டிருக்கும் சிந்தனைச் சிற்பிகளே, அதற்காகத் தமிழ்த்தேசியத்தைத் தாக்காதீர்கள். தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்தாதீர்கள். தமிழர்களாகப் பிறந்த நீங்கள் தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்துவது, கொச்சைப்படுத்துவது நீங்கள் குடித்த தாய்ப்பாலுக்குத் துரோகம் செய்வது போன்ற வேலை! “மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுக்க வேண்டும்” என்று கொடுமைக்கார மாமனார் – மாமியார் நினைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அப்படி, தமிழ்த்தேசியத்தை அழிப்பதற்காக நீங்கள் பிறந்த தமிழினத்திற்கு துரோகம் செய்யாதீர்கள்.

இனப்பெயர் நாமாகத் தேர்வுசெய்வதன்று. வரலாற்று வழியில் – மரபு வழியில் இயற்கையாக உருவாவது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் நம் இனப்பெயர் தமிழர் தான். இன்றும் நம் தேசிய இனப்பெயர் தமிழர்தான். மரபு இனப்பெயரும் (Race) தேசிய இனப்பெயரும் (Nationality) ஒன்றாக இருப்பது உலகத்தில் சில இனங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதில் மூத்த இனம் தமிழினம்! அந்தப் பெயரை “திராவிடர்” என மாற்றிப் பிறந்த இனத்துக்குத் துரோகம் செய்யாதீர்கள்.

கொள்ளுப்பேரன் தலைமைதான் திராவிட விசுவாசமா?

திராவிடச் சிந்தனைச் சிற்பிகளே, கருணாநிதி தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் மகன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் பேரன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அதன் பின் கலைஞரின் கொள்ளுப்பேரன் தலைமையை ஏற்றுக்கொள்வதுதான் “திராவிட விசுவாசம்” என்று கருத்தியல் உருவாக்கி – இனப்பற்றை “கலைஞர் வாரிசுகள் பற்று” என்று கொச்சைப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

தமிழ் இழப்பு – உரிமைகள் பறிப்பு

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகாலத் திராவிட ஆட்சி தமிழ்மொழிக் கல்வியே இல்லாத நிலையை உருவாக்கும் திசைநோக்கிச் செல்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை; தனியார் பள்ளிகளில் தமிழ் இல்லை. அண்டை மாநிலங்களில் இப்படியான நிலை இல்லை. கேரளத்தைப் பாருங்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பி இருக்கிறார்கள்; மலையாளம் கற்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகாலத் திராவிட ஆட்சியில்தான் கச்சதீவை இழந்தோம்; கடலில் மீன்பிடி உரிமை இழந்தோம்; காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகிய ஆறுகளை இழந்தோம். கல்வி உரிமை மாநிலத்திடமிருந்து நடுவண் அதிகாரத்திற்கு போனது. மாநில அரசு வணிக வரி வசூலிக்கும் உரிமையை இழந்தோம். ஜி.எஸ்.டி வந்தது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது. தில்லியின் நீட் தேர்வு வந்தது.

ஐட்ரோகார்பன் வந்து வேளாண் நிலங்களை அழிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மனித உயிர்களைப் பறிக்கிறது. அடுக்கடுக்காய் அணு உலைகள், நியூட்ரினோ ஆலை, எட்டுவழிச் சாலை, வேளாண் நிலங்களின் குறுக்கே கெயில் குழாய்கள், உயர் மின் அழுத்த கோபுரங்கள் – எத்தனை சீரழிவுகள்; எத்தனை வகையில் வாழ்வுரிமைப் பறிப்புகள்!

வெளி மாநிலத்தார் குவிப்பு

தமிழர்களுக்கான தாயகமாகத் தமிழ்நாடு இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்ற பேரச்சம் ஏற்பட்டுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளமென இந்திக்காரர்கள் கூட்டம் – வெளி மாநிலத்தார் கும்பல்! தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில், அலுவலகங்களில் இந்திக்காரர்களையும் வெளி மாநிலத்தவர்களையும் மிக அதிக அளவில் வேலையில் சேர்கிறார்கள். சொந்தத் தாயகத்திலேயே தமிழர்களுக்கு எதிராக இன ஒதுக்கல் கொள்கையை இந்திய அரசு செயல்படுத்துகிறது.

மேற்கண்ட அத்தனை உரிமைப் பறிப்புகளையும் தாயகப் பறிப்புகளையும் செய்யும் காங்கிரசு, பா.ச.க.வுடன்தான் திராவிடக் கட்சிகள் எப்போதும் கூட்டணி!

திராவிட அரசியல் என்பது இரண்டு சக்கரங்கள் மீது இயங்குகிறது. ஒரு சக்கரம் – தலைவர்கள் ஆதாயம், இன்னொரு சக்கரம் திராவிடத் தலைவர்களிடையே பகை! பயணம் முழுவதும் ஊழலோ – ஊழல்!

தமிழ்த்தேசியர்களே,

தேர்தல் என்பது ஒரு சனநாயக வழிமுறை! அதேவேளை, அதற்கான எல்லைகளை இந்திய அரசு வரையறுத்து வைத்துள்ளது. தேர்தல் மூலம் – தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுவிடலாம் என்று எண்ணாதீர்கள்! அவ்வளவு எளிதாக இந்திய ஏகாதிபத்தியம் – தான் பறித்த உரிமைகளை விட்டுக் கொடுக்காது. இந்திய ஏகாதிபத்தியத்தின் இருபெரும் கட்சிகள் பா.ச.க.வும் காங்கிரசும்! இவை “பாரதமாதா”வின் பிள்ளைகள்; தமிழன்னையின் பகைவர்கள்.

தமிழ்த்தேசிய உரிமைகள் மீட்பு – கோடிக்கணக்கான தமிழர்களின் எழுச்சியில்தான் கைகூடும்! அதற்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன, இழந்த உரிமைகள் எவை, அவற்றை எப்படி மீட்பது, அதற்கான வெகுமக்கள் போராட்ட உத்திகள் யாவை என்பவற்றையெல்லாம் தலைவர்களும், முன்னணிச் செயல்பாட்டாளர்களும் கற்றறிய வேண்டும். அவற்றை மக்களின் குரலாக மாற்ற வேண்டும்.

தத்துவம், அரசியல், பொருளியல், பண்பியல், சூழலியல் என அனைத்துத் துறையிலும் தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டங்கள், வெகுமக்கள் போராட்டங்களாக – சனநாயகப் போராட்டங்களாக வீச்சுப் பெற வேண்டும்!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
*பேச*: 7667077075, 9443918095
*முகநூல்* : http://www.fb.com/tamizhdesiyam
*ஊடகம்* : http://www.kannottam.com
*இணையம்* : http://www.tamizhdesiyam.com
*சுட்டுரை* : http://www.twitter.com/Tamizhdesiyam
*காணொலிகள்* : youtube.com/Tamizhdesiyam
=====================================